2023 அக்டோபர் 28 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,16 முதல் 20 வரை)
- October 28
“தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய்…” (வசனம் 20).
பெலிஸ்தியருடனான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே தாவீது தன் தந்தையின் வீட்டுக்குச் சென்று, பழையபடி ஆடுகளை மேய்க்கச் சென்றுவிட்டான் (வசனம் 15). அரண்மனையின் மும்முரமான வேலைச் சூழலிலிருந்து தன் மனதுக்குப் பிடித்த காடுகளோடும், ஆடுகளோடும் நேரத்தைச் செலவிடுவதற்குச் சென்றுவிட்டான். அரசாங்க உத்தியோகத்தை விட்டு மீண்டும் ஆடுகளை மேய்ப்பது அவனுக்கு ஓர் இனிமையான அனுபவமாகவே காணப்பட்டது. கர்த்தர் இந்த வகையிலும் தன்னுடைய ஊழியக்காரனுக்குப் பயிற்சி அளிக்கிறார். வாழ்ந்திருக்கவும் தெரியும் தாழ்ந்திருக்கவும் தெரியும் என்ற பவுல் அப்போஸ்தலனின் வார்த்தைகள் பக்தன் தாவீதின் இருதயத்திற்கும் உகந்தவையாகவே இருந்தன. இந்தக் காடுகளும், ஆடுகளும் அவனுக்குக் கர்த்தரைப் பற்றிக் கற்றுக்கொடுத்திருந்தன. இங்கேதான் அவன் ஆடுகளின் மேய்ப்பனாகிய அவன் கர்த்தரை நல்ல மேய்ப்பராகவும் அறிந்து பரிணமித்து வளர்ந்தான், இந்தக் காட்டில்தான் கர்த்தருடைய வல்லமையையும் அவருடைய மகத்துவத்தையும் அறிந்துகொண்டான். நம் ஒவ்வொருவரையும் இவ்விதமான தனிமை நேரத்துக்காக கர்த்தர் அழைக்கிறார். நாம் தனிப்பட்ட முறையில் தேவனோடு செலவிடும் மறைவான நேரங்களே, வெளியுலகில் நம்மை வல்லமை மிகுந்தவர்களாகவும் பயனுள்ளவர்களாகவும் இருப்பதற்கு உதவி செய்கிறது. இதுவே நம்முடைய பலம், இதுவே நம்முடைய ஆதாரம்.
உன் சகோதரரைப் பார்த்து, நலம் விசாரித்து வா என்று தந்தை ஈசாய் சொன்னபோது, “தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு” (வசனம் 20) போர்க் களத்துக்குச் சென்றான். இங்கே தாவீதை ஆடுகளின் மேல் அக்கறையுள்ள ஒரு மேய்ப்பனாகவும், வயதுமுதிர்ந்த தந்தையின் வார்த்தையைத் தட்டிக்கழிக்காத ஒரு கீழ்ப்படிதலுள்ள வாலிபனாகவும் காண்கிறோம். சர்வ வல்லவரின் நிழலில் தங்கி இளைப்பாறுதலைக் கண்டவன், போர்க்களத்துக்குச் செல்வதற்கான பக்குவத்தையும் பெற்றிருந்தான். போர்க்களத்தில் கோலியாத்தைச் சந்திப்பான் என்று அவனுக்குத் தெரியாது, ஆனால் மறைவிடத்தில் தேவனோடு உறவாடி வல்லமையைப் பெற்றவனையே வெளியரங்கமான போரின் வெற்றிக்கு அவர் ஆயத்தப்படுத்துகிறார் என்பது உண்மை. நம்முடைய ஆண்டவரின் முன்மாதிரியைப் பாருங்கள்: “அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்” (லூக்கா 6,12 முதல் 13).
ஈசாயின் எட்டு மகன்களில் தாவீது கடைக்குட்டிப் பையன். மூத்தவர்கள் மூன்று பேரும் சவுலுடன் போர்க்களத்தில் இருந்தனர். இடையில் பிறந்த நான்கு பேரும் ஈசாயுடன் வீட்டில்தானே இருந்தார்கள். பின்னர் ஏன் போரிட்டுக்கொண்டிருக்கிற தன் மகன்களை நலம் விசாரித்து வரும்படி இளையவன் தாவீதை அனுப்ப வேண்டும். ஈசாய் என்ன நோக்கத்துக்காக அனுப்பினானோ தெரியாது, ஆனால் இதற்குப் பின்னால் தெய்வீக தூண்டுதலும், நோக்கமும் இருக்கிறது என்பதே உண்மை. தேவனுடைய பிள்ளைகளுக்குத் தற்செயல் என்று எதுவும் இல்லை. சகலமும் நன்மைக்கு ஏதுவாக அவருடைய திருச்சித்தத்தின்படியே நடக்கின்றன. தாவீதுக்கு இது தெரியாவிட்டாலும், அவன் அதிகாலையில் எழுந்து புறப்பட்டான் என்று வாசிக்கிறோம். ஆகவே நாமும் எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம். தேவன் தம்முடைய நோக்கத்தை ஏற்ற வேளையில் நம்மில் நிறைவேற்றுவார்.