May

கண்களுக்குப் பிரியமானதைச் செய்தல்

2023 மே 1 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,1 முதல் 3 வரை)

  • May 1
❚❚

“சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” (வசனம் 1).

இஸ்ரவேல் மக்கள்மீதான பெலிஸ்தர்களின் அடக்குமுறை என்பது தந்திரமானது. அவர்கள் போரினால் அல்ல, அவர்களுடைய பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் இஸ்ரவேல் மக்களின்மீது புகுத்திவிட்டிருந்தனர். இந்த உலகத்தினுடைய மிகப் பெரும் ஆபத்து என்பதே கிறிஸ்தவர்களாகிய நம்முடைய தனித்துவத்தை இழக்கச் செய்வதுதான். நமக்கும் அவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்ற எண்ணத்தை நம்முடைய மனங்களில் பதியவைப்பதே உலகத்தின் வெற்றி. சோராவிலிருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் உள்ள திம்னாத்தில் பெலிஸ்தியர்கள் வசித்தார்கள். விசுவாசிகள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்க வேண்டும். எல்லை தாண்டும்போது அங்கே சிக்கல்கள் நேரிடுகின்றன. எல்லாவற்றையும் செய்ய நமக்கு உரிமை உண்டு, ஆனால் எல்லாவற்றிற்கும் நாம் அடிமைப்பட்டுவிடக்கூடாது, மேலும் எல்லாம் நமக்குத் தகுதியாகவும் இராது என்று வேதம் கூறுகிறது.

அங்கே சிம்சோன் ஒரு பெண்ணைக் கண்டான், உடனே அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான் (வசனம் 1 மற்றும் 2). கண்களின் இச்சை மிகவும் மோசமானது (1 யோவான் 2,16). நம்முடைய கண்கள் தெளிவாயிருந்தால் சகலமும் தெளிவாயிருக்கும். இதுவரைக்கும் நசரேய விரதத்தில் வளர்க்கப்பட்ட ஒரு இஸ்ரயேலிய வாலிபனுக்கு ஒரு பெலிஸ்தியப் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தெரியாமற்போனது எப்படி? சோராவுக்கும் திம்னாத்துக்கும் போக்குவரவு, சந்திப்புகள், விருப்பம் இவை சிம்சோனைத் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றது. இன்றைய கிறிஸ்தவ இளைஞர்கள் இந்தக் காரியத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கிறிஸ்தவம் நமக்கு விடுதலையைத் தந்திருக்கிறது. ஆனால் அந்த சுதந்தரத்தை மறுபடியும் அடிமைத்தனத்துக்கு நேராகப் பயன்படுத்தக்கூடாது. அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்று புதிய ஏற்பாடு நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஆகவே விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும், நீதிக்கும் அநீதிக்கும், ஒளிக்கும் இருளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று வேதம் நம்மிடம் கேள்வியை எழுப்புகிறது (காண்க: 2 கொரிந்தியர் 6,14 முதல் 16).

இவளைத்தான் திருமணம் செய்வேன் என்று முடிவு செய்துவிட்டு, தன் பெற்றோரிடம் காரியத்தைத் தெரிவித்தான். பெற்றோரிடம் காரியங்களைப் பகிர்ந்துகொள்வது நல்ல காரியம்தான். ஆனால் அதில் ஆவிக்குரிய நலனும், கனம்பண்ணுதலும், கீழ்ப்படிதலும் அடங்கியிருக்க வேண்டும். சிம்சோன் தன் தந்தையிடம் இது பற்றிப் பேசியதில் ஆவிக்குரிய நோக்கம் எதுவுமில்லை. அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், எனவே அவளையே பேசி எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் என்றான். எல்லாவற்றையும் முடிவு எடுத்துவிட்டு, அதை ஒரு தகவலாக பெற்றோரிடம் சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? தன்னுடைய தவறுக்குப் பெற்றோரையும் உடந்தையாக்கும் செயல் அல்லவா? அவன் பெற்றோரின் ஆலோசனையைப் புறக்கணித்தான். “தேவனுடைய பிள்ளைகள் கண்களின் இச்சைக்கு செவிகொடுத்தால், அவர்களுடைய காதுகள் ஆவிக்குரிய காரியங்களுக்குச் செவிடாகிவிடும்” என்று ஒருவர் சொன்னது சிம்சோனின் வாழ்வில் உண்மையாகிப்போனது. ஆகவே நாம் எப்போதும் நம்முடைய அழைப்பில் உண்மையாகவும், உறுதியாகவும் இருப்போம்.