டிசம்பர் 5 (வேத பகுதி: 1 சாமுவேல் 24,3 முதல் 5 வரை
- December 5
தாவீதும், அவன் மனுஷரும் அந்த கெபியின் பக்கங்களில் உட்கார்ந்து இருந்தார்கள் (வசனம் 3)
பரிசுத்த வேதாகமம் ஒரு கற்பனைப் புத்தகமோ அல்லது தமது பரிசுத்தர்கள் வாழ்வில் நடந்த நல்லவைகளை மட்டும் தேவனால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாறோ அல்ல. இது தேவனால் எழுதி கொடுக்கப்பட்ட நம்முடைய வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை பிரதிபலிக்கிற எதார்த்தமான நூல். ஆகவே தான் சராசரி விசுவாசிகளும் இதை வாசிக்கும் போது தங்களுக்கு தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். சவுல் கெபிக்குள் சென்றபோது அங்கே தாவீதும் அவன் மனிதனும் இருந்தார்கள் என்பது தேவ பயமற்ற செயலுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் இது தாவீதை பொறுத்தவரை தேவனுடைய திட்டமிட்ட ஒருங்கிணைப்பே ஆகும். பல நேரங்களில் நாம் விரும்பியோ விரும்பாமலோ எதிர்பாராத விதமாக சிலரை சந்திக்கிறோம், வாய்ப்புகளை நாம் எவ்விதமாக எடுத்துச் செல்கிறோம் என்பதை கர்த்தர் காண விரும்புகிறார்.
தாவீதின் மனிதர் இதுதான் வாய்ப்பு கர்த்தர் சவுலை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார், நீர் அவனைக்கொன்று ராஜ்யத்தை கட்டும் என்றார்கள். ஆனால் தாவீது பரிசுத்த ஆவியினால் நிறைய பெற்ற ஒரு மனிதனாக நடந்து கொண்டான். எதிரிகளை பழி வாங்குவது தேவனுடைய வேலை அது தன்னுடைய வேலை அல்ல என்பதை அங்கே நிரூபித்தான். எதிரியாக இருந்தாலும் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன்மேல் கையை வைக்க மாட்டேன் என்று தாவீது முடிவெடுத்துவிட்டான். நமக்கு விரோதமாக இருக்கிற விசுவாசிகளை குறித்த நம்முடைய பார்வையும் மாற வேண்டும். நம்முடைய சந்திப்புகள் கசப்புகளையும் கோபங்களையும் வெளிப்படுத்தும் தருணங்களாக அமையாமல் நம்முடைய அன்பையும் சாந்தத்தையும் வெளிப்படுத்தி அவர்களை வெல்லும் தருணங்களாக இருக்க வேண்டும். சீடர்களை ஏற்றுக் கொள்ளாத கிராமத்தை வானத்திலிருந்து நெருப்பை இறக்கி அழிக்க வேண்டும் என்று யோவானும் யாக்கோபும் கூறிய போது, நீங்கள் இன்ன ஆவியை உடையவர்கள் என்பதை அறிய தவறி விட்டீர்களே என்று ஆண்டவர் அவர்களை கடிந்துகொண்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
ஆயினும் தாவீது சவுல் அணிந்திருந்த ஆடையின் ஓர் ஓரத்தை அறுத்துக் கொண்டான். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவின் ஆடையின் ஓரத்தை அறுத்துக் கொண்டதற்காக தாவீது இதயம் அடித்துக் கொண்டது. ஏதோ தவறு செய்து விட்டோம் என்று அவன் குற்றஉணர்வு, அவன் தான் பரிசுத்த ஆவியால் நடத்தப்பட்ட ஒரு கர்த்தருடைய பிள்ளையாக இருக்கிறான் என்பதற்கு இது ஓர் அடையாளம். எப்பொழுது நமது மனசாட்சி அடிக்கவில்லையோ அப்பொழுது அது மழுங்கிவிட்டது என்றும், பரிசுத்த ஆவியை நாம் அவித்து போட்டுவிட்டோம் என்பதும் பொருள். கர்த்தருக்குள் நம்முடைய உறவு சரி செய்யப்பட வேண்டும். இந்த தாவீதும் அவருடைய நண்பர்களும் விசுவாசத்தாலே வாழ்ந்தார்கள். உலகம் அவர்களுக்கு பாத்திரமாக இருக்கவில்லை அவர்கள் வனாந்திரங்களிலும் மலைகளிலும் பூமியின் வெடிப்புகளிலும் சிதறுண்டு அலைந்தார்கள் என்று எபிரேயர் நிருபத்த்சில் வாசிக்கிறோம். அதுபோலவே நாமும் விசுவாசத்தில் வாழ்வோம்.