April

சகோதரிகளின் பங்களிப்பு

2023 ஏப்ரல் 24 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,3 முதல் 4 வரை)

  • April 24
❚❚

“நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்” (வசனம் 4).

“பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5,20) என்று பவுல் கூறினதுபோல, “பொல்லாத காரியங்களில்” பெருகிய இஸ்ரவேல் மக்களை மீட்பதற்கான திட்டத்தைத் தேவனே துவக்குகிறார். அவர்களே தங்களுடைய ஆவிக்குரிய காரியத்தில் ஆர்வங்கொள்ளாதபோதும், தேவன் அவர்களைக் குறித்ததான ஆர்வத்தைக் கைவிட்டுவிடவில்லை. ஆவிக்குரிய இருள் நிறைந்து, மக்கள் தங்களுடைய குருட்டாட்டத்தில் மூழ்கிப்போயிருந்த காலத்தில், “கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் (மனோவாவின் மனைவிக்குத்) தரிசனமாகி” கிருபையின் செய்தியைச் சொன்னார். மலடியாயிருந்த அவளுக்கு இது எத்தனை அருமையான நற்செய்தி (வசனம் 3). உன் பெலவீனத்திலே என் கிருபை பூரணமாய் விளங்கும் என்று பவுலுக்கு ஆண்டவர் கூறியதுபோலவே, குறைவையும், பெலவீனத்தையும் கொண்டிருந்த இந்தப் பெண்மணியை தேவன் தம்முடைய மகத்துவமான நோக்கத்துக்காகத் தெரிந்துகொண்டார். நீங்கள் உங்களைக் குறித்து, “நான் பெலவீனமானவன், ஒன்றும் அறியாதவன்” என்றும், “விசுவாசிகள் ஆவிக்குரிய மந்த நிலையில் இருக்கிறார்கள், அதைக் குறித்து யாருக்கும் கரிசனையில்லை” என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? கலங்க வேண்டாம், கர்த்தர் யாரைக் கொண்டும் சபையின் உயிர்மீட்சியை மீட்டெடுக்க முடியும், அது நீங்களாகவும் இருக்கலாம். ஆயத்தமாயிருப்போம்.

“மனோவா” என்ற பெயருக்கு, “அமைதியாய்த் தங்கியிருத்தல்” என்று பொருள். பெயருக்கு ஏற்றாற்போலவே தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்துகொண்டிருக்கலாம். அவர்களைப் போலவே நாமும், “நான் என்ன செய்ய முடியும்? என் பிரச்சினையே (அவர்களுக்கு குழந்தையில்லை) என்னால் சமாளிக்க முடியவில்லையே, இப்படியிருக்க என்னால் என்ன செய்ய முடியும்” என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய தூதன் அவளிடம், “நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்” (வசனம் 3) என்று கூறினான்.  கர்த்தர் முதலாவது மனோவாவிடம் பேசாமல் அவள் மனைவியிடம் பேசினார். தன்னுடைய குழந்தையின்மையைக் குறித்து அவளே அதிகமாய் சோர்வடைந்திருக்கலாம். ஆகவே பெலவீனமான பாண்டமாகிய அவளிடமே தன்னுடைய நோக்கத்தைத் தெரிவிக்கிறார். அவளுக்கு குழந்தைப் பாக்கியத்தை கொடுத்து முதலாவது மகிழ்ச்சியுள்ளவராக்குகிறார். இதன் மூலம் பின்னர் நாட்டின் விடுதலைக்கான அடித்தளத்தை அமைக்கிறார். “தெளிந்த புத்தியோடும், விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினால் இரட்சிக்கப்படுவாள்” (1 தீமோத்தேயு 2,15) என்று பவுல் கூறுகிறார். குடும்பத்தில் கணவனே தலைவனாயிருந்தாலும், பிள்ளைகளை ஆவிக்குரியவர்களாக வளர்த்து ஆளாக்குவதில் (இவர்களே பின்னாட்களில் சபையின் கண்காணிகளாக ஏற்படுத்தப்படவிருக்கிறார்கள் – 1 தீமோ த்தேயு 3,1) பெண்களின் பணி அளப்பரியது என்றால் அது மிகையல்ல.

பிறக்கப்போகிற குழந்தை நசரேய விரதம் காக்க வேண்டும் என்பதற்காக, “நீ திராட்சரசமும், மதுபானமும் குடிக்கக்கூடாது, தீட்டானது ஒன்றையும் புசிக்க வேண்டாம்” (வசனம் 4) என்று கர்த்தர் அதன் தாயிடம் கூறுகிறார். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் சிறந்தவர்கள் என்றால் அது மிகையல்ல. தாய்ப்பாலுடன் சேர்த்து, விசுவாசமும், பக்தியும், பரிசுத்தமும் புகட்டப்படுவதற்கான சிறந்த இடம் தாயின் மடியே. தன்னுடைய பாட்டி லோவிசாளிடமிருந்தும், தாய் ஐனிக்கேயாளிடமிருந்தும் தீமோத்தேயு விசுவாசத்தில் வளர்ந்ததுபோல, நம்முடைய பிள்ளைகளும் வளர்ந்து, சபைக்காகப் பயனுள்ளவர்களாக விளங்கட்டும்.