2023 மார்ச் 3 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 1,16 முதல் 36 வரை)
- March 3
“பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு இரதங்கள் இருந்தபடியினால் அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று” (வசனம் 19).
கானானின்மீது இஸ்ரயேலரின் வெற்றி என்பது முழுமையானதாக இருக்கவில்லை என்ற செய்தியை நியாயாதிபதிகளின் புத்தகம் அறியத் தருகிறது. அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளை முழுமையாகத் தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பு இஸ்ரவேலருக்கு இருந்தும், தங்களுடைய தேவைக்காக அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும்படியாக அவர்களோடு சமரசப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். சில இடங்களில் அவர்களோடு சமாதான உடன்படிக்கையும் பண்ணிக்கொண்டார்கள். இதுவே அவர்களுடைய வீழ்ச்சியின் தொடக்கமாகவும் மாறியது. காலேப் போன்ற தேவபக்தியுள்ள தலைவர்களும், யோசுவாவின் தாக்கத்தைப் பெற்றிருந்த மூப்பர்களும் இருந்தவரை வெற்றியின் வாழ்க்கை தொடர்ந்தது. கர்த்தர் இஸ்ரயேல் மக்களோடு இருந்தவரை கானானியர் வெளியே இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் கானானியர் அவர்களுக்குள் நுழைந்தார்கள். கர்த்தர் அவர்களைவிட்டு வெளியே இருந்தார். இதுவே சீர்கேட்டின் தொடக்கம். கர்த்தர் அவர்களோடு இருந்தவரை வெற்றி மேல் வெற்றி அடைந்தார்கள். ஆனால் எதிரிகளின் இருப்பு இரதங்களைக் கண்டு பயந்தபோது, அவர்கள் தோல்வியைச் சந்தித்தார்கள்.
வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்தமாக நடைபெறவில்லை. மாறாக, ஒவ்வொரு கோத்திரத்தாரும் எதிரிகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அது நிகழ்ந்தது. அதாவது தனித்தனியாக ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுடைய வெற்றியையோ அல்லது தோல்வியையோ நிர்ணயிக்க முடியும். அவ்வாறே நாடு முழுவதுக்கும் பிரதிபலித்தது. திருச்சபையிலும் ஏற்படுகிற பொதுவான வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது தனிப்பட்ட ஒவ்வொரு விசுவாசியினுடைய ஆவிக்குரிய வெற்றியையோ அல்லது வீழ்ச்சியையோ சார்ந்ததாகும். ஓர் உள்ளூர் சபையின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட ஒவ்வொரு விசுவாசிக்கும் பொறுப்பு உள்ளது. இந்தப் பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றுகிறோமா என்பதை நிதானித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இவ்வாறுதான் சம்பவிக்கிறது. நம்மை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புவிக்கும்போது வெற்றி கிடைக்கிறது. அதாவது கிறிஸ்துவுக்கு அடிபணிவதில் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ளக்கூடாது. அதாவது நம்மை ஆட்கொள்ளும் எவ்விதத் தீய காரியங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், பாவங்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்பதே இதன் பொருள். “பாவத்துக்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” என்று எபிரெயர் நிருப ஆக்கியோன் நம்மை வியப்புடன் பார்க்கிறார் (எபிரெயர் 12,4). நாம் எத்தனை முறை இந்தச் சண்டையைக் கைவிட்டு சமாதானக் கொடியைக் காட்டியிருக்கிறோம்! நமக்குள் இருக்கும் வலிமையான பழைய ஆதாமுக்குப் பயந்து எத்தனை முறை புறமுதுகிட்டு ஓடியிருக்கிறோம்! பாவம் நம்முடைய சரீரத்தில் ஆளுகை செய்ய எத்தனை முறை இடம் கொடுத்திருக்கிறோம்! இவைபோன்ற காரணங்களினிமித்தம் நாம் ஒருபோதும் அடிபணிய வேண்டாம். யூதா கோத்திரத்துச் சிங்கம் நம்மைக் கட்டியிருக்கும் ஒவ்வொரு சங்கிலியையும் உடைத்து எறிவார். அவர் மீதுள்ள நம்பிக்கையால் நாம் வெற்றியாளர்களாக வலம் வர முடியும். பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, பாவத்தின் ஆளுகையிலிருந்து நாம் விடுபடுவோம்.