2023 டிசம்பர் 31 (வேத பகுதி: 1 சாமுவேல் 31,1 முதல் 13 வரை)
- December 31
“அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்” (வசனம் 6).
தாழ்மையோடு தொடங்கிய சவுலின் அரசாட்சி கில்போவா மலைச் சரிவின் மேடுகளில் அவமானத்தோடு நிறைவுற்றது. ஒரு கோழைத்தனமான முதியவராக, தனது வாழ்க்கையை முடிக்கும்படி தன் ஆயுததாரியிடம் கெஞ்சி, அதுவும் இயலாததால் தன் உயிரைத் தானே முடித்துக்கொண்டு மாண்டுபோனார். தாவீது அமலேக்கியரை வென்று, அவர்களது கொள்ளைப் பொருட்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது, சவுலும் அவனது படையும் தோல்வியடைந்து, தங்களது உடைமைகளை பெலிஸ்தியர்களிடம் இழந்துகொண்டிருந்தார்கள். தாவீதும் பாவம் செய்து, கர்த்தருடைய வழியைவிட்டு விலகிச் சென்றான். ஆயினும், நேரம்வாய்த்தபோது, அவன் கர்த்தரிடம் திரும்பினான், ஜெபம் செய்தான், சித்தத்தைத் நாடினான். சவுல் இவை எதையும் செய்யாதவனாக கர்த்தருடன் சீர்பொருந்தாமலேயே தன் வாழ்க்கையை இழந்துவிட்டான்.
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபமென்ன? தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வாழ்நாளெல்லாம் போராடியவன் சாதித்தது என்ன? அவன் கர்த்தரிடம் மனந்திரும்புவதற்குப் பதிலாக, யூதாசைப் போல தனது வாழ்க்கையைத் தானே முடித்துக்கொண்டான். கில்போவா மலைமேட்டிலேயே கிதியோன் மீதியானிருக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றிபெற்றான். ஆனால் இதே மலையிலேயே சவுல் தன் வீரர்களோடு பெலிஸ்தியர்களிடம் தோல்வியடைந்து இஸ்ரவேலருக்கு இகழ்ச்சியை உண்டுபண்ணினார்கள் (நியாயாதிபதிகள் 7,1 முதல் 3 வரை). கிதியோனைப் போல வெற்றியின் அடையாளத்தை இந்த உலகத்திற்கு விட்டுச் செல்கிறோமோ அல்லது சவுலைப் போல தோல்வியின் அடையாளத்தை இந்தச் சமுதாயத்திற்கு விட்டுச் செல்கிறோமா ?
ஆதாம் தொடங்கி மரணம் எல்லாரையும் ஆண்டுகொண்டது. எவரும் இதற்கு விதிவிலக்கல்லர். ஆயினும் சவுலைப் போல தன் சொந்த வாழ்க்கையை முடிக்கும் நிலைக்கு ஆளாக வேண்டாம். சவுல் என்னும் தனி மனிதனின் பாவம் இஸ்ரவேல் நாட்டை ஆண்டுகொண்டது. இந்தப் போரில் இஸ்ரவேலின் வீரர்கள் மாண்டார்கள், சவுலும் அவன் ஆயூததாரியும் இறந்தார்கள், யோனத்தானும் அவனுடைய உடன்பிறந்தோரும் செத்தார்கள். ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் எவ்வளவு விலைகொடுக்க வேண்டியதாயிற்று. “மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்” (ரோமர் 8,6) என்று பவுல் அறிவிக்கிறார். ஆகவே நாம் ஆவியின் சிந்தையோடு காரியங்களைச் செய்து நம்மையும் நம்முடைய தலைமுறையையும் காத்துக்கொள்வோம்.
இஸ்ரவேல் நாடு வென்றிருந்தால் கர்த்தர் மகிமைப்பட்டிருந்திருப்பார். மாறாக, பெலிஸ்தியர் வென்றதால் பொய்யான கடவுள்கள் அங்கே மகிமைப்படுத்தப்பட்டார்கள். நம்முடைய பாவங்கள் கர்த்தருக்கு இழுக்கைக் கொண்டுவரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம். கர்த்தரால் அடையாளப்படுத்தப்பட்ட ஓர் இராஜாவின் உடல் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போடப்பட்டது எவ்வளவு துர்ப்பாக்கியம். கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்து பலசாலிகள் துணிந்து சென்று அவர்களுடைய உடலை எடுத்து வந்து யாபேசில் அடக்கம்பண்ணினார்கள். யோசேப்பும் நிக்கெதேமுவும் கிறிஸ்துவின் உடலை அடக்கம்பண்ணியது போல, நாமும் எச்சூழலிலும் கிறிஸ்துவோடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்வோம். தோல்வியுற்றோரின் நடுவில், துணிந்து நிற்கிற கிறிஸ்துவின் விசுவாச வீரர்களாய் நாம் நிற்போம்.