2023 மார்ச் 13 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 4,4 முதல் 5 வரை)
- March 13
“அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்” (வசனம் 4).
கானானியர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை கொடுமையாக அடக்கியாண்டதன் விளைவாக, அவர்களுடைய எண்ணம் கர்த்தரை நோக்கித் திரும்பியது. அவர்கள் கர்த்தரிடம் தங்கள் அங்கலாய்ப்பைச் சொல்லி முறையிட்டார்கள். கர்த்தர் அவர்களைக் காப்பாற்றும்படி தெபொராள் என்னும் பெண்ணை எழுப்பினார். பொதுவெளியில் கர்த்தருக்காகப் பயன்படுத்தப்பட்ட அரிதான பெண்களில் இவளும் ஒருத்தி. இவள் தன் கணவன் லபிதோத்துக்கு ஒரு நல்ல மனைவியாக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு நீதிபதியாக, மக்களின் எண்ணங்களைத் தூண்டி எழுப்பும் ஒரு கவிஞராக, வரும் காரியங்களை முன்கூட்டியே நிதானித்துச் சொன்ன ஒரு தீர்க்கதரிசியாக, தயங்கி நின்ற பாராக்குக்கு தைரியம் கொடுத்த ஒரு நல்ல ஆற்றுப்படுத்துநராக பன்முகத் தன்மை கொண்டவளாக விளங்கினாள். ஆம் கர்த்தர் பல்வேறு பணிகளில் இவளைப் பயன்படுத்தினாள். தெபொராள் என்பதற்கு “தேனீ” என்று பொருள். பெயருக்கு ஏற்றாற்போல, சுறுசுறுப்பான உழைப்பாளியாகவும், பிறருக்குப் பயனுள்ள பாத்திரமாகவும் விளங்கினாள்.
அவள் இருந்த இடம் “தெபொராளின் பேரீட்ச மரம்” என்று அழைக்கப்பட்டது. பேரீட்சை புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, துதி, வெற்றி போன்றவற்றுக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆம் இவளிடம் வருகிற மக்கள் இவ்விதமான அனுபவங்களைப் பெற்றுச் சென்றார்கள். இன்றைக்கு நம்மிடம் ஆறுதலுக்காகவோ ஆலோசனைக்காகவோ வருகிற மக்கள் மகிழ்ச்சியோடும், புத்துணர்ச்சியோடும், துதியோடும் வெற்றியோடும் செல்கிறார்களா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. மேலும் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக்கொண்டாள். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் ஒரு சிறப்பான நோக்கத்துக்காகவும், தனித்துவமானவர்களாக இருக்கும்படி தெரிந்துகொண்டிருக்கிறார். கர்த்தர் நமக்கு என்ன வரம் கொடுத்திருக்கிறாரோ அதைப் பயன்படுத்த வேண்டும். தன்னிடம் இல்லாத ஒன்றுக்காகக் கவலைப்படவோ அல்லது பிறரிடம் இருப்பதை தான் அடைவதற்காக போராடவோ கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஊழியம் அதை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும்.
தெபொராள் தனக்கென்று ஓர் எல்லைக் கோட்டை வரையறுத்துக்கொண்டு, ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவில் பேரீட்ச மரங்களின் கீழே குடியிருந்து தன் சேவையை ஆற்றினாள். ராமா என்றால் “உன்னதம்”, பெத்தேல் என்றால் “தேவனுடைய வீடு” என்று பொருள். தன்னைச் சுற்றிலும் ஓர் ஆவிக்குரிய சூழ்நிலை இருக்கும்படி பார்த்துக்கொண்டாள். மேலும் தன்னிடம் வருகிறவர்களை ஆவிக்குரிய உன்னத அனுபவத்துக்கு நேராக நடத்தினாள், அல்லது தேவனுடைய வீட்டுக்கு நேராக நடத்தினாள். இதுவே நம்முடைய ஊழியங்களில் நடைபெற வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இவை இரண்டும் செய்யப்படாத ஊழியம் ஊழியமாக இராது. இல்லையேல் அது தனிமனித துதிபாடலுக்கு வழிவகுத்துவிடும். மக்கள் தனிப்பட்ட முறையில் ஆவிக்குரிய உயர்ந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும், அடுத்ததாக அவர்கள் உள்ளூர் சபையின் முக்கியத்துவத்தை உணரச் செய்ய வேண்டும். இதுவே ஒரு விசுவாசி கர்த்தரில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான வழியாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்திலும் புதிய ஏற்பாட்டு வசனங்களின் எல்லைக்கு உட்பட்டு பெண்கள் செய்யக்கூடிய பல்வேறு ஊழியங்கள் இருக்கின்றன. அவ்வாறு செய்வோமானால், அதுவே கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையாகவும், பிறருக்கு ஆசீர்வாதமாகவும் அமையும்.