November

முரண்பாடுகள்

2023 நவம்பர் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 19,4 முதல் 10 வரை)

  • November 10
❚❚

“சவுல் யோனத்தானுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்” (வசனம் 6).

யோனத்தான் தன் தந்தையின் திட்டத்தை நண்பன் தாவீதுக்கு அறிவித்தது மட்டுமின்றி, அவனைக் காப்பாற்றவும் முன்வந்தான். தந்தையின் எதிரியைக் குறித்து தந்தையிடமே பேசுவதற்கு தைரியமும் மனதும் வேண்டும். பல நேரங்களில் நாம் முகம் பார்த்தும், வேண்டியவர் வேண்டாதவர் பார்த்தும் உதவிசெய்யும்படி பிரயாசப்படுவோம். யோனத்தான் அப்படியில்லாதவாறு, தாவீதின் நற்செயல்களுக்காகவும், அவனுடைய நேர்மைக்காகவும் தந்தையின் முன் நின்றான். இந்த வகையிலும் யோனத்தான் தாவீதுக்கு ஓர் உற்ற நண்பனாக நடந்துகொண்டான். நம்முடைய உடன் சகோதர சகோதரிகளிடத்தில் நியாயம் இருக்கிறது என்று தெரிகிற பட்சத்தில் அவர்களுடைய துயரத்திலிருந்து விடுவிக்கும்படி பரிந்துபேச ஆயத்தமாயிருப்போம். யோனத்தான் தாவீதின் சொந்த நற்கிரியைகளுக்காக தந்தையின் சமூகத்தில் நின்றான். ஆனால் கிறிஸ்துவோ தம்முடைய சொந்த கிரியைகளினிமித்தம் நமக்காகப் பிதாவின் சமூகத்தில் நிற்கிறார். நாம் கீழ்ப்படியாமல் போகும்போதும், நாம் குறைவாய் இருக்கும்போதும் நமக்காக வேண்டுதல் செய்கிறார். யோனத்தானைக் காட்டிலும் நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்ட பிரதான ஆசாரியரிடத்தில் நாம் வந்திருக்கிறோம்.

யோனத்தானின் பரிந்து பேசுதல் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆயினும் அது தற்காலிகமானதாக முடிந்தது. “சவுல் யோனத்தானுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டும்” (வசனம் 6), மீண்டும் அவனை ஈட்டியால் எறிந்துகொல்லப் பார்த்தான். ஆனால் நம்முடைய பரம பிதாவோ, நம்மைக் காப்பாற்றுவதற்காக தம் ஒரேபேறான குமாரனை விலாவில் ஈட்டியால் குத்தப்படுவதற்கும் ஒப்புக்கொடுத்தார். அவர் ஒருமுறை மன்னித்துவிட்டால் அது நிரந்தரமான மன்னிப்பே ஆகும். அவர் தம்முடைய குமாரனின் பாவபரிகார பலியில் திருப்தி அடைந்தபடியால் அவர் மனம்மாற மாட்டார். மேலும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிரதான ஆசாரியராக இருக்கிறபடியால் நம்மை முற்றும்முடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.

யோனத்தானின் முயற்சியால் தாவீது மீண்டும் அரண்மனையில் பிரவேசிக்கும் சிலாக்கியம் பெற்றான். பெலிஸ்தியர்களுடன் போரில் ஈடுபட்டான்; வெற்றியும் பெற்றான். ஆயினும் அந்த வெற்றியைச் சவுல் மதிக்கவில்லை. தாவீதின் உழைப்பு, உண்மை ஆகியவை மதிக்கப்படாமல் போயிற்று. ஆனால் நம்முடைய பரம தந்தையோ நம்முடைய அன்பான கிரியைகளை ஒருபோதும் மதிக்காமல் போவதில்லை. நம்முடைய நற்கிரியைகளுக்கேற்ற பலனை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வோம். நாம் கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் நம்மை அநேகத்தின்மேல் அதிகாரியாக்குவார். தாவீது கர்த்தருக்கு உண்மையாயிருந்தான். ஆகவே அவனும் கர்த்தரால் மறக்கப்படவில்லை. மனிதர் நம்மைக் கைவிடலாம், கர்த்தரோ ஒருபோதும் நம்மை மறவார். சவுலுக்கு மீண்டும் பொல்லாத ஆவி வந்தது; தாவீது சுரமண்டலம் வாசித்தான். பழைய சுபாவம் வந்தபோது தாவீதைக் கொலை செய்ய முயன்றான். இப்பொழுது சவுலுக்குத் தேவை ஈட்டி அல்ல, தாவீது மட்டுமே. தனக்குச் சுகம் கொடுத்த தாவீதைப் பகைத்தான். தாவீது தப்பி ஓடினான், அவன் சவுல் இருக்கும் வரை மீண்டும் வரவில்லை. ஒரு நாள் ராஜாவாக தாவீது அங்கே வந்தான். அதற்கு 15 ஆண்டுகள் ஆகின. தாவீது நல்ல காரியங்களுக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறான். ஆனால் சவுலோ தவறான காரியங்களுக்காக நம் மனதில் நிற்கிறான். நாமும் தாவீதைப் போல நற்காரியங்களுக்காக அறியப்படுவோம்.