April

வரலாறை அறிந்துகொள்ளுங்கள்

2023 ஏப்ரல் 16 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 11,13 முதல் 28 வரை)

  • April 16
❚❚

“தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா” (வசனம் 23).

எங்கள் நாட்டை எங்களிடம் கொடுத்துவிடு என்று தூது சொல்லி அனுப்பிய அம்மோனியர்களுக்கு யெப்தாவும் வரலாற்று ரீதியான பதிலையையே கொடுத்தான். “நாங்கள் உங்களுடைய நாட்டையாவது, மோவாபியர்களின் நாட்டையாவது அபகரிக்கவில்லை. கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த தேசம், எமோரியர்களுடையது என்று சொல்லி அனுப்பினான். இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தில் குடியேறி இதுவரை முந்நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் யெப்தா வரலாற்றைத் துல்லியமாக அறிந்திருந்ததனால் சரியான பதிலைக் கொடுக்க அவனால் முடிந்தது. நாமும் நம்முடைய உள்ளூர் சபையின் வரலாறு, இரண்டாயிரம் ஆண்டுகளாகத் திருச்சபை கடந்துவந்த பாதை ஆகியவற்றை நாம் சரியான விதத்தில் அறிந்துகொள்ள வேண்டும். யெப்தா இஸ்ரயேல் நாட்டின் உண்மையான வரலாற்றை அறிந்திருந்ததினாலேயே அம்மோனியர்களின்  வரலாற்றுப் பிழைகளைக் கண்டுகொள்ள முடிந்தது. சபைகள் கடந்து வந்த பாதை, அது எதிர்கொண்ட அடக்குமுறை, பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சபைச் சீர்திருத்தம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக முழுமைக்கும் சென்ற சுவிசேஷத்தின் எழுச்சி போன்றவற்றை அறிந்திருந்தால் மட்டுமே பிற சமய எதிர்ப்பாளர்களை எதிர்கொள்ள முடியும். முதன் முதலில் தமிழ் வேதாகமம் எப்போது வெளிவந்தது? இப்போது நாம் கையில் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமம் எந்த ஆண்டு யாரால் வெளியிடப்பட்டது போன்ற தகவல்கள் நமக்குத் தெரியுமா?

கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த நீங்கள் எவ்வாறு இப்பொழுது கேட்கமுடியும்? இதுவரை உங்கள் தெய்வங்கள் எங்கே போயின, இதுவரை நீங்கள் சும்மா இருந்தது என்ன? போன்ற கேள்விகள் அம்மோனியர்களை பேச்சற்றவர்களாக்கிற்று. அவ்வாறு உங்களுக்கு இடம் வேண்டும் என்றால் உங்களுடைய கடவுளாகிய கோமோஸ் அதைப் பெற்றுத் தரட்டும். எங்கள் தேவன் எங்களுக்குக் கொடுத்த நாட்டை விட்டுத் தர முடியாது என்று கூறிவிட்டான். கள்ள போதகர்களின் வேதப் புரட்டு, அவர்களுடைய வஞ்சக வார்த்தைகள் போன்றவற்றை அடையாளம் காண்பதற்கு நமக்கு வேத அறிவும் ஆரோக்கியமான உபதேசத்தைக் கற்றுக்கொள்ளுதலும் அவசியம்.  சாத்தானைப் போலவே வசனத்தைச் சற்றுக் கூட்டியும், சில வார்த்தைகளைத் திருத்தியும் பேசுகிறவர்களை அடையாளம் காண்பதற்கு வேதம் நம் உள்ளங்களில் இருக்க வேண்டும். மேலும் வரலாற்றை வெறும் வரலாறாகக் கூறாமல் அது கர்த்தர் தங்களுக்குச் செய்த வரலாறாகச் சொன்னான். “தேவனாகிய கர்த்தர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் வாயிலாக, கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய கனத்தையும் மரியாதையையும் கொடுத்தான் (வசனம் 23).

மேலும் தங்களுடைய நாட்டின் பக்கம் இருக்கிற நியாயத்தை வெளிப்படுத்தினான். பின்பு அவர்களிடமிருந்து காப்பாற்றும்படி கர்த்தருடைய கரங்களில் தங்களை ஒப்படைத்தான். சில நேரங்களில் பொய்யாய்க் குற்றம் சாட்டும்போதும், நமக்கு எதிராக அவதூறு பரப்பப்படும்போதும், அதைக் கர்த்தருடைய கையில் விட்டு விட்டு நாம் அமைதியாக இருக்க வேண்டும் (வசனம் 27). கர்த்தர் நமக்காக வழக்காடுவார்.