June

குறைவுகளில் கர்த்தரை தேடுதல்

2023 யூன் 19 (வேத பகுதி: ரூத் 3,1)

  • June 19
❚❚

“பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனா?” (வசனம் 1).

கோதுமை அறுவடையும் வாற்கோதுமை அறுவடையும் முடிகிற வரைக்கும் ரூத் போவாசின் வயலில் கதிர் பொறுக்கினாள்; தினமும் அவள் தன் மாமியாரோடு தங்கியிருந்தாள் (வசனம் 2,23). இந்த நாட்களில் போவாசும் ரூத்தும் பேசிக்கொண்டதாக எந்தக் குறிப்பையும் நாம் காண்கிறதில்லை. போவாசின் கட்டளைக்கு மாறாக நகோமியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வேலைக்காரிகளோடு அவள் கதிர்பொறுக்கினாள். இந்த பணிப்பெண்கள் தூரத்தில் போவாசைப் பின்பற்றுகிறவர்களுக்கு அடையாளமாயிருக்கிறார்கள். பல நேரங்களில் நாமும் கூட இவ்விதமான முடிவை எடுத்து கர்த்தரைத் தூரத்தில் பின்பற்றுகிறவர்களாகிறோம். மேலும் அவள் தன் மாமியோடு தங்கியிருப்பதில் திருப்தி அடைந்திருந்தாள். கோதுமையும், வாற்கோதுமையும் நம்முடைய சரீரத்துக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. மூத்த விசுவாசிகளின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் இருப்பதில் தவறில்லை. ஆயினும் ஒவ்வொரு விசுவாசியும் தனித்துவமானவர்கள், சுயாதீனமானவர்கள். அவர்கள் கர்த்தரோடு பழகுவதிலும் அவரோடு தங்கியிருப்பதிலுமே திருப்தி அடைய வேண்டும். அவரே நம்முடைய முடிவான இலக்காக இருக்க வேண்டும்.

பல நேரங்களில் நாமும்கூட மாம்சீக காரியங்களில் திருப்தியடைந்தவர்களாக கர்த்தரை விட்டுப் பின்வாங்கிவிடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் முக்கியமான சீடர்களில் ஒருவனாகிய பேதுரு, அவர் கைதுபண்ணப்பட்டபோது தூரத்தில் அவரைப் பின்பற்றிச் சென்றான். போர்ச் சேவர்களின் கூட்டத்தாரோடு நெருப்பு மூட்டப்பட்ட இடத்தில் அவர்களோடு அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான். முடிவில் இது அவனை வேலைக்காரப் பெண்ணிடம்கூட அவரை மறுதலிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது. ஆயினும் ஆண்டவரின் மாறாத அன்பு அவனை மீட்டெடுத்தது. ஒரேயொரு பார்வையின் மூலமாக பேதுருவை தன் பக்கமாக இழுத்துக்கொண்டார். அவர் நம்மிடத்தில் முன்பு அன்புகூர்ந்திருக்கிறார். நம்முடைய குறைவானதும், மாறுபடுகிறதுமான அன்பு, அவருடைய அன்பில் மாற்றத்தைக் கொண்டுவராது. நம்மை அவர்பக்கம் இழுத்துக்கொள்வதிலேயே கருத்துடன் செயல்படும்.

இப்பொழுது அறுவடை காலம் முடிந்துவிட்டது. கதிர்பொறுக்கும் வேலை முடிந்துவிட்டது. வீட்டுக்கு தானியம் வருவது நின்றுபோனது. இனி என்ன செய்வது? இப்பொழுது ரூத்தின் எதிர்கால நலன் குறித்த சிந்தனை நகோமிக்கு வந்தது. பல வேளைகளில் குறைவுகள் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன என்றால் மிகையல்ல. “என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனா?” (வசனம் 1). நகோமிக்கு இப்பொழுது போவாசைக் குறித்த நினைவு வந்தது. “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2) என்பது முதிர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த யோவான் அப்போஸ்தலனின் வேண்டுதல். முதலாவது ஆத்துமா வாழ வேண்டும், பிற்பாடு ஆத்துமாவைப் போலவே மற்ற எல்லாக் காரியங்களிலும் செழிப்படைய வேண்டும். உலக நன்மைகளும் சரீர ஆசீர்வாதங்களும் நம்மைக் கிறிஸ்துவின் பக்கம் இழுத்துச் செல்லும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமில்லை. நம்முடைய ஆத்துமா நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்கும்போது  மட்டுமே நம்முடைய பிற காரியங்களும் சவுக்கியமாக இருக்கும். நகோமியின் சிந்தனை போவாசை நோக்கித் திரும்பியதுபோல நம்முடைய சிந்தனைகளும் கர்த்தரை நோக்கித் திரும்பட்டும்.