2023 ஏப்ரல் 20 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 12,5 முதல் 6 வரை)
- April 20
“அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம் பேர் விழுந்தார்கள்” (வசனம் 6).
கிதியோன் மீதியானியரை வெற்றி கொண்டபோதும் எப்பிராயீம் மனிதர் அவனிடம் வந்து, ஏன் எங்களை போருக்கு அழைக்கவில்லை என்று வாக்குவாதம் பண்ணினார்கள். ஆனால் கிதியோன் அவர்களிடம் சாந்தமாய்ப் பேசி அவர்களுடைய கோபத்தை ஆற்றினான் (8,1 முதல் 2). ஆனால் அவர்கள் இப்பொழுதும் திருந்தியதாகத் தெரியவில்லை. மீண்டுமாக யெப்தாவிடம் அதே காரியத்தைப் பேசினார்கள். ஆனால் யெப்தா அவர்களுக்குப் பணிந்துபோகவில்லை. மாறாக போரைத் துவக்கினான்; அது எப்பிராயீம் மக்களுக்கு பேரிழப்பாக முடிந்தது (வசனம் 4). இன்றைய காலகட்டத்தில் சபைகளில் இதுபோன்ற சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தாங்களும் எதையும் செய்ய மாட்டார்கள், அவ்வாறு யாராவது செய்தாலும் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அதை நிறுத்தவும் செய்வார்கள். துரதிஷ்டவசமான காரியம் என்னவெனில் இதுபோன்ற செயல்கள் எப்போதுமே சுமூகமாகச் செல்லாது என்னும் உண்மையை யாக்கோபு உரைக்கிறார்: “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினால் அல்லவா?” (யாக்கோபு 4,1).
எப்பிராயீம் மக்கள் யோர்தானுக்கு வடக்கே குடியிருந்தவர்கள். ஜனம்பெருத்தவர்கள். குடியேறி முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டதால், அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை போன்ற காரியங்களில் கிழக்கே குடியிருந்தவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தார்கள். அவர்களுடைய உச்சரிப்பில் “ஷ்” என்ற வார்த்தை சரியாக வராது. எதை அவர்கள் தனித்துவமாக நினைத்தார்களோ அது அவர்களுக்குப் பாதகமாக முடிந்தது. யெப்தாவின் வீரர்கள் யோர்தான் துறைமுகத்தை முதலாவது கைப்பற்றி, அதன் கரையைக் கடக்க வருகிறவர்கள் அனைவரையும் “ஷிபோலேத்” என்ற வார்த்தையை உச்சரிக்கச் சொல்வார்கள். அவர்களால் அதைச் சரியாக உச்சரிக்க முடியாமல், “சிபோலேத்” என்பார்கள். உடனே அவன் அங்கே கொல்லப்படுவான். ஒரு காலத்தில் கானான் தேசத்தில் குடியேறியபோது ஒற்றுமையின் இடமாக விளங்கிய யோர்தானின் கரை இன்றைக்கு மரணத்தின் இடமாக மாறிவிட்டது. யோர்தானைக் கடத்தல் என்பது மரணத்தை வென்று, உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிற இடம். ஆனால் இப்பொழுது சகோதரச் சண்டையினால் இரத்தக்களரியின் இடமாகக் காட்சியளிக்கிறது (வசனம் 6).
ஒரு உச்சரிப்பை வைத்து அடையாளம் கண்டு மக்கள் கொல்லப்படுவது வேதனையான காரியம் அல்லவா? யெப்தா தனக்கான ஒரு பாணியை அதாவது ஒரு வார்த்தையை உருவாக்கி, அதைச் சரியாக உச்சரிக்க இயலாதவர்களை குற்றவாளிகளாக்கினான். இன்றைக்கு நாமும் அதையேதான் செய்கிறோம். நமக்கென்று ஒரு சட்டத்தை உருவாக்கி, அதனுடன் ஒத்துப்போகாதவர்களையும் அதை அனுசரிக்காதவர்களையும் சிறிய காரியங்களுக்காகக்கூட புறம்பே தள்ளி ஒதுக்கிவைக்கும் மனப்பாங்கு இருக்கிறது அல்லவா? இதுபோன்ற காரியங்கள் சபைகளின் ஒட்டுமொத்த சாட்சியைப் பாதிக்கின்றன. சகோதரர்களுக்குள்ளே இத்தகைய காரியங்கள் தூரமாயிருக்கட்டும். நாம் சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நமக்கென்று ஒரு கொள்கையை உருவாக்கி அதன் அடிப்படையில் பிறரை நியாயம் தீர்க்க வேண்டாம். சகலமும் அன்போடும், நல்லொழுக்கமாயும், கிரமமாயும் செய்யப்பட வேண்டும். அதுவே பக்திவிருத்தியை உண்டாக்கும்.