August

தேவனுடைய முழுமையான ஆலோசனை

(வேதபகுதி: உபாகமம் 12:29-32)

“நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” (வச. 20).

தேவன் அருளிய வேதவாக்கியங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது முக்கியமானதே. ஆயினும் அதைக் காட்டிலும் முக்கியமான ஒன்று இங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதவாக்கியங்களைக் குறித்த ஒரு தெளிவான அளவீட்டைத் நமக்குத் தருகிறது. “நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்பதே அது. வேதவாக்கியங்களின் அதிகாரத்தைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ள மூன்று பகுதிகளில் இதுவும் ஒன்று. “அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார்” (நீதி. 30:6) என்று சாலொமோன் எச்சரிக்கிறார். மூன்றாவதாக வேத புத்தகத்தின் இறுதியில் இந்த எச்சரிப்பைக் காண்கிறோம் (வெளி. 22:18,19). தேவன் அருளிய வேதவசனங்களோடு மனிதர்களாகிய நாம் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.

சில நேரங்களில் தவறான வைராக்கியம் வேதவாக்கியங்களோடு எதையும் கூடுதலாகச் சேர்க்கச் செய்துவிடும். பரிசேயர்கள் மனுஷருடைய விதிகளையும் பாரம்பரியங்களையும் சேர்த்து தெய்வீகச் சட்டம்போல போதித்ததை இயேசு கிறிஸ்து கடிந்துகொண்டார் (மத். 15:6,9). இது வீணான ஆராதனைக்கு நேராக நம்மை இழுத்துச் சென்றுவிடும். சபைகளில் பாரம்பரியமிக்க பாமாலைகளும், கீர்த்தனைகளும், புதிய பாடல்களும் பாடப்படுவது நல்லதுதான். ஆயினும் அவை வேதவசனங்களுக்கு மாற்றாகவோ அல்லது அதற்கு மேலான இடத்தையோ எடுத்துக்கொள்ளக்கூடாது. மனித பாரம்பரியம் தெய்வீக அதிகாரத்தை ஒன்றுமில்லாமற் செய்துவிடும்.

தவறான வைராக்கியம் வேதவசனத்துடன் எதையாவது கூட்ட முனைந்தால் சமரசப்போக்கு அதிலிருந்து எதையாவது எடுத்துப்போட முயலும். குறைந்த விசுவாசம் வசனங்களை விட்டுவிடுவதற்கு வாய்ப்பை அளிக்கிறது. தேவனற்ற கலாச்சார நெறிமுறைகளின் அழுத்தம், எப்படியாவது எதையாவது சாதித்துவிட வேண்டும் என்னும் பேராசை கொண்ட உலகத்தின் நிகழும் அக்கிரமங்கள், தேவனுடைய வார்த்தையின்மீது வாஞ்சை கொண்டோரின் எண்ணிக்கை குறைதல் போன்றவை தங்களுக்குச் சாதகமற்றதாகவோ அல்லது சங்கடமாகத் தோன்றுகிற வசனங்களைக் கைவிட்டுவிடச் செய்கிறது. மேலும் இவை கிறிஸ்தவம் தன்னுடைய உண்மைத் தன்மையிலிருந்து வழிவிலகிச் செல்லவும், சபையில் ஆண், பெண் வேறுபாட்டின் பங்களிப்பைத் மறுக்கவும், எளிமையான கர்த்தருடைய பந்தியின் கட்டாயத்தைத் துறக்கவும், கிறிஸ்தவ சமய ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்காக அடிப்படைச் சத்தியங்களைப் புறக்கணிக்கவும் வழிவகுக்கும்.

இவ்விதமான பிரச்சினைகளெல்லாம் எதிர்காலத்தில் உருவாகும் என்றே அறிந்த தேவனே, “நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு” (வச.32) என்று கட்டளையிட்டார். இதுவே நமக்கான இன்றைய ஆலோசனை. விசுவாசிகளாகிய நமக்கு, இந்தெந்த வசனங்களுக்கு மட்டுமே கீழ்ப்படிவேன் என்று தெரிந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. தேவனுடைய முழு ஆலோசனையையுமே நாம் நமக்கானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் (அப். 20:26). இவ்வாறு செய்வதில் மட்டுமே நம்முடைய ஆவிக்குரிய பாதுகாப்பு அடங்கியுள்ளது.