2023 யூலை 1 (வேத பகுதி: ரூத் 4,11 முதல் 12 வரை)
- July 1
“இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்” (வசனம் 12).
பெத்லெகேமின் ஒலிமுக வாசலில் நடந்த அந்த நிகழ்ச்சியில் மக்களும், மூப்பர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். ஓர் ஏழை மோவாபிய பெண் ரூத்தும், பெத்லெகேமின் செல்வந்தன் போவாசுக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருந்தது என்பது ஆச்சரியமே. நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்த நாட்களில், மக்கள் தங்கள் தங்கள் மனதின்படி செய்து பின்மாற்றத்தில் இருந்த காலகட்டத்தில், கர்த்தருக்குப் பயந்து வாழ்கிற இருவர் தங்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்வது எத்தனை அற்புதமானது. நாட்களும், காலங்களும் எவ்வளவு மோசமாகச் சென்றுகொண்டிருந்தாலும் தேவபக்தியுள்ள குடும்பங்களைக் கர்த்தர் தொடர்ந்து கட்டுகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கர்த்தர் தம்முடைய சாட்சிகளை எப்பொழுதும் வைத்திருக்கிறார். கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” (சங்கீதம் 127,1) என்னும் சங்கீதக்காரனின் கூற்றை ஆமோதித்த வண்ணம், “கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக” (வசனம் 11) என்று பெத்லேகேமின் மூப்பர்கள் போவாசையும், ரூத்தையும் வாழ்த்தினார்கள்.
லேயாளும், ராகேலும், (தங்கள் தாதிகளுடன் இணைந்து) பதிமூன்று பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் மூலமாக இஸ்ரவேல் என்னும் நாடு உருவானது. அவர்கள் இருவரும் முழு இஸ்ரவேல் நாட்டுக்கும் தாய்மார்களாக விளங்கினார்கள். அவர்களைப் போலவே போவாசும் ரூத்தும் பிள்ளைகளைப் பெற்று ஆசீர்வாதமாக வாழ வேண்டும் என்னும் வாழ்த்துதல் எப்படிப்பட்டது? போவாசும் ரூத்தும் மத்தேயு நற்செய்தி நூலின் தொடக்கத்தில் (மத்தேயு 1,5), கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான காரியம் அல்லவா? மனிதர்களுடைய பாவங்களைப் போக்கி இரட்சிக்க வந்த மனிதகுமாரனின் முன்னோர்களாக இவர்கள் இடம் பெற்றிருப்பது கிருபையின் மாபெரும் அற்புதம் அல்லவா? இந்த இரட்சகராகிய கிறிஸ்துவின் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பாவமன்னிப்பையும் விடுதலையையும் பெற்று, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக பூமியெங்கும் பெருகியிருப்பது அந்த மூப்பர்களின் ஆசீர்வாதம் உண்மையாக நிறைவேறிவிட்டது என்பதைக் காட்டுகிறதல்லவா?
“இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது” (வசனம் 12) என்றும் அந்த மூப்பர்கள் வாழ்த்தினார்கள். தாமார் கணவனை இழந்த ஒரு விதவைப் பெண். இறந்துபோன தன் கணவனின் இரு சகோதரர்கள் அவளை ஏமாற்றினார்கள். தன் மாமனும் முதலில் அவளைக் குறித்து கரிசனையற்று இருந்தான். ஆனால் அவளோ நம்பிக்கையுடன் இருந்தாள். முடிவில் யூதாவுக்கும் தாமாருக்கும் பாரேஸ் பிறந்தான். மருத்துவச்சி அவனைப் பார்த்து, “நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது” (ஆதியாகமம் 38,27 முதல் 30) (பேரஸ், பாரேஸ் ஒரே நபர்கள்). யாக்கோபைப் போலவே மூத்தவனின் கனத்துக்குரிய புத்திரசுவிகார பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டான். இந்தப் பாரேசின் சந்ததியினரே பெத்லெகேமில் குடியிருந்தனர் (1 நாளா கமம் 2,5 மற்றும்18 மற்றும் 50 முதல் 54). இவனுடைய யூதா கோத்திரத்திலேயே, இந்தப் பாரேசின் வம்சத்திலேயே, அவர்கள் குடியிருந்த பெத்லெகேமிலேயே நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து நம்மை மீட்கப் பிறந்தார்.