April

ஒற்றுமைக்கு வந்த சோதனை

2023 ஏப்ரல் 19 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 12,1 முதல் 6 வரை)

  • April 19
❚❚

“எப்பிராயீம் மனிதர் ஏகமாய்க் கூடி … யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர் மேல் யுத்தம் பண்ணப் போனதென்ன?” (வசனம் 1).

முதலாவது யெப்தா தன் சகோதரர்களால் பகைத்து வெறுக்கப்பட்டான். அதன் விளைவாக அவன் தன் உரிமையையும் பூர்வீகத்தையும் விட்டுவிட்டு வேறு இடத்துக்கு ஓடிப்போக நேரிட்டது. அப்பொழுது அவனுக்கு ஆதரவாகவும், துணையாகவும் யாரும் வரவில்லை. பிறகு, அம்மோன் புத்திரரோடு போருக்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தியபோது, வருந்தி அழைத்தும் எப்பிராயீம் மனிதர் வர மறுத்துவிட்டார்கள் (வசனம் 2). இப்படியிருக்க, தன் உயிரைப் பணயம் வைத்து கர்த்தருடைய கிருபையால் பெற்ற வெற்றிக்குச் சொந்தங்கொண்டாடவும், குறை கூறவும் அவர்கள் யெப்தாவுக்கு விரோதமாக வந்துவிட்டார்கள். இது மீண்டும் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்துவிட்டது. இந்த எப்பிராயீம் மக்களைப் போலவே பலர் முதன்மை ஸ்தானத்தைப் பெற முயற்சிக்கிறார்கள். “சிறு பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத்தேயு 18,4) என்னும் ஆண்டவரின் வார்த்தையைப் பலர் அலட்சியம் செய்கிறார்கள். கர்த்தர் அவரவர்களுக்குக் கொடுத்த வரங்களை, சுதந்தரமாக செயல்படுத்த அனுமதி கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இந்த மனப்பான்மையுடன்தான் செயல்பட வேண்டும்.

முதன்மையாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கிற இந்த அம்மோனியர்களின் செயல் அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கிவிட்டது. விசுவாசிகள் பெலமே அவர்களின் ஒற்றுமையும் ஒருமனமும் தான்.  இதை உணர்ந்ததாலேயே, “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” என்று தாவீது பாடியிருக்கிறான் (சங்கீதம் 133,1). இதுவே ஆதிக் கிறிஸ்தவர்களின் பெலமாகவும் இருந்தது. “விசுவாசிகள் எல்லாரும் ஒருமித்திருந்து” என்றும், “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும், ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்” என்றும் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 2,44 மற்றும் 4,32). விசுவாசிகள் இவ்விதமாக இருப்பது சாத்தானுக்கு எப்போதும் உவப்பாயிருப்பதில்லை. ஆகவேதான், சகோதரர்களுக்குள்ளே எப்போதும் கலகத்தை எழுப்பிக்கொண்டே இருக்கிறான். ஆகவே சபையின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் எந்தக் காரியத்தைக் குறித்தும் நாம் எச்சரிக்கையாயிருந்து, ஐக்கியத்தைப் பேண நாடுவோம். “உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5,13) என்ற பவுலின் வார்த்தைக்குச் செவிகொடுப்போம்.

கர்த்தருடைய விடுதலையில் கீலேயாத் மக்களுடன் இணைந்து சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் அவர்கள்மீது பொறாமைப்படுகிறார்கள். வெற்றிக்குக் காரணமான மக்களை “ஓடிப்போனவர்கள்” என்று உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லி இகழுகிறார்கள் (வசனம் 4). சகோதரர்களிடையே போர் மூளுவது எவ்வளவு சோகமான காரியம்! “தங்களுடைய பங்கேற்பு இல்லையென்றால் கையைநீட்டிப் பிறரைக் குற்றம் சாட்ட ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கும்” என்று சி. ஏ. கோட்ஸ் என்பார் கூறுகிறார். ஆகவே நாம் சுயநலம், பொறாமைகளை விட்டொழித்துவிட்டு, “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13,34) என்ற ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். “கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்” என்று யெப்தா கூறியதுபோல (வசனம் 3) நாமும் எப்போதும் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவருகிறவர்களாக இருப்போம்.