August

கூடவே இருக்கிற கர்த்தர்

2023 ஓகஸ்ட்  1 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,19 முதல் 21 வரை)

  • August 1
❚❚

“சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை” (வசனம் 19).

“சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்” (வசனம் 19).  கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதைக் காட்டிலும் வேறு சிறப்பான காரியம் என்ன இருக்க முடியும்? கர்த்தர் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால் இங்கே தனிப்பட்ட முறையில் கர்த்தர் சாமுவேலோடு இருந்தார். அதாவது அவன் பேசியவை, செய்தவை ஆகிய யாவும் அவருடைய ஒப்புதலோடும், அவருடைய அனுமதியோடும் இருந்தன என்பது மட்டுமின்றி, அந்தக் காரியங்களுக்கு அவர் ஒத்தாசையாகவும் இருந்தார். அதில் அவருடைய நாமமும் அவருடைய மகிமையும் வெளிப்பட்டது. எகிப்தில் இருந்தபோது கர்த்தர் யோசேப்போடு இருந்ததுபோல, இஸ்ரவேல் மக்களை வனாந்தர வழியாய் வழிநடத்தின மோசேயோடு கர்த்தர் இருந்தது போல, கானான் நாட்டில் இஸ்ரவேல் மக்களை குடியமர்த்தின யோசுவாவோடு கர்த்தர் இருந்ததுபோல, பெத்தேலைக் கைப்பற்ற புறப்பட்ட யோசேப்பின் புத்திரரோடு கர்த்தர் இருந்ததுபோல, ஆட்சிக்கு வந்தபின் தன் செய்கைகள் எல்லாவற்றிலும் புத்திமானாய் நடந்துகொண்ட தாவீதோடு கர்த்தர் இருந்தது போல, சாமுவேலோடும் கர்த்தர் இருந்தார். அவ்வாறே புதிய ஏற்பாட்டிலும் கர்த்தர்  நம்மோடு கூட இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளும்படி செய்திருக்கிறார். அதைக் குறித்து பவுல் இவ்விதமாகக் கூறுகிறார்: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8,31).

“அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை” (வசனம் 19). சாமுவேல் உரைத்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் கர்த்தருடைய உண்மையான வார்த்தைகளாக இருந்தன. அவன் பேசின எதுவும் நிறைவேறாமல் போகவில்லை. அவனுடைய வார்த்தையில் ஆவியானவருடைய பிரசன்னத்தை மக்கள் உணர்ந்து கொண்டார்கள். தீர்க்கதரிசனம் என்ற பெயரில் அவன் மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. அவன் உலக ஆதாயத்துக்காக பொய்யான நம்பிக்கைகளை விசுவாசிகள் மனதில் விதைக்கவில்லை. பேசிய பின்னர் நான் இந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று வார்த்தையைத் திரும்பப் பெறவில்லை. அவன் விதைத்த வசனங்களை பறவைகள் கொத்திச் செல்லவில்லை, அது பாறைகளில் விழுந்து பலன்கொடுக்காமலும் போகவில்லை. அவை ஒவ்வொன்றும் பலன் கொடுத்தன. ஆகவே சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக எழும்பினான் என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்துகொண்டார்கள்.

மோசேயின் காலத்திற்குப் பிறகு, ஏறத்தாழ நானூறு ஆண்டுகால நியாயாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் தீர்க்கதரிசிகள் இல்லை. ஆனால் இஸ்ரவேல் வரலாற்றின் முக்கியமான நேரத்தில் கர்த்தர் சாமுவேலை ஒரு தீர்க்கதரிசியாக எழுப்பினார். சாமுவேல் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகவும் முதல் தீர்க்கதரிசியாகவும் சரியாகக் காணப்படுகிறார். நியாயாதிபதிகளின் காலத்திற்கும் மன்னராட்சியின் காலத்திற்கும் இடையிலான இடைவெளியை சாமுவேல் இணைக்கிறார். தேசத்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லை வரைக்கும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். மீண்டும் ஒருமுறை கர்த்தர் சாமுவேலுக்கு தரிசனம் அளித்து அதை உறுதிப்படுத்தினார். ஆகவே கர்த்தர் எப்போதும் நம்மோடு இருக்கும்படி நாமும் அவரில் எப்போதும் நிலைத்திருப்போம்.