February

கிரயம் செலுத்துவதற்கான அழைப்பு

2023 பெப்ரவரி 25 (வேத பகுதி: யோசுவா 24,19 முதல் 24 வரை)

  • February 25
❚❚

“நீங்கள் கர்த்தரைச் சேவிக்க மாட்டீர்கள்”( வசனம் 19).

“நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்; அவரே நம்முடைய தேவன்” (வசனம் 18) என்னும் இஸ்ரயேல் மக்களின் வாய்மொழியை யோசுவா அர்த்தப்பூர்வமாக மாற்ற விரும்பினான். அவர்களுடைய சொல்லையும் செயலையும் ஒன்றிணைக்க விரும்பினான். பல நேரங்களில், நாம் வாக்குறுதி அளிப்போம், நமக்கு நாமே பல தீர்மானங்களையும் எடுப்போம். காலப்போக்கில் அது தவறிப்போவதற்கும் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய அறிக்கைகள் வெற்று அறிக்கையாக இல்லாமல் செயலில் காண்பிக்கப்பட வேண்டியது அவசியம். மக்களின் உறுதிமொழியைக் கேட்ட யோசுவா அவர்களின் உள்ளான இருதயத்தை அறிந்து, அவர்களை நோக்கி, “நீங்கள் கர்த்தரைச் சேவிக்க மாட்டீர்கள்” (வசனம் 19) என்று கடிந்துகொண்டான். இது எதிர்மறையான வார்த்தை அல்ல, மாறாக வெற்று உறுதிமொழியின் அபாயத்தை உணர்த்தி, உள்ளப்பூர்வமான அறிக்கைக்கு நேராக அவர்களை நடத்துவதற்கான வார்த்தைகளே ஆகும்.

புதிய ஏற்பாட்டில், பேதுரு ஆண்டவரிடம், “உமது நிமித்தம் எல்லாரும் இடறல் அடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்” என்றும், “உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன்” என்று தான் என்ன சொல்கிறேன் என்பதன் பொருள் உணராமலேயே அறிக்கையிட்டான். அவனைப் பின்பற்றி “சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்” என்று வாசிக்கிறோம் (மத்தேயு 26,33 மற்றும் 35). ஆண்டவர் அவர்களுடைய உறுதிமொழியின் மெய்த்தன்மையை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார். பேதுருவிடம், “இந்த இராத்திரியிலே சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய்” என்றார். அது அப்படியே நடந்தது. பேதுருவை மறுதலிக்க வைக்க வேண்டும் என்பது ஆண்டவரின் விருப்பம் அல்ல. மனித மனதின் இயல்பை உணர்ந்தவராக இப்படிச் சொன்னார். மேலும் பின்பற்றி வருவேன் என்பதன் கிரயத்தை உணர்த்தினார்.

“ஜனங்கள் யோசுவாவை நோக்கி, அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்” (வசனம் 21). அப்படியானால், “இப்பொழுது உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்” என்று யோசுவா கூறினான் (வசனம் 23). இதுவே மக்களின் இயல்பையும், அவர்களுடைய நடத்தையையும் கண்காணித்த ஒரு மெய்யான தலைவனின் வழிநடத்தும் பண்பு. மக்கள் முழு மனதுடன் ஆண்டவரிடம் திரும்ப  வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருந்தது. இதைத்தான் ஆண்டவர் இயேசுவும், என்ன நேர்ந்தாலும் உம்மைப் பின்பற்றுவோம் என்று அறிக்கையிட்ட தம்முடைய சீடர்களிடம் உணர்த்த விரும்பினார். “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கம் கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடுகூட விழித்திருங்கள்” என்று வேண்டுகோள் வைத்தார். உண்மையிலேயே அங்கே என்ன நடந்தது, அவர்கள் அனைவரும் அங்கே தூங்கி விட்டார்கள். ஆவி உற்சாகமுள்ளது, மாம்சமோ பெலவீனமுள்ளது என்ற சத்தியத்தை வெளிப்படுத்தினார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து, “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று மூன்று முறை கேட்டு, பேதுருவின் அன்பை உறுதிப்படுத்தினார். ஆகவே நாமும் நம்முடைய தீர்மானங்களை, உறுதிமொழிகளை ஆவியின் உற்சாகத்தின் மிகுதியால் எடுத்தாலும், அதனுடைய கிரயத்தை உணர்ந்தவர்களாக அதை நிறைவேற்றுவதற்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருப்போம்.