2023 மே 13 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,4 முதல் 19 வரை)
- May 13
“அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்” (வசனம் 1).
சிம்சோனுடைய வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பெற்ற பெண் தெலீலாள். அவன் அவளை அதிகமாக நேசித்தான். இதுவரை தனிமையில் வாழ்ந்து வந்த அவனுக்கு இவள் தன் வாழ்க்கைக்கு இனிமை சேர்ப்பாள் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் அவளோ அவளுடைய பெயருக்கு ஏற்றாற்போலவே அவனுடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தாள். சிம்சோன் தெலீலாளை விரும்பினான், தெலீலாளோ பணத்தை விரும்பினாள். சிம்சோன் வலிமையானவன் என்று அவளுக்குத் தெரியும். அவள் சிம்சோனின் வலிமைக்கான காரணத்தை அறிய விரும்பினாளே தவிர, அவனை உண்மையாய் நேசிக்கவில்லை. அவள் நம்பிக்கைத் துரோகத்தால் அவனைக் கட்டிப்போட்டாள். இந்த உலகம் ஒரு விசுவாசியை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இந்தத் தெலீலாள் ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறாள். இந்த உலகம் அதனுடைய அழகு, கவர்ச்சி, சந்தோஷம் ஆகிய எல்லாவற்றையும் தந்து ஒரு விசுவாசியைச் செயல்படவிடாமல் செய்துவிடும்.
சிம்சோன் தன்னுடைய வலிமைக்கான இரகசியத்தை உண்மையாய்க் கூறாமல், அவளிடம் பொய் சொன்னான். ஏனெனில் அவள் ஆபத்தானவள் என்று புரிந்துகொண்டான். ஆயினும் அவளுடைய நட்பைத் தொடர்ந்தான். சிம்சோன் அந்தச் சூழ்நிலையில் இருந்து வெளியே வர மனதற்றவனாக இருந்தான். தெய்வ பயமற்ற உறவு ஒரு விசுவாசியினுடைய சிந்தையை எவ்வாறு மழுங்கடிக்கிறது என்பதற்கு இங்கே சிம்சோன் நமக்கு எச்சரிப்பாக இருக்கிறான். அவள் அன்புகூருவதுபோல் நடித்தாள். அந்த அன்புக்குப் பின்னால் அவளுக்கு ஆதாயம் இருந்தது. பெலிஸ்தியர்களின் ஐந்து அதிபதிகளும் தலா ஆயிரத்து இருநூறு வெள்ளிக் காசுகள் தருவதாக வாக்குப் பண்ணினார்கள். அவள் சிம்சோனைக் காட்டிக் கொடுத்தாள். முப்பது வெள்ளிக் காசுக்காக யூதாஸ் தன்னுடைய நண்பராம் கிறிஸ்துவை முத்தத்தினால் காட்டிக் கொடுத்தான். அன்பை ஆதாயமாக மாற்றினான். ஆதாயத்துக்காக அன்புகூருவது போல் நடிப்பது ஆபத்தானது.
இறுதியாக, சிம்சோனுக்குத் தெரியாமலேயே அவள் அவனுடைய தலையை மொட்டை அடித்தாள். நமக்குத் தெரியாமலேயே தேவனுடனான நம்முடைய ஐக்கியத்தையும் பிணைப்பினையும் முறித்துப் போடுகிற அளவுக்கு சாத்தான் புத்திசாலியாக இருக்கிறான். இந்த உலகத்தைப் பொறுத்தவரை, முடிவெட்டப்பட்ட சிம்சோன், நல்ல அழகானவனாக, எல்லாரைப் போலானவனாக, சமுதாயத்துக்கு ஒத்தவனாக காணப்பட்டிருப்பான். திருச்சபை தன்னுடைய தனித்தன்மையையும், ஒப்புவித்தலையும், பரிசுத்தத்தையும் இழந்துவிட்டு, உலகத்தோடு ஒத்து இருப்பதையே விரும்புகிறது. ஆகவே நாம் கவனமாயிருப்போம். கர்த்தருடைய அழைப்பும், நம்முடைய அர்ப்பணமும் இணைவதிலேயே நம்முடைய வலிமை அடங்கியிருக்கிறது. எதிரிகள் சிம்சோனை உடனடியாகக் கொலைசெய்ய விரும்பவில்லை. ஆனால் அவனை முடக்கிப்போட விரும்பினார்கள். வஞ்சகத்தால் அவனை அவமானப்படுத்த விரும்பினார்கள். இதற்காகக் கிரயம் செலுத்தவும் விரும்பினார்கள். சாத்தானும் இதையே நம்மிடத்தில் நடப்பிக்க விரும்புகிறான். இறுதியில் சிம்சோன் மரணத்தை விரும்புகிற அளவுக்கு கட்டுண்டவனாகிவிட்டான். வேதம் சிலருடைய வாழ்க்கையை நாம் பின்பற்றக் கூடாத மாதிரியாக, எச்சரிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நாம் கவனமாயிருப்போம்.