February

யோசுவாவின் இறுதிக்காலம்

2023 பெப்ரவரி 19 (வேத பகுதி: யோசுவா 23,1 முதல் 2 வரை)

  • February 19
❚❚

“அநேக நாள் சென்ற பின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது…” (வசனம் 1).

ஒரு தலைவராக யோசுவாவின் ஊழியம் முடிவுக்கு வருகிறது. அவர் தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தை எட்டுகிறார். மோசேயைப் போலவே, யோசுவாவும் மக்களின் தலைவர்களையும் பொறுப்பானவர்களையும் அழைத்து கடந்த காலத்தில் கர்த்தர் செய்தவைகளையும், நிகழ்காலத்தில் மக்கள் நடந்துகொள்ள முறைகளையும், எதிர்காலத்திற்கான எச்சரிப்புகளையும் வழங்குகிறார். வயது மூப்பு மற்றும் நெருங்கி வரும் மரணம் இந்த வீரத் தலைவரை இஸ்ரவேலின் அதிபதிகளை சீலோவில் தன்னிடம் அழைக்கத் தூண்டியது. இவ்வாறு அழைத்து அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்குவது வேதத்தின் பாரம்பரியம். யாக்கோபு தன்னுடைய பிள்ளைகளை அழைத்துப் பேசினார். யோசேப்பு தன் அந்நிய காலத்தில் அழைத்துப் பேசினார். மோசே பேசினார். நிச்சயமாக மூத்தவர்களின் ஆலோசனை இளந்தலைமுறை விசுவாசிகளுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. சாமுவேல் தீர்க்கதரிசி தன்னுடைய இறுதிக்காலத்தில், “இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்?? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்?? யாருக்கு அநியாயஞ்செய்தேன்?? யாருக்கு இடுக்கண்செய்தேன்?? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்?? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன்” என்றான் (1 சாமுவேல் 12,3). இன்றைய நாட்களில் சபையின் தலைவர்கள் இத்தகையொரு சாட்சியை வழங்க முடியுமா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய காரியம்.

யோசுவாவின் இந்த இறுதியுரையும் அவரது நோக்கங்களும் புதிய ஏற்பாட்டின் புகழ்மிக்க தலைவர் பேதுருவின் இறுதி உரையோடு ஒத்துப்போவதையும் காணமுடிகிறது. “ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்” (2 பேதுரு 1,10 முதல் 14).

இஸ்ரவேலைச் சுற்றியுள்ள எல்லா எதிரிகளிடமிருந்தும் கர்த்தர் இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்த நீண்ட காலத்திற்குப் பிறகு யோசுவாவின் ஓய்வு அறிவிக்கப்பட்டது (வசனம் 1). யோசுவாவுக்கு கர்த்தர் கொடுத்த காலம் முடிந்துவிட்டது. அவர் பல போர்களில் போராடி வெற்றி பெற்றார்; தேசத்தைப் பகிர்ந்தளிப்பதில் பல சிரமங்களை எதிர்கொண்டார்; சில நேரங்களில் தோல்வியையும் சந்தித்தார். ஆயினும் அவர் தோல்வியின் போது கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினவராகவும், வெற்றிகளின் போது மகிழ்ச்சியானவராகவும் இருந்தார். இறுதியில் தேவன் தம்முடைய உண்மையுள்ள வேலைக்காரனுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்தார். ஆயினும் யோசுவா அனுபவித்த இளைப்பாறுதல் தற்காலிகமானது. நாம் கிறிஸ்துவில் இத்தகைய இளைப்பாறுதலை அனுபவிக்கிறோம் (எபிரெயர் 4,8 முதல் 9).