April

மீண்டும் நம்பிக்கை துளிர்த்தல் 

2023 ஏப்ரல் 9 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 10,1 முதல் 2 வரை)

  • April 9
❚❚

“அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்” (வசனம் 1).

அபிமெலேக்கின் மரணத்துக்குப் பின் இஸ்ரவேல் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக, தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய்விட்டார்கள் (நியாயாதிபதிகள்  9,55). தங்களை இரட்சிப்பான் என்று யாரை இஸ்ரவேலர்கள் நம்பியிருந்தார்களோ அவன் அவர்களைக் கைவிட்டுவிட்டான். அவர்களுடைய கனவுகளும், நம்பிக்கைகளும் அபிமெலேக்குடன் புதைந்துவிட்டன. நாமும் பல நேரங்களில் மனிதர்களை நம்பி, ஏமாற்றம் அடைந்து சோர்வுக்குள்ளாகியிருக்கிறோம். மனிதரை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்ற சத்தியத்தை தேவன் நமக்கும் கற்றுத் தர விரும்புகிறார். சாபம், இரத்தப்பழி, நெருப்பு, மரணங்கள் போன்ற துயரமான நிகழ்வுகளுடன் முந்தின அதிகாரம் முடிவுற்றது. ஆனால் “அபிமெலேக்குக்குப் பின்பு” (வசனம் 1) என்ற நம்பிக்கையின் வார்த்தைகளுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. “கர்த்தர் தம் கிரியையைத் தொடங்கும் நேரமாகிய ‘பின்பு’ க்காகக் நாம் காத்திருக்க வேண்டும். ‘இப்பொழுது’ எவ்வளவு இருளாக இருந்தாலும், கர்த்தருடைய நேரமாகிய ‘பின்பு’ நமக்கு வெளிச்சம் தரப் போதுமானதாக இருக்கிறது” என்று திருவாளர் கேம்பல் மார்கன் இதை தன்னுடைய அழகிய வார்த்தையால் விவரிக்கிறார்.

அபிமெலேக்கின் நாட்களில் இருந்த கொந்தளிப்பான சூழ்நிலைக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களுக்குச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்படி “தோலா” (வசனம் 1) என்னும் இரட்சகன் எழும்பினான். புயலுக்குப் பின் வரும் அமைதியைப் போல, விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீரைப் போலவும் விளங்கி, இஸ்ரவேல் மக்களுடைய வாழ்க்கையில் இருபத்திமூன்று ஆண்டுகள் அமைதியைக் கொண்டுவந்தான். மக்களை அந்நிய தேவர்களிடமிருந்து பிரித்து, கர்த்தருக்கு நேராகக் கொண்டு வந்தான். பாவத்தின் பிடியிலும் சத்துருவின் கையிலும் சிக்கியிருந்த தம்முடைய மக்களை மீட்கும்படி, “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்” (கலாத்தியர் 4,5) என்று புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். அவரை விசுவாசிக்கிறவர்கள் ஆத்தும அமைதியையும், நித்திய பாதுகாப்பையும் பெற்றுக்கொள்கிறார்கள்.

தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் “தோலா” இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஆயினும் தன்னுடைய இடத்தை விட்டு வெளியேறி எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான். “இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்” என்பதே யாக்கோபு இசக்காரைக் குறித்துச் சொன்ன தீர்க்கதரிசனம் (ஆதியாகமம் 49,15). தோலா இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்தான். அவன் தன்னுடைய சமாதானத்தைத் துறந்து மக்களின் சமாதானத்தை நாடினான். “சாமீர்” என்பதற்கு “முள்” என்று பொருள். அவன் கடினமான வாழ்க்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டான். ஆபிரகாமின் குமாரனும், தாவீதின் குமாரனுமாக வந்த இயேசு கிறிஸ்துவை இவன் நமக்கு நினைவூட்டுகிறான். அவர் “தேவனுக்குச் சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத் தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர் 2,6 முதல் 7). இந்தத் தோலா எந்தப் போரையும் நடத்தவில்லை. ஆயினும் மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவந்தான். கிறிஸ்து ஒரு ஞானமுள்ள மனிதராக தம்முடைய மரணத்தினாலே தீயவர்களால் சூழப்பட்டிருந்த பட்டணத்து மனிதர்களாகிய நம்மை விடுவித்தார். தோலா இருபத்து மூன்று ஆண்டுகள் மக்களை நியாயம் விசாரித்தான். பவுல் தீமோத்தேவுவைக் குறித்து, “உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிப்பதற்கு என்னைப் போல மனதுள்ளவன்” (பிலிப்பியர் 2,20) என்கிறார். கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காட்டுகிற தோலாவைப் போன்றோரும், தீமோத்தேயுவைப் போன்றோருமே இன்றைய தேவை.