2023 பெப்ரவரி 17 (வேத பகுதி: யோசுவா 22,10 முதல் 20 வரை)
- February 17
“ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்” (வசனம் 10).
இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தபோது, அதன் நடுவிலிருந்து 12 கற்களை எடுத்து, கரையில் குவித்து வைத்து ஒரு நினைவுக் கற்குவியலை உண்டாக்கினார்கள். இது பின்வரும் சந்ததிக்கு ஆண்டவரின் அற்புதமான செயலை நினைவூட்டுவதற்காக அமைக்கப்பட்டது (அதிகாரம் 4). இந்த நினைவுக் கற்கள் இருக்கும்போது, ரூபன், காத், மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் வேறொரு நினைவுப் பலிபீடத்தைப் பெரியதாகக் கட்டினார்கள். “பொல்லாததாய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5,22) என்ற தேவ ஆலோசனை கிறிஸ்தவ வாழ்க்கையில் அடிக்கடியாகப் புறக்கணிக்கப்படுகிற ஒன்றாகவே இருக்கிறது. பல நேரங்களில் நாம் நல்ல நோக்கில் செய்கின்ற காரியங்கள் கூட பிறருக்குக் கெட்டதாய் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பலிபீடத்தைக் கட்டியதற்கான நோக்கம் நம்பத்தகுந்ததாகத் தோன்றினாலும், இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. ஒன்று தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செய்யப்பட்டது, மற்றொன்று மனித சிந்தனை மற்றும் திட்டமிடல் காரணமாக நிறுவப்பட்டது.
வெளிப்படுத்தப்பட்ட தேவ ஆலோசனையுடன் நாம் வேறு எதையும் கூட்டினாலும், அல்லது அதிலிருந்து ஒன்றைக் குறைத்தாலும் இறுதியில் அது பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிடும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இன்றைக்கு அனைத்துத் திருச்சபைகளாலும் இணைந்தோ, தனித்தனி சபைகளாகவோ ஆசரிக்கிற, வேதத்தில் கூறப்படாத பண்டிகைகள், சடங்குகள், முறைமைகள், கொண்டாட்டங்கள், ஆகியன யாவும் ஒரு காலத்தில் பக்தியுள்ள கிறிஸ்தவர்களால் நல்ல நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டவை என்பதை மறந்துவிட வேண்டாம். ஆயினும் அவை இன்றைய நாட்களில் வெற்றுச் சடங்காச்சாரங்களாக மாறி, மனித பெருமைக்கும் ஆடம்பரங்களுக்கும் அடையாளங்களாக மாறிவிட்டன என்பதே நிதர்சனம். வேதம் கூறும் ஆசரிப்புகளே நமக்கு பக்திவிருத்தியையும் ஐக்கியத்தையும் உண்டாக்கும்.
இத்தகைய புனிதச் சின்னங்கள் எதிர்காலத் தலைமுறைக்கு சாட்சியாக இருப்பதற்குப் பதிலாக, ஒரு கண்ணியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வனாந்தரத்தில் மோசேயினால் உயர்த்தப்பட்ட வெண்கலச் சர்ப்பம் பின்னாட்களில் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு கண்ணியாக மாறியது என்பதை நாம் காண்கிறோம். ஆகவேதான் எசேக்கியா இராஜா பிற வழிபாட்டுச் சிலைகளுடன் சேர்த்து இதையும் அழித்துப்போட்டான் (2 இராஜாக்கள் 18,4). யோர்தானுக்கு மேற்கே கானானில் இருந்த இஸ்ரவேல் புத்திரர் அந்தப் பலிபீடத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார்கள். எனவே அவர்கள் இந்த இரண்டரைக் கோத்திரத்துக்கு விரோதமாகப் போரிடும்படி சீலோவில் கூடினார்கள்” (வசனம் 12). முதிர்ந்த விசுவாசிகள் செய்யக்கூடிய சில நல்ல காரியங்கள்கூட பலவீனமுள்ள விசுவாசிகளின் மனசாட்சியை புண்படுத்திவிடும். “பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே” (1 கொரிந்தியர் 8,11) என்னும் பிறர் நலனைப் பற்றிப் பேசுகிற பவுலின் ஆலோசனை நாம் புறந்தள்ளக்கூடியது அல்ல. துரித நடவடிக்கைக்குமுன் பினெகாஸ் தலைமையில் சமாதானத் தூதுவர்கள் சென்றார்கள் (வசனம் 13 முதல் 14). நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள் என்பதற்கு ஏற்ப இவர்கள் போருக்கு முன் அமைதியை நாடினார்கள். பலிபீடம் கட்டியது பற்றிய தங்களது சந்தேகங்களை நேர்மையுடனும் அக்கறையுடனும் தெரிவித்தனர். எல்லாவற்றையும் நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்வது கசப்பையும், பகைமையையும் போக்கும். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்தேயு 5,9).