2023 மார்ச் 1 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 1,1 முதல் 3 வரை)
- March 1
“யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண … என்னோடேகூட எழுந்துவா என்றான்” (வசனம் 3).
தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபடியே இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்கு வந்துவிட்டார்கள். யோசுவா அவர்களுக்குத் தேசத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டான். ஒவ்வொரு கோத்திரத்தாரும் அவரவர்களுக்குரிய சுதந்தரவீதத்தைப் பெற்றுவிட்டார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அந்த நாட்டை முழுமையாகச் சுதந்தரிக்கவில்லை என்பதை நியாயாதிபதிகள் புத்தகம் நமக்குத் தெரிவிக்கிறது. விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை வளப்படுத்துவற்குத் தேவையான அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கிறிஸ்துவுக்குள் பெற்றிருக்கிறார்கள் (எபேசியர் 1,3). ஆனால் நாம் அவற்றை விசுவாசத்துடன் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். துரதிஷ்டவசமாக, இஸ்ரயேல் மக்களைப் போலவே நாமும் ஆவிக்குரிய ஏழைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
யோசுவா தனக்குப் பின் எந்தவொரு தனிப்பட்ட தலைவரையும் ஏற்படுத்திவிட்டுச் செல்லவில்லை. இஸ்ரவேல் புத்திரர், கர்த்தரை நோக்கி, கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி எங்களில் யார் முதல் முதல் புறப்பட வேண்டும் என்று கேட்டபோது, யூதா என்று அவரிடமிருந்து பதில் வந்தது (வசனம் 1,2). அந்த நாட்டின் ஆளுகை தன்னுடைய கரத்தில் இருக்க வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம். பிற நாடுகளைப் போல தங்களுக்கு ஒரு தலைவராக இருந்து வழிநடத்த ஓர் அரசன் வேண்டும் என மக்கள் கேட்டபோது, “நான் அவர்களை ஆளாதபடிக்கு அவர்கள் என்னைத் தள்ளினார்கள்” (1 சாமுவேல் 8,7) என்று கர்த்தர் அங்கலாய்த்தார். இதுவே தேவ ஏற்பாடு. ஓர் உள்ளூர் சபையின் தேவையை அறிந்து அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆவியானவர் கண்காணிகளை ஏற்படுத்துகிறார். நம்முடைய ஆவிக்குரிய சுதந்தரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆவிக்குரிய போரிலும் இவ்வாறே நாம் கர்த்தரைச் சார்ந்துகொள்ள வேண்டும். கர்த்தர் யூதாவைத் தெரிந்துகொண்டதற்கான காரணம் என்ன? இதைக் கண்டு பிடிக்க நாம் யாக்கோபின் இறுதி வார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டும். “யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே, உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்” (ஆதியாகமம் 49,8) என்று சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய ஆவிக்குரிய வெற்றியும் யூதா கோத்திரத்துச் சிங்கமாகிய ஆண்டவரைச் சார்ந்தே இருக்கிறது.
யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனை துணைக்கு அழைத்தான் (வசனம் 3). ஏனெனில் சிமியோனின் கோத்திரம் யூதா கோத்திரத்துக்குள் இருந்தது. ஆண்டவர் நம்மை முன்னே அனுப்பும்போது சகோதரர்களின் ஜெபம் அவசியம். வெற்றிக்கு சகோதர ஐக்கியம் இன்றியமையாதது. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் பிரிவினை உண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக் குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படியே தேவன் அவற்றை அமைத்திருக்கிறார் (காண்க. 1 கொரிந்தியர் 12,25). தேவனே நமக்கு எல்லாவற்றையும் தருகிறார், அவரிடமிருந்தே ஒத்தாசை வருகிறது; என்றாலும் அந்த உதவிகள் சகோதரர்கள் மூலமாகவும் வருகிறது. எனவே அவர்களுடைய ஒத்தாசையை ஒருபோதும் அற்பமாய் எண்ணிவிடக்கூடாது. யூதாவும் சிமியோனும் சகோதரர்கள். யூதா என்றால் துதி, சிமியோன் என்றால் ஜெபம் (ஆதியாகமம் 29,33 மற்றும் 35). நம்முடைய வாழ்க்கையிலும் துதியை மையமாகக் கொண்ட ஜெபம் இருக்குமானால் நாம் எதிர்கொள்கிற எல்லாப் பிரச்சினைகளிலும் வெற்றியை உரித்தாக்கிக்கொள்வோம்.