2023 பெப்ரவரி 4 (வேத பகுதி: யோசுவா 13,14 முதல் 33 வரை)
- February 4
“மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்” (வசனம் 15).
ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் தங்கள் சகோதரர்கள் பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் யோர்தானுக்கு இந்தப் பக்கத்திலேயே அதைத் தெரிந்துகொண்டார்கள். அதை “அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாக மோசே பகிர்ந்துகொடுத்தான்” (வசனம் 15) என்பது நாம் நினைவிற்கொள்ள வேண்டிய ஒரு சத்தியமாகும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் உறுப்பினர்களாக இருக்கும் நாம் அனைவரும் ஒரே மாதிரியான வரங்களையோ தாலந்துகளையோ பெற்றிருப்பது இல்லை. அதைப் பரிசுத்த ஆவியானவரே தீர்மானிக்கிறார். வரங்களில் பல வித்தியாசங்கள் உண்டு என்றும், ஊழியங்களில் வித்தியாசம் உண்டு என்றும், கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு என்றும் வாசிக்கிறோம். இவை எல்லாவற்றையும் எல்லாருக்குள்ளும் வசிக்கிற ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படி பகிர்ந்துகொடுக்கிறார் (வாசிக்க: 1 கொரிந்தியர் 12,4 முதல் 11).
ஆயினும் எல்லா வரங்களும், ஊழியங்களும், கிரியைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். யோர்தானைக் கடந்து நடைபெற்ற போர்களில் இந்த இரண்டரைக் கோத்திரத்தார் அவர்களுக்கான சுதந்தரத்தைப் பெற்றுத் தருவதில் பங்குவகித்தார்கள். “சரீரத்தில் பிரிவினை உண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக் குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படி … இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்” (1 கொரிந்தியர் 12,25). ஆகவே பிற விசுவாசிகளின் நலன் நாடுவது நம்முடைய தலையாய பொறுப்பாகும்.
லேவியின் புத்திரருக்கு நாட்டில் சுதந்தரம் ஒதுக்கப்படவில்லை (வசனம் 14). இதைக் குறித்து மோசே சொன்னதை யோசுவா உறுதிப்படுத்தினான். மேலும் பிற கோத்திரங்களுக்கு சுதந்தரம் ஒதுக்கப்படுவதற்கு முன்னரே இதை கூறுவது தவறான புரிந்துகொள்ளுதலைத் தவிர்க்கும். எல்லாவற்றையும் நேரடியாகப் பேசுவது நலம் பயக்கும். ஆயினும் லேவியின் புத்திரர் சிறப்பான அனுகூலத்தைப் பெற்றார்கள். ஆசரிப்புக்கூடாரத்தின் தகனபலிகளே அவர்களுடைய பங்கு. அதாவது பிற கோத்திரத்தார் கொடுக்கிற காணிக்கைகள், தசம பாகம் ஆகியவற்றிலிருந்து தங்கள் பங்கை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். பிறர் பெற்றுக்கொண்ட நிலத்திலிருந்து வரக்கூடிய மாம்சம், திராட்சை ரசம், எண்ணெய் மற்றும் தானியங்கள் ஆகியவற்றைப் பெற்றார்கள் (உபாகமம் 18,1 முதல் 8). கர்த்தருடைய பணியில் ஈடுபடுவோருக்கு அவர்களுடைய தேவைகளைச் சந்திப்பதற்குக் கர்த்தர் போதுமானவராக இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த எடுத்துக்காட்டைப் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்துகிறார். “ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்துக்குரியவைகளில் புசிக்கிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்துக்குரியவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாக வேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்” (1 கொரிந்தியர் 9,13 முதல் 14). நல்ல எஜமானராகிய நம்முடைய கர்த்தர் தம்முடைய ஊழியர்களின் மேல் மிகவும் அக்கறையுள்ளவராயிருக்கிறார். ஆகவே கர்த்தருடைய தயாளகுணத்தையும் நீதி தவறாமல் கொடுக்கும் கரத்தையும் நாம் எப்பொழுதும் சார்ந்துகொள்வோம்.