December

பாடுகளின் பள்ளி

2023 டிசம்பர் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,13)

  • December 13
❚❚

“அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்” (வசனம் 13).

தாவீதின் ஆட்கள் கொண்டு வந்த ஏமாற்றமான செய்திக்கு அவன் எவ்வாறு பதிலளித்தான்? தன்னுடைய ஊழியக்காரர்களைப் போல தாவீது சாந்தத்துடனும், நிதானத்துடனும் நடந்து கொண்டானா? இல்லை; மாறாக தாவீது மாம்சத்தில் செயல்பட்டான். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங்கீதம் 55,22) என்று கர்த்தரிடம் காரியங்களை ஒப்படைப்பதற்குப் பதிலாக தன் சொந்த முயற்சியால் அதற்குப் பதிலளிக்க முயன்றான். ஆம், “ஒவ்வொரு மனிதனும் தன் வாளைக் கட்டிக்கொள்” என்று தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான். ஏறக்குறைய நானூறு பேர். நாபாலைத் துடைத்தெறிய வேண்டும் என்று முடிவெடுத்தான். ஆனால் இது தாவீதின் உயரிய குணத்துக்கு ஏற்ற ஒரு உயர்ந்த தருணம் அல்ல. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று கூறிய ஆண்டவரின் பண்புக்கு முற்றிலும் மாறான குணம் இது. நமக்கு அவமானம் வரும்போதெல்லாம் மாம்சத்தின்படி செயல்பட்டால், அது மேலும் அவமானத்தையே கொண்டுவரும். ஆகவே இதற்குப் பதிலாக அன்புடனும், இரக்கத்துடனும் அவமானங்களைச் சுமக்கப் பழகிக்கொள்வதே அவசியம்.

தாவீது சவுலிடம் காட்டிய அதே இரக்கத்தையும் நீடிய பொறுமையையும் நாபாலிடம் காட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சவுல் தாவீதை அவமதித்தது மட்டுமல்லாமல், அவனைக் கொல்லவும் தேடியலைந்தான். அப்பொழுதெல்லாம் தாவீது எதிர்த்துப் போரிடாமல் அவனிடம்  தயவுடனும் நீடிய பொறுமையுடனும் நடந்துகொண்டான். சவுல் ஓர் அரசன்; ஆனால் நாபாலோ அரசனைக் காட்டிலும் அந்தஸ்திலும், கனத்திலும் குறைந்த ஒரு நபர். நம்மைக் காட்டிலும் பெரியவர்களிடம் நாம் காண்பிக்கும் குணாதிசயத்தை நம்மைக் காட்டிலும் குறைந்த அந்தஸ்து உடையவர்களிடமும் காட்டப் பழக வேண்டும். இது கடினமான காரியமே, ஆனால் இதுவே நம்முடைய குணத்தின் உண்மையான அளவுகோல் வெளிப்படும் இடமாக இருக்கிறது. பாடுகளில் பொறுமை என்பது நாம் நாள் தோறும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். நேற்று நாம் சாந்தமாக இருந்தோம் என்பதற்காக இன்று அதைத் தவறவிட்டுவிட முடியாது. பாடுகளின் பள்ளி வாயிலாகத்தான் நம்முடைய ஆண்டவரை நாம் அதிகமாகக் கற்றுக்கொள்கிறோம்.

இந்தக் காரியத்தில் தாவீது தவறிழைத்துவிட்டான் என்று நாம் எளிதாகக் கூறிவிட முடியும். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுபோன்ற சோதனை நமக்கு ஏற்படுமாயின் நம்மால் தாவீதைக் காட்டிலும் சிறந்த வகையில் செயல்பட முடியுமா? சிந்திப்போம். பரிசுத்த ஆவியானவர் தாவீதின் குறைவுகளையும் வெளிப்படையாக நமக்கு எழுதிக்கொடுத்திருக்கிறார். இது நாம் அதிலிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்வதற்குத்தான். ஆகவே “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ” என்று கூறிய பக்தன் யோபுவைப் போல நாம் நடந்துகொள்ள பிரயாசப்படுவோம் (2,10). மேலும், தாவீது, “நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்”. ஆனால் நாமோ, “உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ” (யோவான் 18,11) என்று பேதுருவிடம் கூறிய ஆண்டவரை நாம் பின்பற்றுவோம்.