August

தாழ்மையின் சிகரம்

2023 ஓகஸ்ட் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,18 முதல் 27 வரை)

  • August 23
❚❚

“மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது” (வசனம் 20).

சவுல் சாமுவேலைத் தேடிப்போனான், சாமுவேலோ சவுலின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். சவுல் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். இதுவரை பார்த்திராத ஒரு தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான், யார் அந்தத் தீர்க்கதரிசியோ அந்த தீர்க்கதரிசியிடமே அவருடைய வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டான். அதுமட்டுமின்றி, தன்னுடைய காணாமற்போன கழுதைகளைக் குறித்துச் சொல்லாமலேயே அதைப் பற்றி தீர்க்கதரிசி பேசியது சவுலுக்கு வியப்பை உண்டுபண்ணியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், உன் இருதயத்தில் உள்ளதையெல்லாம் உனக்குச் சொல்வேன் என்றான். இதன் மூலம் சாமுவேல் ஒரு மெய்யான தீர்க்கதரிசி என்பதை சவுல் உணர்ந்துகொண்டான். இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக வல்லமையால் மட்டுமே இந்தக் காரியங்களெல்லாம் சாமுவேலால் சொல்ல முடியும் என்பதை சவுல் உணரவும், தன்னைக் குறித்துச் சொல்லப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொள்ளவும் ஏதுவாக இவை நடைபெற்றது எனலாம். சாமுவேல் மட்டுமின்றி, தேவ ஆவியைப் பெற்றிருக்க நாமும்கூட சிறப்பானவர்களே. நம்முடைய வாழ்க்கையிலும் இத்தகைய இயற்கைக்கும் வாய்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட சந்திப்புகள், நிகழ்வுகள், உரையாடல்கள் நடைபெற்றதை அறிந்திருக்கிறோம். இவை அனைத்தும் தேவ வல்லமையின் ஒருங்கிணைப்பினால் நடைபெறுகின்றனவே அல்லாமல் வேறொன்றாலும் நடைபெறவில்லை.

தேவனுடைய காரியங்களை இந்த உலகம் குறைவாக அறிந்துவைத்திருக்கிறது. அல்லது இந்த உலகத்தார் நினைத்தும் சிந்தித்தும் பார்க்காத வகையில் தேவன் நம்மைச் சிறப்பானவர்களாக வைத்திருக்கிறார். ஆகவேதான் பவுல் கூறுகிறார்: “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்” (1  கொரிந்தியர் 2,10). சவுல் எதை எண்ணி வந்தானோ, அதை சாமுவேல் பேசினதுபோல, சுவிசேஷ ஊழியத்திலும், விசுவாசிகளுக்கான ஆலோசனை நேரத்திலும் நம்மூலமாக கர்த்தர் பேசக்கூடியவராக இருக்கிறார். “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்” (ஏசாயா 50,4) என்று ஏசாயா தீர்க்கதரிசி கிறிஸ்துவைக் குறித்து முன்னறிவித்திருக்கிறார். “… பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, திருவசனம் சொல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் (கொலோசெயர் 4,3 முதல் 4) என்று பவுல் கோரிக்கை வைக்கிறார்.

பெயர் அறியாத ஒரு மனிதனை அரசனாக முடிசூட்டுவதற்கு, எந்தவொரு கனம் பெற்ற, மக்களால் நன்கு அறியப்பட்ட தீர்க்கதரிசியால் முடியும். கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கர்த்தர் விரும்பினால் சவுல் உயர்த்தப்படுவதற்கும் தான் தாழ்த்தப்படுவதற்கும் சாமுவேல் ஆயத்தமாயிருந்தான். சவுலை அரசனாக ஏற்படுத்தினால் மக்களை நியாயம்விசாரிக்கும் பொறுப்பு தன்னைப் விட்டுப் போய்விடும் என்று சாமுவேலுக்கும் தெரியும். ஆகவே கர்த்தரால் அனுப்பப்படுகிற மனிதர்களை வரவேற்கவும், அவர்களுக்கு இடத்தை விட்டுக்கொடுக்கவும் எப்போதும் ஆயத்தமாயிருப்போம். வாழ்ந்திருக்கவும் தெரியும், தாழ்ந்திருக்கவும் தெரியும் என்று சொல்லி எல்லா இடங்களிலும், எல்லாச் சமயங்களிலும் மனரம்மியமாய் வாழ்ந்த பவுலின் முன்மாதிரியை நாமும் பின்பற்றுவோம்.