August

கள்ளப்போதனைகளுக்குத் தப்புதல்

(வேதபகுதி: உபாகமம் 13:1-18)

“உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும் அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக” (வச. 1-3).

எல்லாக் காரியங்களுக்காகவும் அதாவது தங்கள் நம்பிக்கைக்காகவும், விசுவாசத்துக்காகவும், ஆவிக்குரிய வழிநடத்துதலுக்காகவும் எப்பொழுதும் அடையாளங்களையும் அற்புதங்களையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற மக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாலே ஆபத்திலே சிக்கிக்கொள்ள நேரிடும் என்று தேவன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துவிட்டார். ஆகவே கள்ளப்போதகர்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார். இவர்கள் நம்மை ஆண்டவரை விட்டும், அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பைவிட்டும் பிரித்து அந்நிய கடவுள்களைப் பின்பற்றிச் செல்வதற்கு காரணமாகிவிடுவார்கள். இந்த வேதபகுதி மூலம் மூன்றுவித மக்களால் இத்தகைய ஆபத்துகள் நமக்கு ஏற்படும் என்னும் எச்சரிப்பைப் பெறுகிறோம். முதலாவது, கள்ளத் தீர்க்கதரிசிகள், இரண்டாவது நம்முடைய இரட்சிக்கப்படாத நம்முடைய குடும்ப உறுப்பினர்கள், மூன்றாவது நாம் குடியிருக்கிற இடத்தைச் சேர்ந்த புறமதஸ்தர்கள்.

தேவனுடைய மக்களின் நடுவில் இருந்தே கள்ளப்போதகர்கள் தோன்றுவார்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் இவர்கள் கிறிஸ்தவர்களைப் போலவே காட்சியளிப்பார்கள், மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பிப்பார்கள். கிறிஸ்தவர்களால் இவர்களை அடையாளங் கண்டுகொள்வது கடினம். இவர்கள் நம்மை கிறிஸ்துவை விட்டுப் பிரித்து, தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்வார்கள். தங்களுக்கென ஒரு சமய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்து, கடவுளுக்கும் மக்களுக்கும் ஒரு மத்தியஸ்தர்களைப் போல நடந்துகொள்வார்கள். இவர்களை இவர்கள் போதனையின் மூலம் கண்டுகொள்ளலாம் (வச. 2). இவர்களைக் குறித்து எல்லா அப்போஸ்தலர்களும் எச்சரித்திருக்கிறார்கள். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யாமல், நயவசனிப்பினாலும், இச்சகப்பேச்சினாலும் கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சித்துவிடுவார்கள்” (ரோமர் 16:18; 2 பேதுரு 2;18; 1 யோவான் 2:19; யூதா 4). நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் சத்தத்தை அறிந்தவர்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும் (யோவான் 10:4,5). நாம் வேதத்தைக் கிரமமாகப் படித்து, தேவ சத்தத்தை அறிந்துகொள்ளப் பழகிக்கொள்வோமாயின், கள்ளப் போதகர்கள் ஓடிவிடுவார்கள்.

நம்முடைய குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் வாயிலாகவும் நாம் தேவனைவிட்டு விலகிப்போக வாய்ப்புகள் உள்ளன. நாம் கிறிஸ்துவின் சீடர்களாய் இருப்பதற்கு நம்முடைய குடும்பத்தார் தடையாய் இருந்தால் அவர்களை விட்டு விலகவும் வேண்டும் ஆண்டவர் நமக்குப் போதித்திருக்கிறார் (லூக்கா 14:16). தேவனைவிட்டு பிரிக்கும்படியாக இவர்கள் நம்மிடத்தில் அன்பைக் காட்டக்கூடும். இவர்களுடைய அன்புக்கு நாம் அடிபணிவோமானால் நாம் தேவனிடத்தில் காட்டும் அன்பு குறைந்து போய்விடும்.

நாம் இரட்சிக்கப்பட்ட பின்னரும் இந்த உலகத்திலேயே வாழும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். ஆயினும் நாம் உலகத்தார்கள் அல்லர். புற மதத்தாருடைய அழுத்தம் நம்மேல் நம்மேல் பதியாதபடி நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவிசுவாசிகளுடனான நம்முடைய பிணைப்பு, திருமணம், தொழில் போன்றவற்றில் ஏற்படும் ஒப்பந்தம் நம்மைக் கர்த்தரை விட்டுப் பிரித்துவிடும். ஆகவே அவர்களை முற்றாய் அழித்துவிட்டு, நாம் எப்பொழும் தேவ அன்பில் நிலைத்திருப்போம்.