2023 மே 14 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,20 முதல் 21 வரை)
- May 14
“கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்” (வசனம் 20).
சிம்சோன் தன் முடியோடு சேர்ந்து தன் ஆற்றலையும் இழந்தான். அவன் தன்னுடைய சக்தியை மட்டும் இழக்கவில்லை, இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரிக்கும் திறனையும் இழந்தான். கர்த்தர் அவனை இந்த உலகத்தில் பிறக்கச் செய்த நோக்கத்தையும் இழந்துவிட்டான். ஒரு தனி மனிதனின் தோல்வி, ஒரு நாட்டுக்கான இழப்பாக ஆகிவிட்டது. மிகப் பெரிய கனவுகளோடு தன் வாழ்க்கையைத் துவங்கினான். ஆனால் அவனுடைய வாழ்க்கை நிறைவேறாத கனவாகிப்போனது. ஆயினும், “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்” (வசனம் 20). தான் முன்பு செய்த காரியங்களைச் செய்த அனைத்துக் காரியங்களையும் செய்ய முடியும் என்று நினைத்தது துரதிஷ்டவசமே. ஆம், தன் பெலன் தன்னை விட்டுப் போய்விட்டது என்பதையும் தன்னால் முன்பு போல் செயல்பட முடியாது என்பதையும் அவன் உணராமற்போனான். பல நேரங்களில் நாமும் வெளித்தோற்றத்தில், மாம்சத்தின்படியான பல காரியங்களை கர்த்தருடைய ஒத்துழைப்பு இல்லாமல் செய்கிறோம், தோல்விக்குப் பின் அங்கலாய்க்கிறோம்.
பெலிஸ்தியர் காமின் சந்ததியில் தோன்றிய மிஸ்ராயீம் வழியில் வந்தவர்கள் (ஆதியாகமம் 10,13 முதல் 14). எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்ரவேல் மக்களைப் போலவே செங்கடலைக் கடந்து, கானான் நாட்டில் குடியேறியவர்கள். மெய்யான தேவனற்ற மக்கள்; ஆயினும் சமய நம்பிக்கை உள்ளவர்கள். அதாவது தேவபக்தியின் வேடத்தைத் தரித்து, அதன் பலனை மறுதலிக்கிறவர்கள் (2 தீமோத்தேயு 3,5). அன்றும் இன்றும் இத்தகையோர் விசுவாச மக்களுக்கு அச்சுறுத்துதலாகவே உள்ளனர். கர்த்தர் இஸ்ரவேல் மக்களை நாற்பது ஆண்டுகள் இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் (13,1). ஆனால் கர்த்தரால் எழுப்பப்பட்ட மனிதனின் தோல்வியால் நாற்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும், விடுதலைக்கு வழியில்லாமல் போய்விட்டது. முதன் முதலாகக் கர்த்தரால் எழுப்பப்பட்ட ஒரு நியாயாதிபதி எதிரிகளின் கையில் வீழ்ந்து கிடக்கிறான். விசுவாசிகள் அவிசுவாசிகளிடம் வீழ்ந்து கிடப்பது ஒரு மோசமான சூழ்நிலைக்கு அடையாளமாக இருக்கிறது.
அவனுடைய பயணத்தின் அடுத்த படி இன்னும் சோகமானது. பெலிஸ்தியர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, காசாவுக்குக் கொண்டுபோய், வெண்கல விலங்கு போட்டு சிறைச்சாலையில் அடைத்தனர் (வசனம் 21). விடுதலையின் நாயகன் ஓர் அடிமையாக சிறையில் மாவரைத்துக்கொண்டிருக்கிறான். பெலிஸ்தியர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கியவன் வேடிக்கைப் பொருளாகிப்போனான். அவனுடைய சொந்த விருப்பத்தால் அவன் ஒரு முறை காசாவுக்குச் சென்றான். இந்த முறை அவனுடைய விருப்பத்துக்கு மாறாக அங்கே கொண்டு போகப்பட்டான். எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்த்தர் தம்முடைய சிட்சையின் மிளாறை எடுத்தார். நியாயாதிபதி நூலில் சொல்லப்பட்ட கடைசி நியாயாதிபதி தன் பார்வையை இழந்துபோனான். வெளிப்படுத்தல் புத்தகத்தில் சொல்லப்பட்ட ஏழு சபைகளின் கடைசிச் சபையாகிய லவோதிக்கேயாவைப் பற்றிச் சொல்லும்போது, “நீ குருடனுமாய்” இருக்கிறாய் என்று கூறும் உண்மையை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பந்தன் என்றும், எனக்கு ஒரு குறையுமில்லை என்றும் சொல்லிக்கொள்வதை பார்க்கிறோம். ஆகவே நம்முடைய நிலையை உணர்வோம், பார்வை தெளிவடையும்படிக்கு கலிக்கம் (கண்மருந்து) போட்டுக்கொள் என்ற ஆவியானவரின் ஆலோசனையை ஏற்று நடப்போம் (வெளி. 3,17 முதல் 18).