November

நொறுங்குண்ட இருதயம்

2023 நவம்பர் 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 21,3 முதல் 6 வரை)

  • November 18
❚❚

“இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான்” (வசனம் 3).

தாவீது அகிமெலேக்கை கர்த்தருடைய கூடாரத்தில் சந்தித்த நாள் ஓய்வு நாள். “அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்” (லேவியராகமம் 24,8) என்ற கட்டளையின்படி, அப்பொழுதுதான் பழைய அப்பங்கள் எடுக்கப்பட்டு புதிய அப்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தாவீது பசியோடும் களைப்போடும் இருந்தான். ஆகவே உண்பதற்காக உம் கையில் என்ன இருக்கிறதோ அதைக் கொடும் என்று கேட்டான். அகிமெலேக்கு நிபந்தனைகளோடு கர்த்தருடைய சந்நிதியில் இருந்து எடுக்கப்பட்ட அப்பங்களைக் கொடுத்தான். சில நேரங்களில் மனிதருடைய அத்தியாவசியத் தேவையினிமித்தமும் இரக்கத்தினிமித்தமும் கட்டளைகளுக்கு அப்பாற்பட்டு காரியங்கள் நடைபெறுகின்றதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆகவே நாமும் பிரச்சினைகளைச் சந்திக்கும் முன் நம்முடைய பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவிடம் செல்லுவோம். அவர் நம்முடைய பெலவீனங்களைப் புரிந்துகொண்டவராக இருப்பது மட்டுமின்றி, அவர் சமூகத்தில் நாம் எப்பொழுதும் சென்றாலும் நம்முடைய ஆவிக்குரிய உணவைத் தருகிறவராகவும் இருக்கிறார்.

இந்த நிகழ்வை நம்முடைய ஆண்டவர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியதைக் காண்கிறோம். “அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” (மாற்கு 2,25 முதல் 26). இங்கே தாவீது ஆபத்தில் இருந்தான் என்று கூறுகிறார். கர்த்தருடைய கட்டளை மனிதரைக் காப்பாற்றுவதற்கேயன்றி அழிப்பதற்கு அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தாவீது தனியாகத்தான் வந்தான். ஆயினும் தன்னோடு வாலிபர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூறினான் (வசனம் 5). தாவீதின் பேச்சு மதிப்புக்குரியவை அல்லவைதான், ஆயினும், தன்னுடைய தவறுகளின் ஊடாக தேவகிருபையை அதிகமாகப் பெற்றுக்கொண்டான். தான் கூறியது பொய்என்று ஒத்துக்கொண்டான். ஆகவே இந்தச் சம்பவம் நடந்த பிறகு அவனால் எழுதப்பட்ட 34 ஆம் சங்கீதத்தில், “உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டு வசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்” (வசனம் 13) என்று நம்மைப் பார்த்துக் கூறுகிறான்.

நாமும் யாரையும் தோற்றத்தின்படி தீர்ப்புச் செய்ய வேண்டாம். பரந்த மனப்பான்மையோடும் பகுத்தறிவோடும் ஒருவரைப் பார்க்க வேண்டியது இருக்கிறது. எல்லாத் தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் இந்தப் பார்வை நமக்கு அவசியமாக இருக்கிறது. தாவீது சொன்ன பொய்யைத் தேவன் கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா? இல்லை. அதற்கேற்ற பலனை அனுபவிக்கப்போகிறவன் தாவீது மட்டுமே. பின்னாட்களில் தாவீது தன்னுடைய பாவங்களுக்காக கர்த்தரிடத்தில் மனதுருகி, அழுது புலம்பினதை அவனுடைய சங்கீதங்களில் வாசிக்கிறோம். தாவீது அதை உணர்ந்தான், மன்னிப்புக்கேட்டான், கர்த்தர் அவனை மன்னித்தார். அந்த சங்கீதத்தின் இறுதியில், “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங்கீதம் 34,18) என்று கூறுகிறான். ஆகவே நாமும் எப்பொழுதும் தேவசமூகத்தில் நம்மைத் தாழ்த்துவதற்கு ஆயத்தமாயிருப்போம்.