August

புதிய இருதயம்

2023 ஓகஸ்ட் 28 (வேத பகுதி: 1 சாமுவேல் 10,8 முதல் 9 வரை)

  • August 28
❚❚

“அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்” (வசனம் 9).

சாமுவேல் மற்றும் சவுலின் முதல் சந்திப்பின் நேரம் முடிவுக்கு வந்தது. இறுதியாக, கில்காலுக்கு நான் வரும்வரை ஏழு நாட்கள் காத்திரு என்று சொல்லி சாமுவேல் சவுலை அனுப்பிவிட்டான் (வசனம் 8). கில்கால் என்பதற்கு கற்களின் வட்டம் என்று பொருள். யோசுவாவின் தலைமையில் மக்கள் கானான் தேசத்துக்குள் பிரவேசித்தபோது, இவ்விடத்தில்தான் மக்களுக்கு மாம்சத்தின் நுனித்தோலை நீக்குதலாகிய விருத்தசேதனம் செய்யப்பட்டது. இந்த இடத்துக்கு அவன், “எகிப்தின் நிந்தையை நீக்கிப்போடுதல்” என்ற பெயரைச் சூட்டினான். இந்த இடத்தில்தான் சவுல் ஏழு நாட்கள் காத்திருக்கும்படி சாமுவேல் உத்தரவிட்டான். மாம்சத்தின் சுயபெலன் களையப்பட்டு, கர்த்தருடைய வாக்குறுதியின் நிறைவேறுதலுக்காக காத்திருக்க வேண்டும் என்னும் இன்றியமையாத பாடத்தை நாம் இதன் வாயிலாகக் கற்றுக்கொள்கிறோம். சவுல் அரசனாகிவிட்டால், மக்கள் அவனுக்காகக் காத்திருக்க நேரிடும். ஆகவே அதற்கு முன்னதாக காத்திருத்தல் என்றால் என்ன என்பதையும் காத்திருத்தலின் வலியையும் அவன் கற்றுக்கொள்ள வேண்டும். காத்திருத்தல் பொறுமையைக் கற்றுத் தருகிறது. “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்” (சங்கீதம் 27,14) என்று சங்கீத ஆசிரியன் கூறுகிறான்.

மேலும் சாமுவேல் நான் வரும்வரை எனக்காகக் காத்திரு என்று கூறினான். பொதுவாக மன்னனாகிவிட்டால் மமதை பெருகிவிடும். அரசனேயானாலும் கர்த்தருடைய வாயாக இருந்து பேசுகிற தீர்க்கதரிசியின் சொல் கேட்க வேண்டும் என்னும் பாடத்தையும் இங்கே நாம் கற்றுக்கொள்கிறோம். பதவிக்கு வந்தபின், தற்பெருமை, எண்ண வேண்டியதற்கு மேலாக மிதமிஞ்சி எண்ணுதல் போன்ற தீய பழக்கங்கள் விசுவாசிகளை விழத்தள்ளும் வஞ்சகமான சூழ்ச்சியின் வலைகளாகும். சாமுவேலின் சொல்லுக்கு இசைவு தெரிவித்து, சவுல் கில்கால் நோக்கிப் புறப்பட்டான். போகிற வழியில் தேவன் சவுலுக்கு, “வேறே இருதயத்தைக் கொடுத்தார்” (வசனம் 9). சாமுவேல் சவுலை கர்த்தருடைய காரியங்களுக்கு நேராக வழிநடத்தலாம். ஆனால் வேறே இருதயத்தை தேவனால் மட்டுமே அருள முடியும். தனக்குத் தானேயும் ஒரு புதிய இருதயத்தை சாமுவேலால் உருவாக்கிக்கொள்ள முடியாது; ஆவியானவரே இதைச் செய்ய முடியும்.

சவுலுக்கு போகிற வழியில் ஏற்பட்ட இந்த புதிய அனுபவத்தைக் குறித்து சாமுவேலுக்கு எதுவும் தெரியாது. சாமுவேல் கர்த்தருடைய பெரிய தீர்க்கதரிசியாக இருந்தாலும், அவனிடத்தில் இருக்கும்போது இது நேரிடவில்லை. தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் கனத்தையும் மரியாதையையும் பெற்றுக்கொள்வதற்கு சாமுவேல் தகுதியானவன் தான். ஆனால் கடவுள் இடத்தில் அவனை வைத்துப் பார்க்கக்கூடாது. விசுவாசிகள் மூத்தோரின் ஆலோசனையின்படி நடந்தாலும், கர்த்தருடனான அனுபவமும், புதிய இருதயத்தைப் பெற்றுக்கொள்வதும் அவரவர்களுடைய தனிப்பட்ட அனுபவமாகவே இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய இருதயம் செம்மையாக இராவிட்டால் கர்த்தருடைய காரியங்களில் நமக்குப் பங்கு ஏதும் இல்லாமல் போய்விடும். ஆகவே நாமும் இந்த உலகத்தினால் உண்டாகும் கேடுகளுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, தேவனுடைய வாக்குறுதிகளைப் பற்றிக் கொள்வோம். கர்த்தர் நம் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.