July

அன்னாளின் ஜெபம்

2023 யூலை 9 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,11)

  • July 9
❚❚

“சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்” (வசனம் 11).

“சேனைகளின் கர்த்தாவே” என்ற அடைமொழியோடு ஆண்டவரைக் கூப்பிட்டு அன்னாள் தன் ஜெபத்தைத் தொடங்கினாள் (வசனம் 11). கடவுளைக் குறிக்கக்கூடிய இந்த வார்த்தை, முதலாம் சாமுவேல் நூலில்தான் முதன் முதலாகச் சொல்லப்பட்டுள்ளது (1:3). இதற்கு நம்முடைய கண்களுக்குத் தெரியாத வல்லமைமிக்க படைகளைக் கொண்டிருக்கிற கர்த்தர் பரலோகத்திலும் பூலோகத்திலும் ஆட்சி செய்கிறார் என்று பொருள். அன்னாள் தனக்கு நேரிட்ட சோதனையை ஒரு போராகக் கருதி, தான் தாக்கப்பட்டதாக உணர்ந்தாள். ஆகவே சேனைகளின் கர்த்தரைத் தன் பாதுகாவலராக இருக்கும்படியும் தனக்கு உதவி செய்யும்படியும் அழைத்தாள். தான் யாரிடம் ஜெபிக்கிறோம் என்ற அறிவும் உணர்வும் அவளுக்கு இருந்தது. நம்முடைய ஜெபங்கள் வழக்கமான ஒன்றாக இல்லாமல், நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப உதவி செய்யக்கூடிய கடவுளின் பெயரை அறிந்தவர்களாக ஜெபிப்போம். இதற்கு கடவுளைப் பற்றிய அறிவும், வேதத்தைப் பற்றிய அறிவும் நமக்கு அவசியம்.

மேலும் அன்னாள் வரலாற்றின் ஊடாகக் கர்த்தரை அறிந்துகொண்டாள். “லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்” (ஆதியாகமம் 29,31). அவளுக்கு முதன் முதலாக ஆண் மகன் பிறந்தபோது, “கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்” (ஆதியாகமம் 29,32) என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். ஆகவே அன்னாளும், “தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து” என்று ஜெபித்தாள். அடுத்ததாக “மறவாமல் நினைத்தருளி” என்று கர்த்தரை உடன்படிக்கையின் தேவனாகப் பாவித்து ஜெபித்தாள். “தேவன் அவர்கள் (இஸ்ரவேலர்) பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (யாத்திராகமம் 2,24 முதல் 25) என்று யாத்திராகமத்தில் சொல்லப்பட்ட வாக்கியத்தை தன் ஜெபத்தில் பயன்படுத்தினாள். இந்தச் சுருக்கமான ஜெபத்தில், “உம்முடைய அடியாள்” என்னும் வார்த்தையை இருமுறை பயன்படுத்தினாள். நான் தேவனுக்கு முற்றிலும் ஒப்புவிக்கப்பட்ட அடிமை என்று கூறினாள். புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலன் தன்னை, அடிமை என்ற பொருளிலேயே ஊழியக்காரன் என்று அழைக்கிறார் (ரோமர் 1,1). நாம் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்று அவர் நம்மைக் குறித்தும் சொல்கிறார் (ரோமர் 6,22).

தனக்கு ஓர் ஆண் பிள்ளை கொடுத்தால் அவனை வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய சேவைக்காக ஒப்புவிப்பேன் என்று பொருத்தனை பண்ணினாள். இது தேவனுடன் பேரம் பேசுவது அல்ல, மாறாக முற்றிலும் ஒப்புவித்தலுக்கான அடையாளம். இவள் லேவி குடும்பத்தைச் சேர்ந்தவள், லேவியர்கள் எப்பொழுதும் தேவனுக்குச் சொந்தமானவர்கள். ஆனால் அவர்கள் முப்பது வயதுக்குப் பிறகே ஆசாரிப்புக்கூடாரப் பணிக்கு வரமுடியும். ஆனால் பிறந்தது முதலே என் மகனை ஊழியத்துக்கு ஒப்புவிக்கிறேன் என்பது கூடுதல் ஒப்புவித்தலின் அறிகுறியாகும். அதுபோலவே நசரேயனாக ஒப்புவித்தலும். இது அவளுடைய முதல் அன்பு, முதல் விருப்பம் தேவனைச் சேர்ந்தது என்பதை குறிக்கிறது. அவள் தான் பெற்றெடுக்கப்போகும் பிள்ளையைக் காட்டிலும் உம்மை நேசிக்கிறேன் என்று சொன்னாள். நம்முடைய அன்பும் ஒப்புவித்தலும் எவ்வாறு இருக்கிறது? சிந்திப்போம்!