November

பின்மாற்றத்தின் விளைவுகள்

2023 நவம்பர் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 21,7 முதல் 9 வரை)

  • November 19
❚❚

“சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்” (வசனம் 7).

அன்றையத் தினம் சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு அங்கு இருந்தது தாவீது எதிர்பாராத ஒன்றுதான். தாவீது யாருக்கு தெரியாமல் ஒளிந்துகொள்ள வேண்டும் என்று வந்தானோ அது நிறைவேறவில்லை. பின்மாற்றமுள்ள ஓர் ஆத்துமா செய்கிற காரியங்களும் இவ்வாறாகவே காரியங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தோவேக்கு ஏதோ ஒரு காரியத்துக்காக கர்த்தருடைய சித்தத்தையோ அல்லது கர்த்தருடைய ஆலோசனையை நாடியோ வந்திருக்கலாம். இவன் ஓர் ஏதோமியன், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட கோத்திரத்தைச் சார்ந்தவன் அல்லன். ஆயினும் அவன் கர்த்தருடைய கூடாரத்தில் இருக்கும்படி அவரால் தடைபண்ணப்பட்டிருந்தான். அதாவது அவன் கேட்ட ஆலோசனையையோ அல்லது சித்தத்தையோ கர்த்தர் ஆசாரியன் மூலமாக அன்றைக்கு வெளிப்படுத்தாமல், சற்றுத் தாமதம் பண்ணு என்று அவனால் சொல்லப்பட்டு அவன் அங்கே தங்கியிருக்கிறான். அவன் கர்த்தருடைய சித்தத்துக்காகக் காத்திருக்கிறான் அல்லது கர்த்தரால் போகாதபடி தடைசெய்யப்பட்டிருக்கிறான். இந்த இடத்தில் தேவனால் அபிஷேகம்செய்யப்பட்ட தாவீது எவ்வளவு அவசரமாகவும், நிதானமின்றியும் காணப்படுகிறான் என்பது வியப்பாக இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் கர்த்தருடைய மக்களாகிய நம்மைக் காட்டிலும் ஞானமுள்ளவர்களாக நடந்துகொள்கிறார்கள் என்று புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். பல தருணங்களில் இந்த உலகத்தாரைக் கொண்டும், நாம் எதிர்பாராத நேரத்தில் கர்த்தர் நம்மோடு பேசுகிறார். கர்த்தர் காரியங்களையும் காலங்களையும் ஒருங்கிணைக்கிறார். தோவேக்கு அங்கு இருந்தது, தாவீதுக்கு எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது கர்த்தருடைய இறையாண்மையின் திட்டத்தில் அமைந்த ஒன்றே ஆகும். தாவீதைப் போலவே நாமும் நம்முடைய சொந்த பெலத்தின்மீதும், சொந்த ஞானத்தின்மீதும் சார்ந்துகொள்வது நமக்கு ஆபத்தானதாகவே முடியும். “ஒரு பரிசுத்தவான் பின்மாற்ற நிலையில் இருக்கும்போது ஓர் உலக மனிதனைக் காட்டிலும் மதியீனமாகச் செயல்படுகிறான்” என்று திருவாளர் ஆர்தர் பிங்க் கூறுகிறார்.

அடுத்ததாக, தாவீது அகிமெலேக்கிடம் ஆயுதம் ஒன்றைக் கேட்டான்.  “கோலியாத்தின்பட்டயம்” மட்டுமே உள்ளது என்றான் அவன். இது இஸ்ரவேலருக்குக் கர்த்தர் கொடுத்த வெற்றியின் நினைவுச்சின்னமாக அவருடைய கூடாரத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. இதைக் குறித்து தாவீது, “அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும்” என்றான். ஐயோ, வலிமைமிக்கவன் எப்படி விழுந்துபோனான் என்று பாருங்கள். இந்தப் பட்டயத்துக்குச் சொந்தக்காரனாகிய கோலியாத்தை ஒரேயொரு கூழாங்கல்லால் கொன்று போட்டவன், இப்பொழுது எப்படிப் பேசுகிறான் என்று பாருங்கள். அன்றைக்குக் கர்த்தருடைய நாமத்தில் வெற்றி பெறுவேன் என்று சொன்னவனுக்கு, கர்த்தரை நிந்தித்தவனின் பட்டயம் எப்படிச் சிறந்ததாக ஆகமுடியும். ஒரு பின்மாற்றக்காரனின், கர்த்தர்மீது நம்பிக்கை இழந்தவனின் வார்த்தைகள் இவை. “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1 கொரிந்தியர் 10,12) என்று பவுல் கொரிந்து சபையாரை எச்சரிக்கிறார். ஆகவே நாமும் உணர்வுள்ளவர்களாகவும் கருத்துள்ளவர்களாகவும் கர்த்தரில் நிலைத்திருப்போம்.