2023 செப்டம்பர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 12,16 முதல் 18 வரை )
- September 11
“இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்” (வசனம் 16).
“இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்” (வசனம் 16) தான் பேசியது கர்த்தருடைய வார்த்தைதான், தன்னுடைய சொந்த விருப்பத்தின்படியான பேச்சல்ல என்பதை உறுதிப்படுத்தும்படி ஓர் அடையாளத்தை அனுப்பும்படி சாமுவேல் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தரிடமிருந்து வருகிற ஓர் அடையாளம் மட்டுமே அவர்களுடைய பொல்லாத காரியங்களை உணரச் செய்யும் என்று சாமுவேல் நம்பினான். மேலும் இவர்கள் கண்களுக்கு முன்பாக ஒரு ராஜா நின்றுகொண்டிருக்கிறார். அவர்களுடைய கவனமெல்லாம் ராஜாவின் மீதே இருந்தது. ஆகவே மக்களின் கவனம் கர்த்தரிடம் திரும்ப வேண்டும், அவர்கள் தங்கள் பாவத்தைக் குறித்த உணர்வடைய வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தீர்க்கதரிசியாக சாமுவேலின் ஊழியம் தொடர வேண்டும். இதற்காகவே சாமுவேல் வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் கேட்டான். உலகப்பிரகாரமான ஓர் அரசனைப் பெற்றிருந்தாலும், அவர்களுடைய ஆவிக்குரிய காரியங்களில் அக்கறை செலுத்தும் ஓர் ஆவிக்குரிய தலைவன் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதில் கர்த்தரும் கவனமாயிருந்தார்.
சாமுவேல் கடைசி நியாயாதிபதியாக தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, முதல் தீர்க்கதரிசி என்னும் பட்டத்தை ஏற்றுக்கொண்டான். இதுமுதல், எல்லா ராஜாக்களின் காலத்திலும் தீர்க்கதரிசிகள் இருந்துகொண்டே இருந்தார்கள். நம்முடைய கர்த்தர் எத்தனை அக்கறையுள்ளவர் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் கேட்ட அரசனை அவர்களுக்குக் கொடுத்தார், ஆனால் அவர்கள் கேட்காத ஆவிக்குரிய தலைவர்களாகிய தீர்க்கதரிசிகளை அவர்களுக்காக ஏற்படுத்தினார். சாமுவேல், நாத்தான் போன்றோர் தொடங்கி, ஏசாயா, எரேமியா உட்பட மல்கியா வரைக்கும் அரசர்களின் காலமெல்லாம் தீர்க்கதரிசிகளின் பணி அளப்பரியதாக இருந்தது. அவ்வாறே இன்றைக்கும் எப்பொழுதெல்லாம் மக்களின் ஆவிக்குரியநிலை மற்றும் பக்திவிருத்தி ஆகியவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாத தலைவர்கள் இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் அக்கறைகொண்ட தலைவர்களை அவர் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்.
பொதுவாக கோதுமை அறுவடை நாட்களில் மழை பெய்யாது (நீதிமொழிகள் 26,1). ஆயினும் கர்த்தர் வானத்திலிருந்து மழையை அனுப்பி, தன் அடையாளத்தை வெளிப்படுத்தினார். ஜெபத்தின் வல்லமைக்கு இது ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு. சாமுவேல் ஜெபத்தில் வல்லவராக வேதத்தில் அறியப்படுகிறார் (சங் கீதம் 99,6, எரேமியா 15,1). மக்கள் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் பயந்தார்கள். தங்கள் ராஜா பதவியேற்ற இந்த நாளில் வானத்திலிருந்து அற்புதம் நடைபெற்றதால் அவர்களுடைய மனதில் இது ஆழமாகப் பதிந்துவிட்டது. கர்த்தராகிய இயேசு மேசியாவாக அதாவது ராஜாவாக இந்த உலகத்தில் வந்தபோது நீர்தான் எங்களுக்கு ராஜா (மேசியா) என்பதற்கு வானத்திலிருந்து ஓர் அடையாளத்தை காட்டும்படி வேண்டிக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ நினிவே மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்த யோனாவின் அடையாளத்தைக் காட்டினாரே தவிர, வேறொரு அடையாளத்தையும் காட்டவில்லை (லூக்கா 11,16 மற்றும் 29 முதல் 30). அடையாளத்தைத் தேடின யூதர்களுக்கு, கிறிஸ்துவின் சிலுவை இடறலாகக் காணப்பட்டது. நாமோ சிலுவையின் சுவிசேஷத்தின் வாயிலாக இரட்சிப்பை அடைந்திருக்கிறோம். தேவனால் நமக்கு ஞானமாகவும், நீதியாகவும் பரிசுத்தமாகவும் மீட்பாகவும் இருக்கிற கிறிஸ்துவை எப்பொழுதும் பற்றிக்கொள்வோம் (காண்க: 1 கொரிந்தியர் 1,22 முதல் 31).