2023 அக்டோபர் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,23)
- October 13
“இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது;” (வசனம் 23).
“சூனியக்காரியை உயிரோடே வைக்க வேண்டாம்” (யாத்திராகமம் 22,18) என நியாயப்பிரமாணம் கட்டளையிடுகிறது. “விக்கிரகாராதனையும், பில்லிசூனியமும்” மாம்சத்தின் கிரியைகளாக பவுல் பட்டியலிடுகிறார் (கலாத்தியர் 5,20). இவ்விரண்டுக்கும் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி சாமுவேல் ஆவிக்குரிய வகையில் புதிய அர்த்தத்தைத் தருகிறார். இரண்டகம் பண்ணுதல் அதாவது தேவனுடைய ஆளுகையை எதிர்த்து, விரோதமாகக் கலகம் பண்ணுவது பில்லிசூனியப் பாவத்துக்குச் சமம் என்றும், அவருடைய கட்டளைகளுக்குப் பணிய மறுத்து முரட்டாட்டம் பண்ணுவது அவபக்திக்கும் (பக்தியின்மையினால் வரும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை) விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது என்று கூறுகிறார். ஒரு விசுவாசி நேரடியாகப் பில்லிசூனியப் பாவத்தில் துணிந்து ஈடுபட மாட்டான், அவ்வாறே விக்கிரக ஆராதனையிலும் ஈடுபட மாட்டான். ஆனால் அவருடைய கட்டளைகளுக்கு தொடர்ந்து கீழ்ப்படிய மறுக்கும்போதும், பிடிவாத குணமுடையவர்களாய் அவரை எதிர்த்து நிற்கும்போதும் இவ்விரண்டு பாவங்களையும் செய்கிறான். தேவன் என்று அறிந்தும் அவரை ஸ்தோத்திரியாமலும் அவரை வணங்காமலும் இருந்து, விக்கிரகங்களை வழிபடுகிறவர்களைப் போலவே இவ்விரண்டு பாவங்களைச் செய்கிறவர்களின் இருதயமும் கர்த்தரை நிராகரிக்கிறது.
சவுல் தேவனுக்குப் பலி செலுத்தினான், அவரை ஆராதிப்பது தொடர்பான எல்லாக் காரியங்களையும் செய்தான், கூடவே வழிநடத்துதலைத் தெரிந்துகொள்வதற்காக ஆசாரியனையும் வைத்திருந்தான். சவுலைப் பொறுத்தவரை அவனை யாரும் கடவுளை நம்பாதவன் என்றோ, அல்ல அவரை வணங்காதவன் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால் கர்த்தர் அதைப் பார்க்கவில்லை, அவன் எவ்வாறு கீழ்ப்படிகிறான் என்று இருதயத்தையே பார்த்தார். நாம் அவரைப் பாடுவதும், உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பதும், அல்லது வாராவாரம் கர்த்தருடைய பந்தியை அனுசரித்து வருவதும் எல்லாம் சரிதான். ஆயினும் கர்த்தர் விதித்த விதிமுறைகளுக்கு தூரமாயிருப்போமானால் அதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்முடைய ஆராதனை ஆசாரங்கள் நம்முடைய பிரச்சினைக்கு உதவவில்லை என்றால், அது நல்லதல்ல, நாம் சிந்திக்க வேண்டும்.
கர்த்தர் அமலேக்கியர்களைப் பாவிகள் என்று அறிவித்தார் (வசனம் 18). அவர்கள் விக்கிரக ஆராதனை செய்தார்கள். இந்த அமலேக்கியர்களுக்கும் சவுலுக்கும் என்ன வித்தியாசம்? கர்த்தரை வணங்காத நம்மைச் சுற்றியிருக்கிற பிற கடவுள் வழிபாட்டு மக்களைப் பார்த்து, இவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்று எளிதில் அவர்களைக் குற்றஞ்சாட்டிவிடுவோம். ஆனால் சவுலைப் போலவே நம்முடைய நிலையும் இருக்க வாய்ப்புண்டு. விக்கிரக ஆராதனைக்கு நிகரான பாவத்தைச் செய்துவிட முடியும். நம்முடைய ஆராதனை என்பது நம்முடைய ஒப்புவித்தலோடும், கீழ்ப்படிதலோடும் தொடர்புடையது. பொருளாசையும் விக்கிரக ஆராதனை என்று பவுல் இன்னுமொரு ஆவிக்குரிய பொருளை நமக்குத் தருகிறார் (கொலோசெயர் 3,5) “ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என்றும் (1 கொரிந்தியர் 10,14) அவர் கூறுகிறார். “சவுலின் நிலை கடலில் மிதக்கும் பனிப்பாறை போல் இருந்தது: மேலே அது கண்ணுக்கு வெண்மையாகவும், சிறிய அளவுமே காட்சியளித்தது, ஆனால் அதன் அடிப்பகுதியோ மிகக் கடினமாகவும், பரந்த அளவிலும் இருந்தது. ஆனால் அந்தப் பகுதியையும் கர்த்தர் காண்கிறார். ஆகவே சில ஆடுமாடுகள் தானே என்று மெத்தனமாக இராமல் உள்ளான நிலையில் சிறிய காரியங்களிலும் நாம் அவருக்கு ஒப்புவித்து கீழ்ப்படிதலோடு வாழுவோம்.