January

ராகாபின் விசுவாசம்

2023 ஜனவரி 14 (வேத பகுதி: யோசுவா 2,1 முதல் 15 வரை)

  • January 14
❚❚

“கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப் பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்” (வசனம்  9).

எரிகோ மிகவும் பெரிய நகரம். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள். ஆயினும் ராகாப் என்னும் பெண்ணின் பெயர் மட்டும் இங்கு சொல்லப்பட்டுள்ளது. அது அழிக்கப்பட்டது எனினும் ஒரேயொரு பெண்ணின் விசுவாசத்தால் அவளும் அவளின் குடும்பத்தாரும் அழிவினின்று  காப்பாற்றப்பட்டார்கள். அவள் பெயர் ராகாப். அவள் வேசி என்று சொல்லப்பட்டவள். ஆயினும் தேவ கிருபையால் மன்னிப்பைப் பெற்றவள். விசுவாசத்தால் விடுதலை பெற்றவள். புதிய ஏற்பாட்டிலும் இவள் பெயர் பதிவு செய்யப்பட்டு விசுவாசத்துக்காக பாராட்டப் பெற்றவள். அவள் வரலாற்றில் இடம் பெற்றாள். கிறிஸ்துவுக்குள்ளாக நாம் பெற்றிருக்கிற ஆவிக்குரிய வரலாறுக்கு அவள் நமக்கு ஒரு சித்திரமாயிருக்கிறாள்.

அவள் ஒரு பாவி. நாம் எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையை இழந்தவர்களாகவே இருக்கிறோம் (ரோமர் 3,23). அவள் அழிவுக்கு நேராக இருந்தது போல, நாமும் தேவகோபாக்கினையின் அழிவுக்கு ஆட்பட்டிருக்கிறோம். அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தாள். விசுவாசம் கேள்வியினால் வருகிறது. கேள்வி தேவனுடைய வசனத்தினால் வருகிறது (ரோமர் 10,17). ராகாப் இஸ்ரவேலின் விடுதலைச் செய்தியைக் கேள்விப்பட்டாள். செங்கடலைக் கர்த்தர் வற்றிப்போகப் பண்ணினதையும் எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டாள் (வசனம் 10). அதை நம்பினாள், விசுவாசித்தாள், தன்னுடைய மனதை இத்தகைய காரியத்தைச் செய்த கர்த்தரின்மீது வைத்தாள். “கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தார்” (வசனம் 9) என்று ஆமோதித்ததின் விளைவாக அதிலிருந்து தானும், தன் குடும்பத்தாரும் காப்பாற்றப்பட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவளுடைய விசுவாசம் தீர்மானத்துக்கு நேராக வழிநடத்தியது. பிறகு தன்னுடைய விசுவாசத்தை செயல்படுத்தினாள். “அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு,  வேறு வழியே அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்” (யாக்கோபு 2,25) என்று யாக்கோபு இவருடைய விசுவாசக் கிரியையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.

அவளுடைய விசுவாசம் அவளை அழிவிலிருந்து காப்பாற்றியது. அவள் இரட்சிக்கப்பட்டாள். தேவனுடைய செயல்களை எரிகோ பட்டணத்தார் அனைவரும் கேள்விப்பட்டார்கள். ஆயினும் ராகாப் மட்டுமே அதை விசுவாசத்துடன் கேட்டு கீழ்ப்படிந்தாள். விசுவாசியாத மற்றவர்கள் அழிந்துபோனபோது தானும் தன் குடும்பத்தாரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் (எபிரெயர் 11,31).

இன்றைக்கு நாம் கேள்விப்படுகிற, வாசிக்கிற, கர்த்தருடைய வார்த்தையை எவ்விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவள் முன்மாதிரியாக விளங்குகிறாள். வேதத்தின் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர் அவளுடைய வாழ்க்கை முறையையோ, அவளுடைய பொய்களையோ பாராட்டவில்லை. அவள் தவறானவள்தான் என்று சொல்லுகிறார். ஆயினும் அவளிடத்தில் இருந்த நம்பிக்கையின் தீப்பொறி, அன்பு, விசுவாசம் ஆகியவை குப்பை கூளங்களான அவளுடைய தீய செயல்களை தீக்கிரையாக்கிவிட்டன. அவளுடைய விசுவாசம் செயலிலும், மற்றவர்களை காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கியது. தன் சொந்த ஊர் மக்களால் விசாரிக்கப்பட்டாள். கடுமையாக நடத்தப்பட்டாள். ஆயினும் அவள் விடாப்பிடியாக தேவனுடைய மக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டாள். இவளுடைய விசுவாசம் இவளை இயேசுவின் வம்ச வழிப்பட்டியலில் இடம் பிடிக்கச் செய்தது (மத்தேயு 1,5). அவளுடைய விசுவாசம் அவளுடைய ஆத்துமாவை மிகப்பெரிய விசாலத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.