October

முதல் காணிக்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 3:1-7)

“ஆபேலையும் அவன் காணிக்கையும் கர்த்தர் அங்கீகரித்தார்” (வச. 4).

தேவன் தன்னுடைய காணிக்கையை நிராகரித்ததால் காயீன் கோபமடைந்தான், அவனுடைய முகநாடி வேறுபட்டது. கர்த்தர் தன் காணிக்கையை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்த்தான். ஒருவேளை அவர் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆபேலின் காணிக்கையைப் பார்த்து இகழ்ந்திருக்கலாம். மந்தையின் ஆட்டுக் குட்டிகளைக் காட்டிலும், தான் கொண்டு வந்த பழங்களும், தானியங்களும் மிகவும் அழகாகவும், சுவையாகவும் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால் ஆபேலின் காணிக்கையைக் கர்த்தர் அங்கீகரித்தார் என்பதற்கு அடையாளமாக அதிலிருந்து எழுந்த புகையையும், தன்னுடைய காணிக்கை அப்படியே இருந்ததையும் கண்டபோது காயீனின் புன்னகை முகம் கோபத்தின் முகமாக மாறியது.

பல நேரங்களில் தேவன் செயல்படுகிற விதம் நமக்குப் பிடிக்கிறதில்லை. தன்னுடையது ஏற்றக்கொள்ளப்படாவிட்டாலும் பரவாயில்லை, பிறருடையது ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறோம். தேவன் தன்னுடைய திட்டத்துக்கு இணங்கவில்லை என்பது அவனுடைய நிம்மதியைக் கெடுத்தது. மூத்த சகோதர சகோதரிகள் இருக்கும்போது, இளையவர்கள் பயன்படுத்தப்பட்டால் நமக்கு பொறாமை வருகிறது, நாம் கோபம் கொள்கிறோம், பல்வேறு நியாயங்களைக் கற்பிக்க முயலுகிறோம். நம்மை ஆராய்ந்து பார்ப்பதற்குப் பதில் மற்றவர்களைக் குற்றஞ்சாட்டத் தொடங்குகிறோம். காயீனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாக இருந்தன என்று புதிய ஏற்பாடு நமக்கு தெளிவாக அறிவிக்கிறது (1 யோவான் 3:12).

தன்னுடைய சுயமுயற்சியினால் கடவுளிடம் சேர முடியும் என்று நினைக்கும் தவறானதும் பொய்யானதுமான மதத்துக்கு காயீனின் செயல்கள் அடையாளமாயிருக்கின்றன. காயீனுடையது விசுவாச மார்க்கம் அல்ல, அது கிரியையின் மார்க்கம். அவனுடைய செயல்கள் முற்றிலும் மனிதத் திட்டம், இது அவனுடைய சொந்தக் கண்டுபிடிப்பு. தவறான முன்னுதாரணத்தைப் பின்பற்றுதல். ஆதாமும் ஏவாளும் இலைகளால் ஆன ஆடையை உண்டாக்கினர், தேவனோ மிருகத்தால் ஆன தோல் ஆடையை உருவாக்கிக் கொடுத்தார். காயீன் பெற்றோரிடமிருந்து தவறான செயலைப் பின்பற்றினானே தவிர, தேவனுடைய செயலைப் பின்பற்றவில்லை.

ஆபேல் தேவ செயலைப் பிடித்துக்கொண்டான். நம்முடைய எண்ணங்களும் திட்டங்களும் தேவ திட்டத்தோடு ஒத்துப்போக வேண்டும், இணங்கிச் செல்ல வேண்டும், அவருக்குப் பிரியமாக இருக்க வேண்டும். இவையே நம்முடையவைகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள். இவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆபேல் தன்னுடைய காணிக்கையை விசுவாசத்தோடு கொண்டுவந்தான். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். தலையீற்று ஆடுகள் சிறப்பானவை, அதிலும் கொழுமையானவற்றை ஆபேல் தெரிந்தெடுந்தான். இது இரத்த பலியை நமக்கு நினைவூட்டுகிறது. நம்முடைய சுயமுயற்சிகள் பயனற்றவை கிறிஸ்துவின் இரத்தமும், அவருடைய கிருபையுமே நம்மை தேவனிடத்திலும் அவருடைய சமூகத்திலும் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. இது ஒன்றே வழி.