March

கிறிஸ்தவன் மறைந்திருக்க முடியாது

2023 மார்ச் 26 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,25 முதல் 27 வரை)

  • March 26
❚❚

“ நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு” (வசனம் 25).

பாகால் விக்கிரக வழிபாடு நாடு முழுவதும் வியாபித்திருந்தது. கிதியோனின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. அவனுடைய தந்தை யோவாசே ஒரு பாகாலுக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டி தன்னுடைய ஊரார் முழுவதும் அதை வணங்கும்படி செய்திருந்தான். கிதியோன் பலிபீடம் கட்டித் தொழுது கொண்ட அன்றைய தினம் இராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, உன் தந்தை கட்டி வைத்திருக்கிற பலிபீடத்தைப் இடித்துப்போடு, மரத்தால் செய்த அஸ்தரோத்தின் சிலையை வெட்டிப்போடு என்று கட்டளையிட்டார் (வசனம் 25). ஒரு நாட்டை இரட்சிப்பதற்கு முன் தன் குடும்பத்தாரை அந்நிய தேவர்களிடமிருந்து விடுவிக்கும்படி கர்த்தர் கூறினார். நாம் பொது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் அது நம்முடைய வீடுகளில் தொடங்கப்பட வேண்டும். சபையை நடத்துகிற மேய்ப்பர்கள், போதகர்கள், மூப்பர்கள், கண்காணிகள் ஆகியோர் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்தவும், சொந்தப் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவர்களாயும் இருக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். ஆகவேதான், “ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்” (1  தீமோத்தேயு 3,5) என்ற கேள்வியை எழுப்புகிறார். சபை மக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன், தங்கள் மனைவி, பிள்ளைகள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

கிதியோன் கர்த்தர் சொன்னபடியே செய்தான். ஆனால் தன் குடும்பத்தாருக்கும் தன் ஊராருக்கும் பயந்தபடியால் அதைப் பகலில் செய்யாமல் இரவிலே செய்தான் (வசனம் 27). பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படிவதே நியாயமானது என்று வேத வசனம் கூறுகிறது (எபேசியர் 6,1). பெற்றோர் அல்லது குடும்பத்தாரின் செயல்கள் கர்த்தருக்குப் பிரியமானதாக இல்லை என்று தெரிய வருமானால் நாம் அதற்கு உடன்பட வேண்டியதில்லை. பெற்றோரோ உடன் பிறந்தோரோ நாம் கர்த்தரைப் பின்பற்றுவதற்கு தடையாக இருக்க அனுமதிக்கக்கூடாது (காண்க: லூக்கா 14,26). குடும்பத்தின் பாசம், ஊராரின் நேசம் இவற்றுக்கு அப்பாற்பட்டு நாம் கர்த்தருக்காக வைராக்கியத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். கிதியோனுக்குப் பகலில் எல்லாரும் பார்க்கும் வண்ணம் பலிபீடத்தை இடித்துப்போட தைரியமில்லை, ஆனால் இரவில் அதைச் செய்தான். ஒரு நாள் இல்லாவிடில் வேறொரு நாள் நாமும் அதைச் செய்தாக வேண்டும்.

பாகாலின் பீடம் தகர்க்கப்பட வேண்டிய மட்டுமல்ல, அதற்குச் செலுத்த வேண்டிய முன்னுரிமையும் கனமும் மரியாதையும் கர்த்தருக்குச் செலுத்தப்பட வேண்டும். கிதியோன் கற்பாறையின் உச்சியில் புதியதாக ஒரு பலிபீடம் கட்டி, கிதியோனின் தகப்பன் யோவாஸ் பாகாலுக்காக நேர்ந்துவிட்ட இரண்டாம் காளையைக் கொண்டுபோய் அதைக் கர்த்தருக்காகப் பலியிட வேண்டும் (வசனம் 26). மேலும் இந்தப் பலிபீடத்தை ஊரார் கண்ணுக்கு மறைத்துவிடவும் முடியாது. நாம் கர்த்தரின்மீது கொண்டிருக்கிற விசுவாசத்தை நீண்ட நாட்கள் மறைத்துவைக்க முடியாது. அது ஒரு நாள் நம்முடைய கிரியைகளினால் வெளிப்பட்டே ஆகவேண்டும். “யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்” (யோவான் 19,38). இந்த யோசேப்பு நேரம் வந்தபோது தன் விசுவாசத்தை தைரியமாய்  வெளிப்படுத்தினான். “இரண்டாம் காளையை” பலியிட்ட செயல் (வசனம் 26), இரண்டாம் மனுஷனாக வானத்திலிருந்து வந்த கர்த்தரை நமக்கு நினைவூட்டுகிறது (1 கொரிந்தியர் 15,47). இவர் வந்து, முதலாவதாகிய பலிசெலுத்தும் முறையை நீக்கிப்போட்டு, தம்மையே பலியாக ஈந்து, இரண்டாவதாகிய கிருபையின் பிரமாணத்தை நிலைநிறுத்தி, நம்மைப் பரிசுத்தமாக்கியிருக்கிறார் (எபிரெயர் 10,8 முதல் 10). இந்தக் கர்த்தரை நாம் நன்றி நிறைந்த மனதுடன் ஆராதிப்போம்.