May

குற்றச்சாட்டை மறுத்தல்

2023 மே 22 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,11 முதல் 17 வரை)

  • May 22
❚❚

“பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரரின் சொல்லைக் கேட்கமனமில்லாமல்” (வசனம் 13).

அனைத்து இஸ்ரவேல் புத்திரரும் இணைந்து, கிபியாவில் நடந்த இந்தப் பாவச்செயலுக்குக் காரணமான குற்றவாளிகள் கொல்லப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கிபியாவின் மக்களாகிய பென்யமீனியர்களோ இந்தக் கோரிக்கைக்குச் செவிகொடுக்கவில்லை. மாறாக, அவர்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் சொந்த இனத்தார் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் உதவிக்கு அழைத்தார்கள். குற்றத்தை ஒத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு மனதில்லை, அதற்கு நியாயம் கற்பிக்கவே முற்பட்டார்கள். மேலும் அந்தப் பாவம் அவர்களுக்குப் பெரிதாகத் தோன்றவுமில்லை. இது அவர்களுடைய ஆவிக்குரிய தரம் கீழிறங்கிவிட்டது என்பதைக் காட்டும் எச்சரிக்கை மணி ஆகும். தேசத்தின்மீது இரத்தப்பழி சுமராதபடிக்கு, தவறு கண்டுபிடிக்கப்பட்டால் விசாரணை செய்து குற்றவாளி தண்டிக்கப்படுவதன் மூலமாகத் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக என்று கூறுகிற நியாயப்பிரமாண சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை (காண்க: உபாகமம் 19,10 மற்றும் 16 முதல் 19). “என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக” என்று சாலொமோன் ஞானியும் கூறுகிறார் (நீதிமொழிகள் 1,15).

கிபியாவின் மக்களோடு பிற பென்யமீனியரும் இணைந்து, தங்கள் சகோதரராகிய பதினொரு கோத்திரத்து மக்களோடு போருக்கு நின்றார்கள். பென்யமீன் மக்கள் குற்றத்தை ஒத்துக் கொள்வதற்குப் பதில் பெருமையுடன் நடந்துகொண்டது வியப்பளிக்கிறது! அவர்களின் முற்பிதா யாக்கோபு உரைத்தது போலவே பீறுகிற ஓநாயைப் போல நடந்துகொண்டார்கள். இவர்கள் தேவனுடைய பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் தங்கள் சொந்தக் கோத்திரத்தாருக்கு அதாவது இரத்த உறவுக்கு உண்மையாயிருந்தார்கள். கிபியாவின் குற்றவாளிகளுக்கு ஆதரவுகொடுத்ததன் வாயிலாக, தங்களையும் அந்தக் குற்றத்தில் பங்குதாரராக ஆக்கிக் கொண்டார்கள். திருச்சபைகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதிகப்படியான உறவினர்கள் இருந்தால் நல்லது கெட்டது எதையும் விசாரியாமல் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொள்வது பல இடங்களில் நடக்கின்றன. “நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும்”, என்றும் “மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு உடன்படாதே” என்றும் பவுல் தீமோத்தேயுக்கு கூறும் ஆலோசனையை நமக்குரியதாக ஆக்கிக்கொள்வோம் (1 தீமோத்தேயு 5,21 முதல் 22).

கிபியாவின் குடிகள் போர்ப் பயிற்சி பெற்ற எழுநூறு வீரர்கள் மற்றும் தங்கள் இனத்தாரின் இருபத்தாறாயிரம் வீரர்களின் திறமையின்மேல் நம்பிக்கை வைத்தார்கள். இதுதவிர இடது கைப் பழக்கமுள்ள, குறி தவறாவது கவண் எறிகிற எழுநூறு பேரையும் நம்பினார்கள் (வசனம் 15 முதல் 17). அழிவுக்கு முன்னதாகக் கொண்டிருக்கிற அகந்தை, தங்கள் சொந்த மாம்ச பெலத்தைச் சார்ந்திருத்தல், கர்த்தரைச் சார்ந்துகொள்வதற்குப் பதில் கவண்வீரர்களின் திறமை ஆகியன அவர்களுடைய கண்களை மறைத்துவிட்டன. அவர்கள் தங்கள் உடன் சகோதரர்களுக்கு எதிராக அணிவகுத்தார்கள். ஆயினும் தாங்கள் கடவுளுக்குக் விரோதமாகப் போரிடுகிறோம் என்னும் காரியத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (கலாத்தியர் 5,15) என்ற வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்.