November

இறையாண்மையின் தேவன்

2023 நவம்பர் 8 (வேத பகுதி: 1 சாமுவேல் 18,20 முதல் 30 வரை)

  • November 8
❚❚

“பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்” (வசனம் 22).

பொல்லாத ராஜாவாகிய சவுலுக்கு மற்றொரு வாய்ப்பு தன் மகள் மீகாளின் மூலமாகக் கிடைத்தது. மீகாள் தாவீதை நேசித்தாள். இந்தச் செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தன்னுடைய மகளின் அன்பையும்கூட தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டான். மீகாளைத் திருமணம் செய்து தருகிறேன் என்று சவுல் கூறியபோது தாவீதுக்கும் அது பிரியமாயிருந்தது (வசனம் 26). பொல்லாத ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த சவுல் தாவீதின் மரணத்தையே நோக்கியிருந்தான். விசுவாசிகளின் ஆத்துமாவை கவிழ்த்துப் போடுவதே சாத்தானின் தந்திரங்கள். இதற்காக அவன் யாரையும் பயன்படுத்த முயலுவான். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்ல. ஆனால் எல்லாருடைய இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிற கர்த்தர் தன்னுடைய இறையாண்மையின் வழியில் செயல்பட்டார். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும் என்று பவுல் கூறுவதுபோல, தாவீதின் வாழ்க்கையில் சவுலின் எல்லாவித சூழ்ச்சிகளையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றிவிட்டார். தாவீது கர்த்தருக்குப் பயந்தவனாகையால் எவ்விதக் கண்ணியிலும், எவ்வித ஆபத்திலும் சிக்காதபடி அவனைக் காத்துக்கொண்டார்.

சவுல் தனது சொந்த வார்த்தைக்கு எந்த மதிப்பும் இருக்காது என்பதை உணர்ந்தான். எனவே தன் ஊழியக்காரர்கள் மூலமாக தாவீதுக்குச் செய்தியைச் சொன்னான். இதை ரகசியமாய்ப் பேசும்படியாகக் கட்டளையிட்டார். ஆம், எப்பொழுதும் சாத்தானின் தந்திரங்கள் வெளிப்படையானவை அல்ல, அவை மறைவானவை. அவை தனிப்பட்ட பாராட்டு, முகஸ்துதி போன்றவையாகக்கூட இருக்கலாம். ராஜா பரிசத்தை விரும்பவில்லை, ஆனால் பெலிஸ்தியரின் நூறு நுனித்தோலை மட்டும் எதிர்பார்க்கிறார் என்றார்கள். வெளிப்படையான கடிந்துகொள்ளுதலைக் காட்டிலும் இத்தகைய வஞ்சனையாக காரியங்களே மிகவும் ஆபத்தானவை. “அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா?” “ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது” போன்ற வார்த்தைகள் உள்ளிருக்கும் சூழ்ச்சியை உணராமல் வாலிபனாகிய தாவீது செயல்பட்டான் என்பதையே தெரிவிக்கிறது. பெரிய குடும்பத்து மருமகன், செல்வாக்கான குடும்பம், வசதி வாய்ப்புகள் போன்றவையே இன்றைக்கும் எண்ணற்ற வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தெரிந்துகொள்வதற்கு தடுமாற்றத்தை உண்டுபண்ணும் கண்ணிகளாக இருக்கின்றன. மீகாளுடன் தாவீதின் வாழ்க்கை செம்மையானதாக அமையவில்லை. அவள் தாவீதின் இருதயத்தை கர்த்தருக்கு நேராக ஒப்புவிப்பதற்குத் தடையாயிருந்தாள்.

ஓர் அரசனின் மருமகனாக இருப்பது இத்தகைய பெருமைக்குரிய காரியம் என்றால், ராஜாதி ராஜாவின் மகன்களாக இருப்பதற்கு நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டும். அவரை விசுவாசிக்கிற யாவரும் அவருடைய பிள்ளைகளாக மாறுகின்றனர். தேவனுடைய பிள்ளைகளாக இருப்பதால் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரராக மாறுகிறோம். கிறிஸ்துவுக்கு உரியவை யாவும் நமக்கும் உரித்தானவையாக ஆகப்போகின்றன. நாம் ராஜாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். ஒரு நாளில் அவரோடுகூட ஆளுகை செய்வோம். பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள் என்று யோவான் வியக்கிறதுபோல நாமும் வியந்து அவரைப் போற்றுவோம். விருத்தசேதனத்தை வெறுக்கிற பெலிஸ்தியரிடமிருந்து நுனித்தோலை எடுப்பது சாதாரண காரியம் அல்ல. இது அவர்களுக்கு வெட்கத்தையும் அவமானத்தையும் உண்டுபண்ணும் செயல். ஆயினும்  தாவீது பின்வாங்கவில்லை. கர்த்தர் தன்னுடன் இருக்கிறார் என்பதை அறிந்து, தனது எதிரிகளைக் கொல்வதற்கு வெளியே சென்றார். சவுல் கேட்டதைக் காட்டிலும் இருமடங்கு நுனித்தோலைக் கொண்டுவந்தான். மனிதனின் கோபத்தை தமது மகிமைக்காக மாற்றினார் தேவன். ஆகவே எப்பொழுதும் நாம் அவரைச் சார்ந்துகொள்வோம்.