2023 ஜனவரி 4 (வேத பகுதி: ஆதியாகமம் 46:5 முதல் 34)
- January 4
“நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்” (வசனம் 34).
எகிப்து இந்த உலகத்துக்கு அடையாளமாயிருக்கிறது. இரட்சிக்கப்படாத இந்த உலகத்துக்கு நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் பிள்ளைகள் ஆகாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. இந்த உலகம் கிறிஸ்துவைப் பகைக்கிறது, ஆகவே அது நம்மையும் பகைக்கிறது. நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், இந்த உலகத்துக்கு உரியவர்கள் அல்லர். உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்றே வேதம் கூறுகிறது. இந்த உலகத்துக்குப் பிரியமாயிருந்தால் நம்மால் தேவனுக்குப் பிரியமாய் இருக்க முடியாது. நாம் இந்த உலகத்தில்தான் வாழ வேண்டும், ஆயினும் இந்த உலகத்திலிருந்து பிரிந்தும் வாழ வேண்டும். யாக்கோபின் குடும்பத்தார் எப்படி வாழ்ந்தார்கள் என்பது நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறது. “
யோசேப்பும் யாக்கோபும் ஏறத்தாழ இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து சந்தித்துக்கொள்கிறார்கள். இருவருக்கும் இடையில் பாசமழை பெருக்கெடுத்து ஓடுகிறது. “நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன்” (வசனம் 30) என்று யாக்கோபு கூறினான். கிறிஸ்துவின்மீதுள்ள அன்பே நாம் இந்த உலகத்திலிருந்து பிரிந்து வாழ்வதற்கான முழுமுதற் காரணமாக இருக்கிறது. நம்முடைய ஆத்ம மணாளன்மீது நாம் வைக்கும் அன்பே நம்முடைய இருதயத்தை உலகத்தின் பக்கமிருந்து திருப்பக்கூடியதாயிருக்கிறது. அடுத்ததாக யோசேப்பு இவர்களைக் குறித்து பார்வோனிடம் அறிமுகப்படுத்தும்போது, “அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்” (வசனம் 32) என்று கூறினான். எவ்வித ஒளிவுமறைவுமின்றி, தங்களுடைய சாட்சியை இந்த உலகத்தாரிடம் பகிர்ந்துகொள்வது அவசியம். நாம் இந்த உலகத்தில் அவருடைய சாட்சிகளாக இருக்கிறோம். ஆகவே நாம் கிறிஸ்தவர்கள் என்பதை எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது. மேய்ப்பர்கள் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்தாம் (வசனம் 34). ஆயினும் யோசேப்பு அதைச் சொல்லத் தயங்கவில்லை. ஆகவே இந்த உலகம் நம்மை எப்படி எடுத்துக்கொள்ளுமோ என்று கவலைப்படாமல் நம்முடைய கிறிஸ்தவ அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். “அந்த துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள் ” என்று பேதுரு கூறுகிறார் (1 பேதுரு 4:4).
மேலும் யாக்கோபின் குடும்பத்தார் எகிப்தில் குடியேறினாலும், மக்களோடு மக்களாக வாழாமல் கோசேன் என்னும் மாநிலத்தில் தனியாக வசிக்கத் தொடங்கினர் (வசனம் 34). கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த உலகத்திலிருந்து பிரிந்து வாழ்வதற்கான ஓர் எல்லைக் கோட்டை வரையறுத்துக்கொள்ள வேண்டும். எதை வேண்டுமானாலும் அனுபவிக்க நமக்கு அதிகாரம் இருக்கிறது. ஆயினும் எல்லாம் விசுவாசிகளுக்குத் தகுதியானது அல்ல. கிறிஸ்து எனக்கு முன்னே உலகம் எனக்குப் பின்னே என்பதே நம்முடைய தாரக மந்திரமாக இருக்கட்டும். காகம் நம்முடைய தலைக்கு மேல் பறக்காமல் இருக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அது நம்முடைய தலையில் கூடுகட்டாமல் தடுக்க முடியும்.