2023 யூன் 26 (வேத பகுதி: ரூத் 3,14 முதல் 15 வரை)
- June26
“அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்” (வசனம் 14).
இரவு முழுவதும் போவாசும் ரூத்தும் தனிமையில் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் எவ்விதப் பாவமும் நடந்துவிடுவதற்கு இடங்கொடுக்கவில்லை. உண்மையான அன்பு அவர்களுக்கு இடையில் இருந்தது. ஆயினும் மாம்சத்தின் இச்சைக்கு அவர்கள் ஆட்கொள்ளப்படவில்லை. போவாஸ் ஒரு கண்ணியம் மிக்க மனிதனாக நடந்துகொண்டான். ஆனால், ஏன், “களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம்” என்று அவன் சொல்ல வேண்டும் (வசனம் 14)? தங்களைத் திருமண பந்தத்தில் இணைத்துகொள்ள இருவருக்கும் விருப்பம் இருக்கிறது. ஆயினும் இந்த விருப்பம், இவனிலும் நெருங்கிய உறவினனாகிய சுதந்தரவாளிக்குத் தெரியக்கூடாது என்று விரும்பினான். ரூத் இரவு நேரத்தில் களத்திற்கு வந்துபோனாள் என்று ஊராருக்குத் தெரிந்தால், அது சுதந்தரவாளியின் காதுக்கும் செல்லும். பின்னர் எவ்வாறு அவன் மனபூர்வமாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வான்? பின்னர் எவ்வாறு கர்த்தருடைய சித்தம் நடைபெறும் என்று போவாசும் ரூத்தும் கூறிக்கொள்ள முடியும்?
இருவரும் வயல் வெளியில் தங்கியிருந்ததைக் குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள்? சந்தேகப்படவும் தவறாக யோசிக்கவும் இடம் உண்டாகும் அல்லவா? இருவரும் நேர்மையுடன் நடந்துகொண்டார்கள் என்பது உண்மைதான்? ஆயினும் மனிதர்கள் முன்பாகவும் தங்கள் சாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று பிரயாசப்பட்டார்கள். நல்ல மனசாட்சியை மட்டுமல்ல, நல்ல பெயரையும் காத்துக்கொள்ள வேண்டும். “கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 8,21) என்று பவுல் கூறுகிறார். மேலும் நெருங்கிய சுதந்தரவாளியின் சுதந்தரமும் சுயாதீனமும் பாதிக்காதவண்ணம் நடந்துகொண்டார்கள். என்னுடைய பலம் பிறர் பலவீனம் அடையும்படி நடந்துகொள்ளக்கூடாது. “பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே” (1 கொரிந்தியர் 8,11) என்று உடன் சகோதரர்களின்மீதுள்ள அக்கறையை பவுல் வெளிப்படுத்துகிறார்.
ஆனால் ரூத்தைத் தன்னிடம் அனுப்பி வைத்த நகோமிக்கு என்ன பதில் சொல்வது? நான் உன்னை மணமுடிக்க விருப்பமாயிருக்கிறேன் என்று ரூத்துக்கு எவ்வாறு புரியவைப்பது? அதற்கான பதிலே, “அவளுடைய போர்வையில் ஆறுபடி வாற்கோதுமையை போட்டு அனுப்பிவிட்ட செயல்” (காண்க: வசனம் 15). அவளால் எவ்வளவு சுமக்க முடியுமோ அவ்வளவு வாற்கோதுமையை தலையில் ஏற்றிவிட்டான். போவாஸ் நேர்மையானவன் மட்டுமல்ல, ஞானவானும்கூட. ஊராருக்கும், தன்னிலும் நெருங்கிய உறவினனுக்கும் என்ன செய்தி சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னான். நகோமிக்கும் ரூத்துக்கும் என்ன செய்தி சொல்ல வேண்டுமோ அதையும் செய்தான். அந்த ஆறுபடி வாற்கோதுமை போவாசின் விருப்பத்துக்கு உத்தரவாதமளிக்கும். நம்முடைய ஆத்ம மணவாளன் நம்மை மீட்க வருவதாகச் சொல்லியிருக்கிறாரே அதற்கான உத்தரவாதம் என்ன? “அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” (எபேசியர் 1,14) என்று பவுல் கூறுகிறார். ஆகவே நம்முடைய மீட்பும் உறுதியானது, பத்திரமானது, பாதுகாப்பானது. ஆகவே நாமும் நம்பிக்கையும் தைரியமும் உடையவர்களாயிருப்போம்.