October

தேவனின் நினைவுகள்

2023 அக்டோபர் 2 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,1 முதல் 2 வரை)

  • October 2
❚❚

“இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்” (வசனம் 2).

சவுல் அரசனாகப் பதவி ஏற்று ஆண்டுகள் பல ஓடிவிட்டன. அவனுடைய அரசாட்சி ஸ்திரத்தன்மை அடைந்துவிட்டது; செழிப்பும் செல்வாக்கும் பெருகிவிட்டது. இராணுவ பலமும் ஆயுத பலமும் அதிகரித்துவிட்டது. ஆயினும் கர்த்தருக்குள் அவன் ஏதாவது வளர்ந்திருக்கிறானா என்பதை அவர் அறிய விரும்பினார். இருதயத்தில் விசுவாசமிருந்தால் அது செயலில் காண்பிக்கப்பட வேண்டுமல்லவா? இதன்பொருட்டு ஆன்மீகத் தலைவரிடமிருந்து இராணுவத் தலைவருக்கு ஓர் உத்தரவு வருகிறது. “நான்தான் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணினேன், அது நினைவில் இருக்கிறதா? இப்பொழுது கர்த்தர் என் மூலமாகச் சொல்லப்போவதைக் கேளும்” (வசனம் 1) என்று சாமுவேல் சவுலிடம் பேசினான். நாம் எவ்வளவு பெரியவர்களானாலும் நம்முடைய தாழ்மையான ஆரம்பத்தை மறந்துவிட வேண்டாம். அவ்வாறே நம்முடைய முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்த ஆவிக்குரிய வழிகாட்டிகளையும் உதாசீனம் செய்துவிட வேண்டாம். நாம் மறந்தாலும்கூட கர்த்தர் அதை நினைவில் வைத்திருக்கிறார், அவர்கள் மூலமாக நம்மோடு பேசக்கூடியவராக இருக்கிறார்.

“இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்” (வசனம் 2) என்று கர்த்தர் கூறினார். இந்த அமலேக்கியர் அப்படி என்ன செய்தார்கள்? இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, செங்கடலைக் கடந்த உடனே அவர்களுக்கு எதிராக போர்தொடுத்தார்கள். இஸ்ரவேலர்கள் ஒரு நாடாக உருவாகாதபோது, மக்கள் பெலவீனமான நிலையில் இருந்தபோது, எகிப்தின் கொடிய ஒடுக்குதலுக்கு சற்று முன்னர்தான் தப்பித்து வந்தபோது அமலேக்கியர் இவர்களைத் தாக்கினார்கள் (யாத்திராகமம் 17 அதிகாரம்). கர்த்தர் எளியவர்கள், திக்கற்றவர்கள், விதவைகள், ஏழைகள் ஆகியோரின்மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார். “தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார் (சங்கீதம் 68,5) என்று சங்கீதக்காரன் கூறுகிறான்”. ஆகவே நம்மிடையே இருக்கிற எளிய விசுவாசிகளை அற்பமாக எண்ணாமலும், அவர்களை ஒடுக்காமலும் இருந்து அவர்களின் நன்மைக்காக உழைக்கிறவர்களாக இருப்போம்.

இது நானூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஆயினும் கர்த்தர் அதை நினைவில் வைத்திருந்தார். கர்த்தர் அன்றைக்கே மோசேயிடம், “இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்” (யாத்திராகமம் 17,14) என்று கூறினார். காலங்கள் கர்த்தருக்கு எதிரான பாவத்தை அழிக்க முடியாது. மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் செய்த பாவத்தை மன்னிக்கலாம், அதை மறந்தும் விடலாம். ஆனால் கர்த்தருக்கு முன்பாக, காலத்தால் பாவத்திற்கு பரிகாரம் செய்ய முடியாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மட்டுமே பாவத்தை அழிக்க முடியும். ஆகவே நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன் நாம் செய்த பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். புகழ்பெற்ற அமெரிக்க சுவிசேஷகர் மெல் டிறாட்டர் அடிக்கடியாகச் சொன்ன வார்த்தைகள் இது: “அறிக்கையிடப்பட்ட எந்தப் பாவத்தையும் தேவன் நினைவில் வைத்துக்கொள்வதில்லை; அறிக்கையிடப்படாத எந்தப் பாவத்தையும் அவர் மறந்துபோவதும் இல்லை”.