2023 யூலை 2 (வேத பகுதி: ரூத் 4,13 முதல் 16 வரை)
- July 2
“போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; … அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்” (வசனம் 13).
பெத்லெகேமின் மூப்பர்களின் வாழ்த்துதல் உண்மையாயிற்று. லேயாளைப் போலவும், ராகேலைப் போலவும், இஸ்ரவேலின் சந்ததி தழைக்கும்படி ரூத்தும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங்கீதம் 127,4) என்ற வாக்கும் அவளுடைய வாழ்க்கையில் உண்மையாயிற்று. இறந்துபோன எலிமெலேக்குக்காக கர்த்தர் ஒரு குழந்தையைக் கொடுத்து, அதைப் போவாசும், ரூத்தும் வளர்த்தார்கள் என்பது நிச்சயமாக அவருடைய ஆசீர்வாதத்துக்கு ஒரு சான்றாகும். விதவைகள், குழந்தை இல்லாதோர் ஆகியோரின்மீது கர்த்தர் எப்போதும் கரிசனை உள்ளவராக இருக்கிறார். கஷ்டத்திலும் துன்பத்திலும் கடந்து வருகிற அவருடைய பிள்ளைகளின் மீது அவருடைய சிறப்பான பார்வை எப்போதும் உள்ளது. ரூத்துக்கு கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினது போல அவர் நமக்கும் அநுக்கிரகம் செய்கிறார்.
“சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (வசனம் 14). பெத்லெகேமின் பெண்கள் நகோமியை ஆசீர்வதித்து, கர்த்தருக்கு கனத்தைக் கொடுத்தார்கள். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து” (எபேசியர் 5,20) வாழுங்கள் என்று புதிய ஏற்பாடு நமக்குப் போதிக்கிறது. ஆசீர்வாதங்களை அருளுகிற கர்த்தரை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது. “அவன் பேர் பிரபலமாகக்கடவது” என்ற வாழ்த்துதல் எப்படிப்பட்டது? இந்தக் குழந்தையின் பிறப்பால், நகோமியும் பெத்லெகேமில் பிரபலமானாள். பல நூற்றாண்டுகள் கழித்து, இந்தக் குழந்தையின் சந்ததியில் இதே பெத்லெகேமில் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தபோது வானத்திலிருந்து தூதர்கள் பாடல் பாடினார்கள், அந்தக் குழந்தையைக் கண்டு மேய்ப்பர்கள் மகிழ்ந்தார்கள், தூரமான இடங்களிலிருந்து ஞானிகள் அவரைத் தேடிவந்து வணங்கினார்கள். இவரே நம்மை மீட்க வந்த இரட்சகராகிய இயேசு கிறிஸ்து. இந்த இரட்சகரின் முன்னோர் என்ற முறையில் ரூத்தின் மகன் ஓபேத் இன்றளவும் நினைவுகூரப்படுகிறான். அவரை நாம் கனம்பண்ணினால் அவர் நம்மையும் கனம்பண்ணுவார்.
நகோமிக்கு நேர்ந்தது போல நமக்கும் நேர்ந்திருக்கலாம். நெருங்கிய சுதந்தரவாளி அவளைக் கைவிட்டதுபோல, நம்மையும் நமக்கு நெருக்கமானவர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் ஆண்டவரில் தொடர்ந்து நம்பிக்கையாயிருக்கும்போது, அவளுக்கு கர்த்தர் போவாசை ஏற்பாடு செய்தது போல நமக்கு ஒருவரை அனுப்பிவைப்பார். நகோமி பெத்லெகேமுக்குத் திரும்பி வராமல் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா? நிச்சயமாக இல்லை. அவள் திரும்பி வந்ததுமட்டுமின்றி, ரூத்தும் அவளைப் பின் தொடர்ந்து வந்தாள். கர்த்தருடன் நெருக்கமான உறவை வைத்திருக்கும் யாரையும் அவர் ஆசீர்வதிப்பார் என்பதற்கு இந்த ரூத் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டாக இருக்கிறாள். இந்த நூலின் தொடக்கத்தில் சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார் என்று நகோமி கூறினாள். இப்பொழுதோ அவள் தன் பேரக்குழந்தையை மடியில் போட்டு வளர்க்கும் மகிழ்ச்சி நிறைந்த பாட்டியானாள். நகோமியைப் போலவே நாமும் பல நேரங்களில் கர்த்தரைக் குறை சொல்லியிருக்கிறோம். ஆகவே நாம் நகோமியைக் குறை சொல்லாமல் நம்முடைய நிலையைச் சீர்தூக்கிப் பார்ப்போம். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடைபெறும்.