2023 மார்ச் 2 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 1,4 முதல் 15 வரை )
- March 2
“யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்” (வசனம் 3).
நம்முடைய தேவன் எல்லாம் அறிந்த இறையாண்மையுள்ள தேவன். அவர் சகலத்தையும் தம்முடைய நீதியின்படி செய்கிறவர். இஸ்ரயேலர்கள் கானானின் பூர்வீகக் குடிகளை முறியடித்து, தங்களுடைய சுதந்தரத்தைப் பெருக்கிக்கொள்வதற்கு கர்த்தர் துணை புரிந்தார் என்பது உண்மையாயினும், மற்றொரு வகையில் அது அவர்களுக்கு வந்த நியாயத்தீர்ப்பாகவும் இருந்தது. “உன் நீதியினிமித்தமும், உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும் … உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். … நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்” (உபா கமம் 9,4 முதல் 6) என்று கர்த்தர் முன்னரே கூறிவிட்டார். “நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார்” (வசனம் 7) என்று அதோனிபேசேக் என்னும் கானானின் கொடுங்கோல் மன்னன் தனக்கு நேரிட்ட தண்டனையின் கொடூரத்தை நினைத்துச் சொல்கிறதைக் கேட்கிறோம். “தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்” (ரோமர் 11,22) என்று புறஇன மக்களால் ஆன சபையைப் பார்த்து பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான். ஆகவே நாம் தேவனிடத்தில் பெற்ற தயவில் நிலைத்திருப்போம்.
யூதா கோத்திரத்தாரின் படை ஒவ்வொரு வெற்றியாகப் பெற்று முன்னேறிச் சென்றது. அவர்கள் பழைமை வாய்ந்த எருசலேம் என்னும் சமாதானத்தின் நகரைக் கைப்பற்றினார்கள். பின்பு ஐக்கியத்தின் நகராகிய எபிரோனைக் கைப்பற்றினார்கள். இந்த எபிரோனின் பழைய பெயர் கீரியாத் அர்பா. இதற்கு இராட்சதர்களின் நகரம் என்று பொருள். அவர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிற ஆனாகின் சந்ததியினராகிய சேசாய், அகீமான், தல்மாய் என்னும் இராட்சதர்களை வெட்டிப்போட்டார்கள். நம்முடைய வாழ்க்கையில் ஐக்கியத்தை அனுபவிக்க வேண்டுமாயின், நம்முடைய வாழ்க்கை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிற அல்லது கட்டுப்படுத்தி வைத்திருக்கிற உலகம், மாம்சம், பிசாசு என்னும் முப்பெரும் எதிரிகளான இராட்சதர்களை வெற்றி கொள்ள வேண்டும்.
யூதா கோத்திரத்தாரின் அடுத்த இலக்கு தெபிரீன் குடிகள் வாழ்ந்த கீரியாத்செப்பேர். கீரியாத்செப்பேர் என்றால் “புத்தகங்களின் நகரம்” என்று பொருள். இது ஒருவேளை கானானியர்களின் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் கல்வி நகரமாக இருந்திருக்கலாம். காலேபின் அறைகூவலை ஏற்று ஒத்னியேல் (சிங்கம் அல்லது தேவபெலன்) இந்நகரைக் கைப்பற்றினான். வேத புத்தகத்தின் மக்களாகிய நாம், உலக ஞானம் கொண்ட புத்தகங்களின் மக்களை வெற்றி கொள்ள வேண்டும். “சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிறவர்களுக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது” என்று பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 1,18 மற்றும் 20). உலகத்தின் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் சிலுவையின் செய்தியின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கிற பைத்தியமானவர்களாகிய நம்மைத் தெரிந்துகொண்டிருக்கிறார். சிலுவையின் செய்தியை மையக்கருத்தாகக் கொண்டிருக்கிற வேதப் புத்தகத்தை கற்றுக்கொள்வது நம்முடைய மனமகிழ்ச்சிக்குரிய காரியமாக இருக்கட்டும்.