September

முன்மாதிரியற்ற தலைவன்

2023 செப்டம்பர் 26 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,20 முதல் 22 வரை)

  • September 26
❚❚

“சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்” (வசனம் 20).

நீண்ட தயக்கத்துக்குப் பிறகு, “சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்” (வசனம் 20). யோனத்தான் தன் உதவியாளனுடன் தன்னந்தனியாய் போனபோது, சவுல் மரத்தின் அடியில் காத்துக்கிடந்தான், பெலிஸ்தியர் தோல்வி கண்டபோது, யார் காரணம் என வீரர்களை எண்ணிக்கொண்டிருந்தான், யுத்தம் அதிகரித்தபோது ஆசாரியனை அழைத்து தேவ சித்தத்தைத் தேட முயன்றுகொண்டிருந்தான். இறுதியாக வேறு வழியின்றி போர்க்களத்துக்கு வீரர்களுடன் சென்றான். சவுல் முழு இஸ்ரவேல் மக்களையும் வழிநடத்த வேண்டிய தலைமைப் பொறுப்பில் இருந்தான். ஒரு தலைவனாக இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படத் தவறிவிட்டான். சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டிய இடத்தில் சோம்பேறித்தனமாகவும், தாமதமாகவும் செயல்பட்டான். வேறுவழியே இல்லை என்று அறிந்தபோது, கர்த்தரையும் யோனத்தானையும் பின்பற்றும்படிச் சென்றான். தலைவர்கள் கர்த்தருடைய காரியங்களில் காலதாமதமாயிருப்பது, விசுவாசிகளை சோர்வடையச் செய்யும், அதிருப்தியை உண்டாக்கும், ஆத்துமாக்களை இழந்துபோகச் செய்யும். கிறிஸ்தவத்தில் நேரந்தவறாமை மறந்துபோன ஒரு கலையாகிவிட்டது. “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” (ரோமர் 12,11) என்று பவுலின் வாயிலாக பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கட்டளையிடுகிறார்.

பலி செலுத்துவது தன்னுடைய பணியல்ல என்று அறிந்தும், சாமுவேல் வரும்வரை பொறுமையுடன் காத்திராமல் தானே பலி செலுத்தினான் (1 சாமுவேல் 13,9). போருக்குச் செல்ல வேண்டிய நேரத்திலோ மிகவும் தாமதம் செய்தான். சவுல் தான் செய்யக்கூடாத காரியத்தில் விரைவாகவும், செய்ய வேண்டிய காரியத்தில் தாமதமாகவும் செயல்பட்டான். அவன் தன் பொறுப்பை உணர்ந்து செயல்படாததால், தன் ராஜ பதவியை இழந்துபோவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கர்த்தர் நாம் செய்யும்படி என்ன கொடுத்திருக்கிறாரோ அதை உற்சாகத்தோடும், விரைவாகவும் செய்வோம், தனக்குக் கொடுக்கப்படாத காரியங்களில் மூக்கை நுழைத்து அவப்பெயரைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டாம். “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோசெயர் 4,6) என்று யாரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு பவுல் ஆலோசனை கூறுகிறார்.

ஒரு தலைவனின் செயல்பாடுகள் அவனுடைய வெற்றியில் தெரியும். சவுலின் செயல்பாடுகள் பிடிக்காமல் பெலிஸ்தியர்களோடு போக்குவரத்துமாய் இருந்தவர்களும், பெலிஸ்தியர்களுக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த இஸ்ரவேல் மக்களும் இப்பொழுது யோனத்தானோடும் சவுலோடும் இணைந்துகொண்டார்கள். ஆம், மக்களுக்கு தலைவர்களின்மேல் நம்பிக்கை வரவேண்டும் என்றால், அவர்களை வெற்றிக்கு நேராக நடத்தியிருக்க வேண்டும். தலைவர்கள் தாங்கள் செய்ய வேண்டியதை சரியாகச் செய்யும்போது மக்கள் தானாக அவர்களைத் தேடிவந்து, அவருக்குத் தோள் கொடுப்பார்கள். தலைவர்களின் முன்மாதிரி அவசியம். தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியிலேயே செல்வார்கள். ஆகவே சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்து கர்த்தருக்கு மகிமை உண்டாக நடந்துகொள்வோம்.