February

லேவியர்களின் முக்கியத்துவம்

2023 பெப்ரவரி 15 (வேத பகுதி: யோசுவா 21,9 முதல் 45 வரை )

  • February 15
❚❚

“இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுக்குட்பட நாற்பத்தெட்டு” (வசனம் 41).

லேவியர்களின் புத்திரருக்கு பிற கோத்திரங்களுக்கு நடுவே ஆங்காங்கே குடியிருப்பதற்கான இடத்தைக் கொடுத்தார். அடைக்கலப் பட்டணங்களிலும், இன் னும் பிற பட்டணங்களிலும் இவர்களுடைய குடியிருப்பு அமைந்திருந்தது. இவர்கள் நாடு முழுவதிலும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தார்கள். “யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்” (ஆதியாகமம் 49,7) என்ற யாக்கோபின் வார்த்தையும் இதன் வாயிலாக நிறைவேறியது. யாக்கோபின் வார்த்தைகள் இவர்களுக்கு எதிரானதாக இருப்பதுபோலத் தோன்றினாலும் இவர்கள் ஆசாரிய வகுப்பாக தெரிந்துகொள்ளப் பட்டபடியால் அது இவர்களுக்கு நன்மையாகவும் மாறியது. ஆதிக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவங்களினிமித்தம் எருசலேமை விட்டு உலகம் முழுவதும் சிதறிப்போனார்கள். இது இவர்களுக்கு ஏற்பட்ட ஒரு மோசமான நிகழ்வே. ஆயினும், “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்” (அப்போஸ்தலர்  8:4) என்று வாசிப்பதன் மூலமாக, தங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தையும் தேவன் நன்மைக்கு ஏதுவாக மாற்றினார் என்ற சத்தியத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

லேவியர்களில் முதல் சீட்டு ஆரோனின் பிள்ளைகளுக்கு விழுந்தது (வசனம் 10) என்பதன் வாயிலாக தேவனின் தெய்வீக சித்தத்தை நாம் அறிந்துகொள்கிறோம். இவர்கள் யூதா, சிமியோன், பென்யமீன் கோத்திரத்தார் நடுவில் தங்கள் குடியிருப்பைப் பெற்றார்கள். சர்வ ஞானியாகிய தேவனின் அற்புதமான செயல்களை இது தெரிவிக்கிறது. இப்பட்டணங்கள் எருசலேமுக்கு அருகில் இருந்தன. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கட்டப்படப்போகிற தேவாலயப் பணிக்கான இவர்களுடைய இன்றியமையாத தேவையை இது உணர்த்துகிறது. “உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது” (அப்போஸ்தலர் 15,18) என்ற கூற்று எத்தனை உண்மையானது! எபிரோன் ஆரோனின் பிள்ளைகளின் உடைமையாக மாறியது என்று அங்கு கூறப்பட்டுள்ளது (வசனம் 13). இது காலேபுக்குக் கொடுக்கப்பட்ட நகரம் (15,13). அவ்வாறாயின் காலேப் அதை தனிப்பட்ட முறையில் ஆசாரியர்களுக்கு பரிசாக அளித்ததாகத் தெரிகிறது. தேவனுடைய ஊழியக்காரர்களுக்காகவும், ஊழியத்துக்காகவும் தாராள மனதுடன் தங்கள் சொந்த சுதந்தரத்தைக் கொடுத்த காலேப் நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

“கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று” (வசனம் 45). தேவனுடைய பிள்ளைகளுக்கு தெய்வீக வாக்குறுதிகள் ஓர் அருமையான பொக்கிஷம். தேவன் நம்மை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதித்திருக்கிறார். அவையே நம்முடைய நோக்கமாகவும், மனதின் சிந்தையாகவும் இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு முயற்சியும் அதை தனிப்பட்ட முறையில் அதைக் கையகப்படுத்துவதற்கு நேராகவே இருக்க வேண்டும். அவருடைய கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பாக அதை அடைந்துகொள்வதே நம்முடைய மன்றாட்டாக இருக்க வேண்டும். அவருடைய சித்தத்தின்படி எதைக் கேட்டாலும் தருவேன் என்றும், “கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், நான் இதைச் செய்வேன்” (எசேக் கியேல் 36,36) வாக்களித்துள்ளார். “கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்” என்பதே அதற்கான வழி.