September

விசுவாசத்தின் கிரியைகள்

2023 செப்டம்பர் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,1 முதல் 3 வரை)

  • September 19
❚❚

“ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்” (வசனம்  1).

இந்த அதிகாரத்தின் முற்பகுதி மூன்று நபர்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும், சவுலும் அவனோடிருந்த அறுநூறு வீரர்களும், ஏபோத்தை அணிந்திருந்த ஆசாரியனாகிய அகியாவும் உடன்படிக்கைப் பெட்டியும் ஆகும். சவுலும் வீரர்களும் பயந்து செயல்படாமல் மாதுளை மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வேளையில் (வசனம்  2), யோனத்தான் விசுவாசமுள்ள ஒரு வீரனாகச் செயல்படுகிறான். அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த சவுலும், மத அதிகாரத்தைக் கொண்டிருந்த அகியாவும் இணைந்து செயல்படாமல் இருக்கும்போது, தனியொருவனாய் யோனத்தான் விசுவாசத்துடன் எதிரிகளைச் சந்திக்கப் புறப்பட்டான். திருச்சபையின் தலைவர்களும், போதகர்களும் காரண காரியங்களைக் கண்டறிந்து, சூழ்நிலையைக் காரணங்காட்டி, நற்செய்தி அறிவிப்பில் பின்தங்கியிருக்கும்போது தேவன் விசுவாசமுள்ள தனிப்பட்ட விசுவாசிகளைப் பயன்படுத்துகிறார். எவ்விதப் பொறுப்பும் வகிக்காத எளிய தைரியமுள்ள விசுவாசிகளைக் கொண்டு தேவன் திருச்சபையை ஆத்துமாக்களால் நிரப்புகிறார் என்றால் அது மிகையல்ல. சவுல் வீரர்களை நம்பினான், யோனத்தான் கர்த்தரை நம்பினான். சவுல் என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டிருந்தபோது, யோனத்தான் அந்த காரியங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கினான்.

ஒருநாள்,  யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்றான். இது எந்த நாள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட நாள், அது யோனத்தானின் விசுவாசம் வெளிப்பட்ட நாள், அவனுடைய விசுவாசம் செயலாக வெளிப்பட்ட நாள். அந்த நாளில் இஸ்ரவேலுக்கு தேவன் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த நாளாக மாறியது. தேவனுடைய கிருபையையும் அவருடைய வல்லமையையும் பெற்று, அவற்றைத் தான் அனுபவித்ததுமின்றி, பிறருக்கும் கடத்த வேண்டும் என்னும் வாஞ்சையும் தாகமும் உள்ள ஆன்மாக்களின் சார்பாக அவர் நிற்கிறார். மேலும் தம்முடைய வல்லமை பிரசித்தமாகும்படி அவர்களைப் பயன்படுத்துகிறார். என்றைக்கு நம்முடைய விசுவாசம் வெளிப்படுகிறதோ அன்றைக்கு கர்த்தர் நமக்கு வெற்றியைக் கட்டளையிடுவார்.

பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று யோனத்தான் கூறியது எத்தனை துணிச்சல் மிக்க செயல். அதுவும் தன் தந்தைக்குத் தெரியாமல் சென்றது என்பது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும் தயக்கங்களையும் உடைத்து எறிந்து, விசுவாசத்துடன் முன்னேறிச் சென்றதுக்கு அடையாளமாயிருக்கிறது. அல்லது அவன் விளம்பரத்தை நாடாதவனாகவும் இருந்திருக்கலாம். எதுவாயினும், அவிசுவாசம் தடைகளை உண்டாக்குகிறது, விசுவாசமோ புதிய வழிகளைக் கண்டறிகிறது. ஆசாரியன் அகியா, “மகிமை இழந்துபோன ஏலியின் மகன் இக்கபோத்” என்னும் தன் முன்னோருடன் தொடர்புடையவனாக அறியப்படுகிறான் (வசனம்  3). அகியாவுடன் சவுலையும் இணைப்பதன் வாயிலாக, சவுலின் ஆவிக்குரிய நிலையை ஆவியானவர் இவ்விதமாக விளக்குகிறார் போலும். இதற்கு மாறாக, யோனத்தான் தனியொருவனாய் தாற்றுக்கோலால் அறுநூறு பெலிஸ்தியர்களைக் கொன்று வெற்றியைத் தேடித்தந்த சம்காரை (நியாயாதிபதிகள் 3,31) நினைத்துப் பார்த்திருக்கலாம். சம்காரைப் பயன்படுத்திய தேவன் தன்னையும் பயன்படுத்துவார் என்று தைரியமாய்ச் சென்றிருக்கலாம்.