February

விசுவாசிகளின் அழைப்பு

2023 பெப்ரவரி 23 (வேத பகுதி: யோசுவா 24,3 முதல் 13 வரை)

  • February 23
❚❚

“நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டு வந்து, அவனைக் கானான் தேசமெங்கும் சங்கரிக்கச் செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்” (வசனம் 3).

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்” (வசனம் 2) என்னும் அதிகாரமிக்க வார்த்தைகளோடு யோசுவா தன்னுடைய உரையைத் தொடங்கினான். இங்கு தேவன் தம்முடைய உள்ளக்கிடக்கையை யோசுவாவின் மூலமாக மக்களுக்கு வெளிப்படுத்தினார். இன்றைக்கும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்கள் மூலமாகப் பேசுகிறார். பிரசங்க பீடத்திலிருந்து வெளிப்படுகிற வார்த்தைகளை தேவவார்த்தைகளாக எடுத்துக்கொள்வது அரிதாகி வருகிறது. பிரசங்கியார்களும் தங்கள் சொந்தக் காரியங்களையும், விருப்பு வெறுப்புகளையும் அள்ளித் தெளிப்பதால், மக்களுக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்றுவதிலும் வியப்பில்லை. இன்றியமையாத காரியங்களைப் பேசும்போது, பவுல் அப்போஸ்தலனும், “நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறவதாவது” (1 கொரிந்தியர் 7,10) என்று வலியுறுத்துகிறார்.

இஸ்ரயேல் நாட்டின் உதயம் என்பது ஆபிரகாமின் அழைப்பில் இருந்து தொடங்குகிறது. ஆபிரகாமும் அவனுடைய குடும்பத்தாரும், தேவன் அவர்களை அழைக்கும் வரை யூப்ரடீஸ் நதிக்கு அப்பாலுள்ள கல்தேய தேசத்திலுள்ள ஊர் என்கிற பட்டணத்தில் சிலை வணக்கம் செய்கிறவர்களாயிருந்தார்கள். அந்நிய தேவர்களைச் சேவித்துக்கொண்டிருந்த அவனை தேவன் தம்முடைய கிருபையினாலும், அன்பினாலும் தெரிந்தெடுத்து அழைத்தார். அவனுடைய அழைப்பும், அவனுக்கு வழங்கப்பட்ட தேசமும் முற்றிலும் கர்த்தரைச் சார்ந்ததாகவே இருந்தது. யோசுவாவின் வார்த்தைப் பிரயோகங்களைக் கவனியுங்கள்: ஆபிரகாமை “நான் அழைத்தேன்” (வசனம் 3), அவன் சந்ததிக்கு கானான் நாட்டை “நான் கொடுத்தேன்” (வசனம் 3), எகிப்திலிருந்து அவர்களைப் “புறப்படப்பண்ணினேன்” (வசனம் 5), வாக்குத்தத்த நாட்டுக்குக் “கொண்டுவந்தேன்” (வசனம் 8), எதிரிகளை உங்கள் கையில், “ஒப்புக்கொடுத்தேன்”  (வசனம் 8), அவர்களை “அழித்தேன்” (வசனம் 8), அவர்களிடமிருந்து உங்களைத் “தப்புவித்தேன்”( வசனம் 10). கிருபையின் அளவற்ற ஐசுவரியத்தைக் காட்டும்படி நம்மையும் இவ்விதமாகவே அழைத்திருக்கிறார்.

“சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்” (1 கொரிந்தியர் 1,26) என்று பவுல் நம்முடைய அழைப்பின் மேன்மையைக் குறித்து வியந்து பேசுகிறார். தகுதியற்றவர்களாவும், பைத்தியர்களாகவும், பலவீனமானவர்களாகவும், இழிவானவர்களாகவும், அற்பர்களாயும், ஒன்றும் இல்லாதவர்களுமாயிருந்த நம்மையும் அழைத்து, கிறிஸ்து இயேசுவுக்கு உட்படுத்தியிருக்கிறார். தேவன் ஆபிரகாமுக்கு இந்தப் பூமியில் ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்து அழைத்தார். ஆயினும் அவன் அதிலும் மேன்மையான பரம நாட்டை நாடினான். இந்த உலகத்தில் கூடாரங்களில் குடியிருந்து, “தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரமுள்ள நகரத்துக்காகக்” காத்திருந்தான் (எபிரெயர் 11,9 முதல் 10). அவனுடைய பார்வை கீழ் நோக்கி அல்ல, மேல்நோக்கியே இருந்தது. தேவன் நம்மை, “கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் அழைத்திருக்கிறார்” (எபேசியர் 1,3). நாம் மேலானவைகளை நாடும்படி அழைக்கப்பட்டவர்கள் (கொலோசேயர் 3,1 முதல் 2). இந்த அழைப்பு நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது? நம்முடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாய்ப் பிடித்துக்கொள்வோம்.