October

முதல் கொலை

(வேதபகுதி: ஆதியாகமம் 4:8-16)

“கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான்அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்” (வச. 9).

காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தான். மனித வரலாற்றில் நடந்த முதல் கொலை. மெய்யான விசுவாச மார்க்கத்துக்கும், பொய்யான கிரியை மதத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல். அன்று முதல் இன்றுவரை தங்கள் விசவாசத்துக்காக உயிரைக் கொடுத்தோர் எண்ணற்றோர். “ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப் பழியும் இந்தச் சந்ததியில் கேட்கப்படும்” (லூக். 11:50) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார். ஆபேல் தேவனுடைய முதல் தீர்க்கதரிசியாக விளங்கினான். காயீன் பொல்லாங்கனாகிய சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டு, அவனுடைய எண்ணங்களைச் செயல்படுத்தினான். சாத்தான் ஆதிமுதல் மனித கொலைபாதகன். ஆகவே காயீன் ஆபேலைக் கொலை செய்தான்.

வேதத்தின் முதல் கேள்வி, “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்”. பாவத்தால் தொலைந்தோரை நோக்கி தேவனின் கேள்வி. “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்பது இரண்டாம் கேள்வி. இது நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி. நிச்சயமாகவே நாம் நம்முடைய சகோதரர்களுக்கு காவலாளியாகவே இருக்கிறோம். சாக்குச் சொல்ல இடமில்லை. உடன் சகோதரர்களைக் குறித்து தேவன் நம்மிடம் கணக்குக் கேட்பார். நாம் எந்த அளவுக்கு அவர்களை நேசிக்கிறோம்? “சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்” என்றும், “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாயிருக்கிறான்” என்றும் யோவான் நம்மை எச்சரிக்கிறார் (1 யோவான் 3:14,15). சகோதரரிடத்தில் அன்புகூரும்போது மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவானவர் நமக்கான ஜீவனைக் கொடுத்ததினால் அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். ஆகவே நாம் சாத்தானின் எண்ணங்களுக்கு இடம் கொடாமல் கிறிஸ்துவுக்கு இடம் கொடுப்போம்.

ஆபேல் மரித்தும் இன்றும் நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவனுடைய விசுவாசம், காணிக்கை, நற்சாட்சி, தியாகம் நமக்கு அறைகூவல் விடுக்கிறது. ஆபேல் ஒரு நீதிமான், காயீன் அவனுடைய இரத்தத்தைச் சிந்தினான். ஆகவே தனக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆபேலின் இரத்தம் தனக்கு நீதி வேண்டி தேவனிடம் முறையிட்டது (வச. 10). பொல்லாங்கனால் ஆட்கொள்ளப்பட்டு, காயீனின் வழியைப் பின்பற்றி, பொறாமையினால் நிறைந்து, ஒருவரைப் பிடித்து, பிலாத்துவிடம் ஒப்படைத்து அநியாயமாய்ச் சிலுவையில் கொலை செய்தார்கள். அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், சொந்தமானவர்களோ அவரைப் புறக்கணித்தார்கள். அவர் தம்முடைய பரிசுத்த இரத்தத்தைத் தரையில் சிந்தினார். ஆனால் ஆபேலின் இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் அதிக நன்மையானதை இந்த இரத்தம் பேசினது. அது நம்முடைய பாவமன்னிப்புக்காக தேவனிடம் மன்றாடியது. கொலைக்குக் காரணமானவர்களுக்காகப் பரிந்து பேசியது. அவரை விசுவாசிப்போருக்கு மன்னிப்பை வழங்கியது. தேவனோடு நம்மை ஒப்புரவாக்கியது. அவரே இயேசு கிறிஸ்து, அவரே நம்முடைய இரட்சகர். நன்றியுடன் அவரை நினைவுகூருவோம்.