மார்ச் 6
ஆவியின் கனியோ…. தயவு (கலா.5:22)
மரியாதை, கிருபை, பெருந்தன்மை ஆகியவற்றை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டுவதே தயவு என்றழைக்கப்படுகிறது. நன்மை செய்தல், இரக்கம்பாராட்டுதல், சகாயம் செய்தல் ஆகியவை தயவு என்னும் நற்பண்பின் விளைவுகளாக இருக்கின்றன. தயவுள்ள மனிதன் கடுமையாக நடந்துகொள்வதில்லை, கிருபை பொருந்தினவனாக இருக்கிறான். இரக்கமற்றவனாக நடந்துகொள்வதில்லை. பரிவுடன் நடக்கிறான். எதையும் காணாததுபோலச் செயல்ப்படுவதில்லை. உதவி செய்கிறவனாகத் திகழ்கிறான். மற்றவர்களைக் குறித்துக் கருதுதல் உடையவனாக இருக்கிறான், இரக்கம்பாராட்டுகிறான். பெருந்தன்மையோடு கொடுக்கிறான்.
இவ்வுலக மக்களும்கூட இயற்கையாகவே ஒருவருக்கொருவர் தயவு பாராட்டுகிறவராக இருக்கின்றனா. ஆனால் ஆவியின் கனியாகிய தயவு, இயற்கைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. மனிதன் செய்யக்கூடியதற்கு மேலாகவும் அப்பாற்பட்டும் இது செயல்புரிகிறது. திரும்பப் பெறவேண்டும் என்ற நோக்கமின்றி ஒரு விசுவாசியை இது கடன்கொடுக்கச் செய்கிறது. திரும்பச் செலுத்த இயலாதவர்கட்கு இது விருந்தோம்பல் புரிகிறது. ஒவ்வொருமுறை அவமானப்படுத்தப்படும்போதும், மரியாதை காட்டச் செய்கிறது.
பல்கலைக்கழக மாணவன் ஒருவன், மதுவிற்கு அடிமைப்பட்ட வேறோரு மாணவனிடம், இயற்கைக்கு அப்பாற்பட்ட தயவை வெளிப்படுத்திக் காட்டினான். அந்தக் குடிகாரன் எல்லோராலும் வெறுக்கப்பட்டு, அவனோடு வசித்த மாணவர்களால் அறையைவிட்டு வெளியேற்றப்பட்டான். இந்தக் கிறிஸ்தவ மாணவன் தன்னுடைய அறையில் கூடுதலாகப் படுக்கை ஒன்றை வைத்திருந்தான். ஆகவே அந்தக் குடிகாரனைத் தன்னுடன் வசிக்கும்படியாக ஏற்றுக்கொண்டான். பல நாட்கள் அந்தக் குடிகாரன் வாந்தியெடுத்ததைச் சுத்தம்செய்தான், அவனைக் குளிப்பாட்டினான், அவனுடைய துணிகளைத் துவைத்துக் கொடுத்தான். அவனைப் படுக்கையில் படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு அற்புதமான முறையில் கிறிஸ்தவ தயவு பாராட்டுதலை அந்நண்பன் வெளிப்படுத்திக் காட்டினான்.
இக்கதையின் முடிவில் நல்விளைவு நிகழ்ந்தது. தறிகெட்டு அலையும் குடிகாரன் ஒருநாள் குடிக்கவில்லை. அன்று எரிச்சலோடு, “இங்கே பார், இதெல்லாம் எதற்காகச் செய்கிறாய்? என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய்”? என்று கேட்டான். அந்தக் கிறிஸ்தவன், “உன் ஆத்துமாதான் வேண்டும்” என்று பதில் கூறினான். அதனை அவன் விரைவாகப் பெற்றும் கொண்டான்.
ஒருநாள் இறைமுனைவர் அயன்சைடு தனது வீட்டின் கீழறையைத் தூய்மைப்படுத்தினார். பழைய பத்திரிகைகள், தாள்கள், உலோகப்பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டி, பழைய பொருட்கள் விற்பனை செய்யும் யூதன் ஒருவனை வரவழைத்தார். அவனோடு நல்ல விலை வேண்டும் என்று பேரம் பேசுவதுபோலக் காண்பித்துக்கொண்டார். ஆனால் அந்த யூதனோ பேரம் பேசுவதில் வெற்றிபெற்றான். எல்லாப் பொருட்களையும் எடுத்துச் சென்ற பிறகு அயன்சைடு அந்த மனிதனைத் திரும்பக் கூப்பிட்டு, “நான் ஒன்றை மறந்துவிட்டேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு இதைத் தரவேண்டுமென நினைத்தேன்” என்று கூறி அவன் கையில் அரை பவுண்டு நாணயத்தை வைத்தார். “இதுவரை ஒருவரும் இயேசுவின் நாமத்தில் எதையும் எனக்குத் தந்ததில்லை” என்று சொல்லி நாணயத்தைப் பெற்றுச் சென்றான் அந்த யூதன்.
“ஆவியின் கனியோ… தயவுபாராட்டுதல்”
