May

சொந்தவழியில் தேவனைத் தேடுதல்

 2023 மே 17  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 17,1 முதல் 13 வரை)

  • May 17
❚❚

“அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (வசனம் 6).

நியாயாதிபதிகளின் நூலின் இனிவரும் அதிகாரங்களில் சொல்லப்பட்ட பகுதிகள் இஸ்ரவேல் மக்களின் மிகப்பெரிய ஆவிக்குரிய சீர்கேட்டையும், வீழ்ச்சியையும் நமக்குத் தோலுரித்துக் காட்டுகின்றன. அவர்கள் ஓர் இனமாக கூட்டுச் சேர்ந்து எதிரிகளை எதிர்ப்பதிலிருந்து, ஒரு தனி மனிதனால் எதிரிகளை எதிர்க்கும் நிலைக்கு தாழ்ந்துபோனார்கள். இப்பொழுது அக்குடும்பங்களிலும் பக்தி குறைந்து, சீர்கேடு உண்டாகிவிட்டது. படிப்படியான வீழ்ச்சியை நோக்கி அந்த நாடு சென்றது. இங்கே ஒரு குடும்பத்தைக் காண்கிறோம். தாயின் பணத்தைத் திருடின  மகன், அதற்காகச் சாபமிட்ட தாய் (வசனம் 1). பணத்தை எடுத்தவன் தன் மகன் என்று தெரிந்தவுடன் அவனை ஆசீர்வதிக்கிற தாய். அவள் தன் மகனை கண்டிப்பதற்குப் பதில், “என் மகனே நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய்” என்கிறாள். யாக்கோபு கூறியதுபோல, “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது” (யாக்கோபு 3,10). என் சகோதரரே இப்படியிருக்கலாகாது என்ற அவருடைய ஆலோசனையை நாம் புறக்கணிக்காதிருப்போம்.

தாயும் மகனும் இணைந்து அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு விக்கிரகத்தைச் செய்தார்கள் (வசனம் 4). தன் பெயருக்கு “யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்” என்ற அர்த்தத்தைக் கொண்ட “மீகா” தன் குடும்பத்துக்கென்று ஒரு விக்கிரகத்தை ஏற்பாடு செய்தது விந்தையே. “இந்த வெள்ளியை முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்” என்று சொல்லி காரணம் கற்பிப்பதும் விந்தையே. கர்த்தருக்காக ஏதாவது செய்கிறேன் என்று சொல்லி, வேதத்துக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுவது இன்றளவும் நீடிக்கிற ஒரு வேதனையான காரியம். மேலும் இன்றைய நாட்களில் இத்தகைய விக்கிரகங்கள் பணஆசை என்னும் வடிவிலோ, செழிப்பு என்னும் வடிவிலோ வந்து பெரும்பான்மையான கிறிஸ்தவக் குடும்பங்களை ஆட்கொண்டுவிட்டன. இவர்கள் பெயருக்கு கர்த்தருடைய பெயரை உச்சரிக்கிறார்கள், ஆனால் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய கனத்தையோ உலகக் காரியங்களுக்குக் கொடுக்கிறார்கள். “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்களுடைய இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” என்ற ஆண்டவரின் வார்த்தையின்படியே நடந்துகொள்கிறார்கள் (மத்தேயு 15,8). கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிறவன் எவனும் அநியாயத்தை விட்டு விலகியிருக்க வேண்டும் என்ற பவுலின் கூற்றை விட்டுவிட்டார்கள் ( 2 தீமோத்தேயு 2,19).

மீகா அந்த விக்கிரகத்தை தன் வீட்டில் தனி அறை ஒன்றை உருவாக்கி, தன் குமாரரில் ஒருவனை அதற்கு ஆசாரியனாக நியமிக்கிறான். பின்னர் பெத்லெகேம் ஊரைச் சேர்ந்த லேவியன் ஒருவனை ஆசாரியனாக்கினான் (வசனம் 5 மற்றும் 10). எந்தவொரு வேத வரையறையும் இல்லாமல் காரியங்கள் நடக்கின்றன. “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” என்பதற்கு இந்த ஒரு குடும்பம் சான்று. பெத்லெகேமைச் சேர்ந்த லேவியனும் இவ்விதமாகவே மனம்போன போக்கில் அலைந்து திரிந்தான். ஆவிக்குரிய சூழல் முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. இன்றைய திருச்சபைகளிலும், வேதத்தில் சொல்லப்படாத பாரம்பரியங்களும், புதுமைகளும் புகுந்திருப்பது வேதனை அளிக்கிற காரியமே. இதை எல்லாவற்றையும் செய்துவிட்டு, “கர்த்தர் எங்களுக்கு நன்மை செய்தார்” (வசனம் 13) என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். சிந்திப்போம்.