நியாயமான தீர்ப்பு

ஜனவரி 31

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் (மத்.7:1)

வேதத்தில் மற்ற பகுதிகளைக் கறித்து அறிவற்ற பலர், இந்த வசனத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு, இதனைப் புதுமையான முறையில் பயன்படுத்தவும் செய்கின்றனர். சொல்லொண்ணா பொல்லாங்குகளை உடைய மனிதனைக் குற்றப்படுத்திப் பேசும் நேரத்தில், இவர்கள் பயபக்தியுள்ள குரலில், “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்ற கூறுவார்கள். அதாவது, தீங்கையம் பொல்லாங்கையும் குற்றம் எனத் தீர்க்கின்ற வேளைகளில், அதைத் தடைசெய்வதற்கும் இவ்வசனத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள்.

இதைக் குறித்து எளிய உண்மை யாதெனில், நாம் தீர்ப்புச் செலுத்தக்கூடாத நேரங்களில் இருப்பது போன்று, தீர்ப்புச்செலத்த வேண்டிய நேரங்களும் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளன என்பதேயாகும்.

நாம் தீர்ப்பு வழங்கக்கூடாத சந்தர்ப்பங்களைக் குறித்து இங்கு நாம் பார்ப்போவம். மற்றவர்களடைய நோக்கங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கலாகாது. நாம் சர்வஞானி அல்லர். ஆகவே, அவர்கள் செய்கின்ற செயல்களை ஏன் செய்கிறார்கள் என்பதை நாம் அறியமாட்டோம். வேறொரு விசுவாசி செய்கின்ற ஊழியத்தை குறித்து நாம் தீர்ப்பு வழங்கக்கூடாது. அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. சரி அல்லது தவறு என்று சொல்லமுடியாதபடி சில ஒழுக்கங்கள் இருக்கும். அப்படிப்பட்டவைகளில் தனது மனச்சான்றின்படி கவனத்தோடு நடக்கிற ஒருவரை நாம் குற்றப்படுத்தக்கூடாது. தங்களுடைய மனச்சாட்சியை மீறுவது அவர்களுக்குத் தவறாகும். வெளித்தோற்றத்தைக் கொண்டும் மனிதர்களைப் பாகுபடுத்தியும் நாம் தீர்ப்பு வழங்கலாகாது. இருதயத்தில் உள்ளதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கடினமான முறையில் வார்த்தைகளால் குற்றப்படுத்துகின்ற ஆவியுடையோராய் நிச்சயம் நாம் இருக்கக்கூடாது. குற்றப்படுத்தவதைத் தன் பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருப்பதில்லை.

ஆயினும், வேறுபல விஷயங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம். எல்லா போகங்களும் வேதத்தோடு உடன்பட்டு உள்ளனவா என்று ஒப்பிட்டுப் பார்த்துத் தீhப்புச்செய்யவேண்டும். அந்நிய நுகத்தோடு பிணைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மற்றவர்கள் உண்மையான விசவாசிகளா என்று தீர்ப்புச்செய்யவேண்டும். விசுவாசிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாதபடி, அவர்களுக்கிடையே உண்டாகும் வழக்குகளில் நாம் தீர்ப்பு வழங்கவேண்டும். விபரீதமான பாவங்களை உள்ளுர் சபையானது தீர்ப்புச் செய்து, அவ்வாறு குற்றம் இழைத்தவர்களைச் சபையின் ஐக்கியத்திலிருந்து வெளியேற்றவேண்டும். மூப்பர்களாகவோ அல்லது உதவிக்காரர்களாகவோ செயல்புரியத் தகுதியுடையவர்களா என்று மனிதர்களைக் குறித்து அச்சபையானது தீர்ப்புச்செய்யவேண்டும்.

குறைகளைக் கண்டுபிடிக்கும் குணத்தை நாம் அடியோடு விட்டுவிடவேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கவில்லை. அதுபோல ஒழுக்கத்திற்கும் ஆவிக்குரியவற்றிற்கும் அளவுகோலைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால், எங்கே தடைசெய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நாம் குற்றப்படுத்தாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். எங்கே தீர்ப்புச் செய்யவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோமோ, அங்கே நியாயமாகத் தீர்ப்புச் செய்யவேண்டும்.

ஊழியத்தின் விலை

ஜனவரி 30

இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்.10:8)

உலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஃபிரிட்ஸ் கிரைஸ்ஸர், எனது உடல் கூறுகளில் இசை நிறைந்தவனாகப் பிறந்தேன். உயிர் எழுத்துக்களை நான் கற்றுக்கொளும்முன்னர், இசைக் குறியீடுகளையெல்லாம் உள்ளுணர்வோடு கற்றுக்கொண்டேன். இது தேவன் தந்த அருளாகும். இதனை நான் என் சுயமுற்சியால் பெறவில்லை. ஆகவே, நான் இசையினை வழங்குவதற்காக நன்றிப்பாராட்டைப் பெற்றிடத் தகுதி படைத்தவனல்லன். இசை, புனிதமானது. அதை விற்கக்கூடாது. இசை மேதைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் பெருங்கட்டணத்தை வசூலிப்பது அவர்கள் சமுதாயத்திற்கு எதிராகச் செய்யும் குற்றமே என்று கூறியுள்ளனர்.

கிறிஸ்தவப் பணியாற்றும் மக்கள் யாவரும் இச்சொற்கள் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பெறுவது அன்று. கொடுப்பதே கிறிஸ்தவ ஊழியமாகும். நான் பெற்றுக்கொள்ள அங்கே என்ன விலை கிடைக்கும்? என்பது நமது கேள்வியாக இருக்கக்கூடாது. மாறாக அதிகமான எண்ணிக்கையில் செய்தியைச் சிறந்த முறையில் எவ்வாறு நான் பகிர்ந்துகொள்ளுவேன்? என்றே கேட்கவேண்டும். கிறிஸ்தவ ஊழியத்தில் காரியங்கள் நாம் விலைசெலுத்த வேண்டியதாக இருக்கவேண்டுமேயொழிய, ஊதியம் பெறுவதாக இருக்கலாகாது.

வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்பது உண்iமாதான் (லூக்.10:7). சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும் என்பது உண்மையே (1.கொரி.9:14). ஆயினும், தன்னுடைய வருகைக்கு ஒரு விலையினை நிர்ணயிப்பது நியாயமாகாது. பாடல்களைப் பயன்படுத்துவதற்கு மிகுதியான பங்கு வீதத்தை வசூலிப்பது சரியல்ல. செய்திகளை அளிப்பதற்கும், பாடல்களைப் பாடுவதற்கும் கட்டணத்தை வசூலிப்பது நன்றன்று.

மாயவித்தைக்காரனாகிய சீமோன், பரிசுத்த ஆவியைக் கொடுக்கத்தக்க அதிகாரத்தை விலைகொடுத்து வாங்க நினைத்தான் (அப்.8:19). தான் பணத்தைச் சம்பாதிக்க சிறந்த வழி இது என்று அவன் நினைத்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இச்செயலால் „சைமோனி“ என்ற சொல் பிறந்தது. மதத்தின் அடிப்படையிலான சிலாக்கியங்கள் வாங்குவதையும் விற்பதையும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய காலச் சமயத்தலைவர்கள் தங்களை உயர்த்துவதற்கு இம்முறையைக் கையாளுகின்றனர் என்று கூறுவோமாயின் அது மிமையாகாது.

„கிறிஸ்தவ ஊழியத்திலிருந்து“ பணத்தை அகற்றிவிட்டால் பெரும்பாலான ஊழியங்கள் நின்றுபோகும். எந்நிலையிலும் கர்த்தருடைய உண்மையும் உத்தமமுமுள்ள ஊழியக்காரார்கள் தங்களுடைய வலிமை முற்றிலுமாகச் செலுத்தித் தீருமட்டும் ஊழியத்தில் முன்னேறிச் செல்வார்கள். இலவசமாய்ப் பெற்றோம். இலவசமாகக் கொடுக்கவேண்டும். நாம் மிகுதியாகக் கொடுக்கக், கொடுக்க, நமது பரலோகின் கணக்கில் நற்பேறு பெருகும். பெரிதான வெகுமதியைப் பெறுவோம். அமுக்கிக் குலுக்கி, சரிந்துவிழும்படி அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள்.

இறைத்திட்டம்

ஜனவரி 29

ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது (மத்.11:26)

பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும், அவர்கள் தெரிந்தெடுக்காதவை சில இடம்பெற்றிருக்கும். அவற்றை உதறித்தள்ள அவர்கள் முயற்சிகள் செய்திருந்தாலும், அவர்களை விட்டு நீங்காமல் இறுகப்பற்றிக்கொண்டிருக்கும். ஒருவேளை, அது உடல் பாதிப்பாக அல்லது உடல் ஊனமாக இருக்கலாம். அல்லது அது நாட்டப்பட்ட நோயாக, நம்மை விட்டு நீங்காமல் தொல்லை தரக்கூடியதாக இருக்கலாம். இவையாவும் விரும்புத்தகாத விருந்தினர்களே!

ஆகவே பெரும்பாலோர் தோல்வியுற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். எந்த நிலையில் தாங்கள் இருந்திருக்கவேண்டும் என்ற கற்பனையில் அவர்கள் வாழ்வார்கள். சுற்று உயரமாக வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. பார்ப்பதற்கு அழகாகவோ, வேறொரு குடும்பத்திலோ, வேறொருஇனத்திலோ பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விளையாட்டு வீரனாகவோ, நல்ல உடல்வலிமை பெற்றவராகவோ இருந்திருக்கலாமே. இவ்வித எண்ணம் பலரைப் பற்றிக் கொள்கிறது.

மாற்ற இயலாதவைகளை ஏற்றுக்கொள்வது மிகுந்த சமாதானத்தை அளிக்கும் என்னும் பாடத்தை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நம் எவ்வாறு இருக்கிறோம் என்னும் நிலை தேவனுடைய கிருபையாக இருக்கிறது. அளவிட முடியா அன்பினாலும் ஞானத்தினாலும் நம்முடைய வாழக்கையை அவர் திட்டமிட்டுள்ளார். அவர் காண்கிற வண்ணமாக நாம் காண்கிறவாகளாக இருப்போமென்றால், அவர் எவ்வாறு செய்திருக்கிறாரோ அவ்வாறே நாமும் செய்ய விளைவோம். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது என்று சொல்லக்கடவோம்.

இன்னும் ஒரு படி முன்னேறிச் செல்வோம். வேறு என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தோடு இதனை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அன்பின் தேவனால் இவை அனுமதிக்கப்பட்டுள்ளன என்ற அறிவோடு,அவரைத் தொழுதுகொள்வதற்கும், நாம் களிகூருவதற்கும் காரணமாக மாற்றிக்கொள்ள வேண்டும். தன் சரீரத்தில் உள்ள முள் நீங்கவேண்டுமென்று பவுல் மும்முறை மன்றாடினார். அந்த முள்ளைத் தாங்கிக் கொள்வதற்கான கிருபையைத் தருவதாக தேவன் வாக்குரைத்தபோது, அப்போஸ்தலன் வியந்து, „ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோசமாய் மேன்மைபாராட்டுவேன்“ என்றுரைத்தார் (2.கொரி.12:9).

சூழ்நிலைகள் யாவும் நமக்கு எதிராக உள்ளன என்று தோன்றும் தருணங்களில் நாம் களிகூர்ந்தவர்களாக, தேவனை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்புகளே அவை என்று எண்ணிச் செயல்புரிவோமானால் அது நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை எடுத்துரைக்கும். தன் கண் பார்வையை இழந்த ஃபேன்னி கிராஸ்பி அம்மையார், இதனைத் தம் இளவயதில் கற்றுக்கொண்டார். அவர் தமது எட்டுவயதில் எழுதிய பாடல்:

கண் பார்வை இலையெனினும் களிகூரும் பிள்ளைநான்
மண்ணுலகு வாழ்வுதனில் போதுமென்று வாழந்திடுவேன்
மற்றவர்கள் அறிந்திராத நற்பேறனைத்தும் பெற்றேன்
ஆழுகையில்லை, புலம்பலில்லை, மானிடரே அறிந்திடுவீர்!

அவசரம்

ஜனவரி 28

விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16)

ஒலியைக்காட்டிலும் செய்தித்தொடர்பு விரைந்து செல்லும் நாட்களில் நாம் வாழ்கின்றோம். “அவசரம்” என்னும் சொல், தற்காலச் சமுதாயத்தின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொல்லாக விளங்குகிறது. எனினும் அச்சொல்லை நல்லதொரு பொருளில் எப்போதாவது மட்டுமே தேவன் பயன்படுத்தியதாகத் திருமறையில் நாம் காண்கிறோம். இஃது நமக்குச் சிறந்த படிப்பினையைத் தருகிறது. “எப்போதாவது” என்று நான் கூறுவதன் காரணம் யாதெனில், மனம்திரும்பிவந்த கெட்டகுமாரனை மன்னிக்கும் பொருட்டு அவசரமாய் சென்ற தகப்பனைத் திருமறையில் காண்பிப்பதேயாகும். பொதுவாகக் கூறுவோமாயின், தேவன் அவசரமாக எதனையும் செய்வதில்லை.

“இராஜாவின் காரியம் அவசரமானபடியினால்” என்று தாவீது உரைத்தபோது (1.சாமு.21:8) அவன் தந்திரமான ஏமாற்றுவேலை செய்த குற்றமுடையவனாக இருந்தான். ஆகவே, முன்னும் பின்னுமாய்ச் சென்று தீவிரமாய் நாம் அலைந்துதிரிவது சரியானதே என்று நியாயப்படுத்துவதற்கு, அவசரம் என்ற தாவீதின் சொற்களை நாம் பயன்படுத்தக்கூடாது.

சொல்லப்பட்டிருக்கிற உண்மை யாதெனில், நாம் இன்றைக்கு எடுத்துக்கொண்ட வசனம் கூறுகிறபடி, கர்த்தரை உண்மையாக நம்புகிறவன், எதையும் அவசரமாய் செய்யவேண்டியதில்லை. நம்முடைய மாம்சத்தில் கட்டுப்பாடின்றி விரைந்து செயல்புரிவதைப் பார்க்கிலும், ஆவியில் அமைதியோடு நடந்து கொள்வது, நமது முயற்சியின் உடனடித் தேவையைச் சிறப்பாக நிறைவேற்றும்.

ஓர் இளைஞனைக் குறித்துக் காண்போம். திருமணம் செய்துகொள்ள அவசரப்பட்டவன். அவன் உடனடியாகச் செயல்ப்படவில்லையென்றால், அந்தப் பெண்ணை வேறொருவன் அடைந்துவிடுவான் என்பதே அவன் கூறிய காரணம். ஆயின், உண்மை யாதெனில் அந்தப் பெண்ணை தேவன் அவனுக்கென்று நியமித்திருந்தால், வேறொருவனும் அவளை அடையமாட்டான். அவள் தேவன் குறித்த பெண்ணாக இல்லாதிருந்தால், துரிதமாய்த் திருமணம் செய், வாழ்வெல்லாம் வருத்தம் கொள் என்னும் கடினமான முறையில் கற்றுக்கொள்ளவேண்டியவனாயிருப்பான்.

முழுநேர ஊழியம் என்று அழைக்கப்படுகிற வேலைக்குச் செல்ல அவசரம் காட்டும் வேறொரு மனிதனைப் பாருங்கள். உலகம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தான் காத்திருக்கக்கூடாது என்று வாதிடுகிறான். நாசரேத் ஊரில் தங்கியிருந்த வேளையில் இயேசு கிறிஸ்து அவ்வாறு வாதாடவில்லை. வெளியரங்கமான ஊழியத்திற்கு அவரைத் தேவன் அழைக்கும்வரை அவர் காத்திருந்தார். தனிநபர் ஊழியம் செய்யும் தருணங்களில், அவ்வப்போது நாம் அவசரத்தைக் காட்டுகிறவர்களாயிருக்கிறோம். கனி பழுக்கும் முன்னரே பறித்தவிடப் பதறுகிறோம். தூயஆவியானவர் ஒருவனுடைய பாவத்தை முற்றிலுமாகக் கண்டித்துணர்த்தும்வரை நாம் பொறுத்திருப்பதில்லை. அவ்வாறு செய்வதால் பொய்யான அறிக்கையும், மனிதன் தகர்ந்துபோவதுமே எஞ்சி நிற்கும். “பொறுமையானது ப+ரண கிரியை செய்யக்கடவது” (யாக்.1:4).

நமக்கென்று நாமாக ஏற்படுத்திக்கொண்ட பணிகளில் மதியீனமாய் ஓடுவதில் உண்மையான பயன் விளைவதில்லை. பொறுமையோடு கர்த்தரிடத்தில் காத்திருப்பவன் பயனுள்ள ஆவியானவரின் வழிநடத்துதலைக் கண்டடைவான்.

ஊக்கமான உழைப்பு

ஜனவரி 27

காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபேசி.5:16)

இப் புவிவாழ் மக்கள் வேலைசெய்வதற்கு மனமடிவு கொண்டிருக்கும் இந்நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கடந்துசெல்லும் காலத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். நேரத்தை வீணாக்குவது பாவம்.

ஊக்கமான உழைப்பின் இன்றியமையாத தன்மைக்கு எல்லாக் காலத்தினரும் நற்சான்று வழங்கியுள்ளனர். நமது இரட்சகர், பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும். ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது என்று கூறியிருக்கிறார்.

தாமஸ் கெம்பிஸ் என்பார், செயலற்றவராக இருக்கவேண்டாம். படியுங்கள் அல்லது எழுதுங்கள் அல்லது ஜெபியுங்கள் அல்லது தியானியுங்கள். இவ்வாறு பயனுள்ள வேலையில் ஈடுபடுவார்களாயின், உங்கள் உழைப்பு, பொதுவான நன்மைகளை விளைவிக்கும் என்று எழுதியுள்ளார். திருமறையை அருமையாக விளக்கித்தரும ஐp. கெம்ப்பேல் மொர்கன் அவர்களது வெற்றிக்குக் காரணம் என்னவென்று வினவியபோது, அன்னார் கொடுத்த பதில், வேலை, கடினமான வேலை, மீண்டும் வேலை என்பதேயாகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபோது ஒரு தச்சராகப் பணிபுரிந்தார் என்பதை நாம் ஒருக்காலும் மறந்துபோகக்கூடாது. அவருடைய புவி வாழ்வின் பெரும்பகுதி நாசரேத்துச் சிற்றூரில் ஒரு சிறிய கடையிலே கழிந்தது. பவுல் கூடாரத் தொழில் புரிந்தார். அப்பணியை தமது ஊழியத்தின் மிகச் சிறந்த பகுதியாகவே கருதினார்.

மனிதனுடைய வாழ்க்கையில் பாவம் பிரவேசித்ததினால் அவன் உழைக்கவேண்டியதாயிற்று என்று கருதுவது தவறு. பாவம் பிரவேசிப்பதற்கு முன்னரே ஆதாம் தோட்டவேலை செய்யும்படியாக ஏதேனில் வைக்கப்பட்டான் (ஆதி.2:15). சாபத்தின் விளைவாக வேலையோடு அயராது கடினமாக உழைக்கவேண்டிய நிர்ப்பந்தமும், வியர்வையும் சேர்ந்தன (ஆதி.3:19). பரலோகத்திலும் வேலை உண்டு, அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள் (வெளி 22:4).

வேலை செய்தல் நற்பேறாகும். நமது கற்பனைவளம் வெளிப்பட நாம் வேலை செய்கிறவர்களாக இருக்கவேண்டும். நாம் கவனத்தோடு வேலைசெய்யும்போது நமது உள்ளமும் உடலும் சிறந்து விளங்குகின்றன. பயனுள்ள வேலையில் ஈடுபாடு உடையோராய் இருப்போமென்றால், பாவத்திலிருந்து காக்கப்படுவோம், செயலற்றுக்கிடக்கும் கைகள் செய்வதற்கு, சாத்தான் சில தீங்குகளைக் கண்டுபிடிக்கிறான். நம்மைச் சோதிக்கும்படி நமது செயலற்ற தன்னமை சாத்தானைச் சோதிக்கிறது என தாமஸ் வாட்சன் என்பார் கூறியுள்ளார். நேர்மையும், கவனமும், உண்மையும் கூடிய வேலை நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இன்றியமையாத சான்றாகும். நாம் இறந்தபிறகும் நாம் செய்ய வேலையின் பயன் நிலைநிற்கும். ஒருவனுடைய சரீரம் கல்லறையில் உறங்கும்வேளையில் அவன் தொடர்ந்து பயனுள்ள வேலைசெய்கிறவனாகக் காணப்பட அவனுக்கே அவன் கடனாளியாயிருக்கிறான் என்று ஒருவர் கூறியுள்ளார். வில்லியம் ஜேம்ஸ் என்பார், நிலைநிற்கும் ஒன்றிற்காக நமது வாழ்வைச் செலவிடுவதே, அதனுடைய பெரும் பயனாகும் என்று சொல்லியிருக்கிறார்.

ஒருவருக்கொருவர் கடனாளிகள்

ஜனவரி 26

பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11)

கட்டுக்கடங்காததும், முன்னரே அறியப்பட்டதுமான உணர்ச்சிப் பெருக்கே அன்பு என்று நாம் நினைத்துக்கொள்ளலாகாது. அன்புகூர வேண்டுமென்று நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். நாம் அறியாதபடி நழுவிச் செல்கிறதாகவும், அங்குமிங்கும் எப்போதாவது ஏற்படுகிற உணர்வாகவும், ஜலதோஷத்தைப் போன்றும் அன்பு இருக்குமென்றால் இக்கட்டளையை நிறைவேற்றுவது முடியாத ஒன்றாகிவிடும். அன்பு உணர்ச்சிப் பெருக்கு உடையதாக இருப்பினும், அது ஒருவருடைய உணர்ச்சியை அ

கற்பனைக் கோட்டையென்னும் உலகத்தில் மட்டுமே அன்பு காணப்படும் என்றும், அனுதின வாழ்க்கயைனி; இன்றியமையாத செயல்களுக்கும் அன்பிற்கும் எவ்வித உறவும் இல்லையென்றும் நாம் எண்ணிவிடக்கூடாது. நீலவொளி, நறுமணப்பூக்கள் இவை சிலமணிநேரம் நம் வாழ்வில் உண்டாவது போல, தரையைக் கழுவுதல், அழுக்கான பாத்திரங்களைக் கழுவுதல் ஆகிய செயல்களும் நம் வாழ்வில் உண்டாகும்.

உத்வேகத்துடன் செயல்படக்கூடியது என்றும், அன்பைக்குறித்துக் கூறலாம். எடுத்துக்காட்டாக பழங்கள் பரிமாறுகின்றபோது அடிபட்ட பழத்தை அன்பு எடுத்துக்கொள்ளும். கை கழுவும் தொட்டியையும், குளியல் தொட்டியையும் பயன்படுத்தியபின்னர் கழுவிச் சுத்தம் செய்யும். தேவையற்ற நேரங்களில், எரியும் விளக்குகளை அன்பு அணைக்கும். தரையில் கிடக்கும் குப்பையை எடுத்துக் குப்பையில் போடும். வாகனத்தைக் கடன்வாங்கித் திருப்பித்தரும்போது எரிபொருளை நிரப்பிக்கொடுக்கும். உணவு அருந்துவதற்கு அமர்ந்திருக்கையில் மற்றவர்களுக்கு முதலில் பரிமாறும். கூட்டங்கள் நடக்கும்போது சத்தமிடும் குழந்தைகளை வெளியே எடுத்துச்சொல்லும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காது. செவிடர்கள் கேட்கத்தக்கதாக அன்பு சத்தமாகப் பேசும். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகக் கடினமாக உழைக்கும்.

இறை அன்பு

ஜனவரி 25

தேவன் அன்பாகவே இருக்கிறார் (1.யோ.4:8)

இப்புவிக்குக் கிறிஸ்து வருகைபுரிந்தபோது, கிரேக்கமொழியில் “அன்பு” என்னும் பொருளடைய புதியசொல்லொன்று பிறந்தது. அதுவே”அகாபே” (Agape) என்னும் சொல்லாகும். நட்புபாராட்டுதலைக் குறிக்க ஃபிலியா (Philia) என்ற சொல்லும், காதல் என்னும் பொருளுடைய “ஈரோஸ்” (Eros) என்னும் சொல்லும் அம்மொழியில் ஏற்கெனவே இருந்தன. ஆயினும், தேவன் தமது ஒரேபேறான குமாரனைக் கொடுத்ததினாலே காண்பித்த அன்பைக் குறிக்க வேறுசொல் அம்மொழியில் இல்லாதிருந்தது. இந்த அன்பை ஒருவரிடத்தில் ஒருவர் காண்பிக்க வேண்டுமென்று தேவன் கற்பித்தார்.

இவ்வன்பு வேறோரு உலகத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இதனுடைய பரிமாணம் வித்தியாசமானது. தேவனுடைய அன்பிற்குத் தொடக்கமில்லை. அதற்கு முடிவுமில்லை. அது எல்லையற்றது. அதனை அளக்க இயலாது. அது முற்றிலும் தூய்மையானது. இச்சையால் கறைபடாதது. தியாக மனப்பான்மையுள்ளது. என்னவிலைகொடுக்கவேண்டும் என்று கணக்கிட்டுப் பார்ப்பதில்லை. கொடுப்பதினாலே அது தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. “தேவன்…. அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்… என்று வாசிக்கிறதினாலே இதனை அறிவோம். பிறருடைய நலனை இவ்வன்பு இடைவிடாமல் நாடுகிறது. அன்புகூரத் தகுதியுடையவர்களிடமும், தகுதியற்றவர்களிடமும் இது செல்லுகிறது. பகைஞரிடத்திலும், நண்பர்களிடத்திலும் அன்புபாராட்டப்படுகிறது. யாரிடம் இவ்வன்பு செலுத்தப்படுகின்றதோ, அவருடைய தகுதியையும், குணநலத்தையும் சார்ந்திடாமல், அன்புசெலுத்துகிறவருடைய நற்குணத்தையே சார்ந்திருக்கிறது. இது முற்றிலும் தன்னலமற்றது. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. சூழ்நிலையை இது தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளாது. எத்தனை தவறுகள் இழைக்கபட்டுள்ளன என்று எண்ணிப்பார்ப்பதில்லை. தனக்கு எதிராகச் செய்த திரளான குற்றங்களையும், அவமானச் செயல்களையும், தயவாகத் திரையிட்டு மூடுகிறது. எப்போதும் மற்றவர்களைக் குறித்தே சிந்திக்கிறது. தன்னைக் காட்டிலும் பிறரை மேன்மையுள்ளவராகக் கருதுகிறது.

ஆனாலும், அன்பு உறுதிபடைத்ததாகும். தேவன் தாம் அன்புகூருகிற தமது மக்களைச் சிட்சிக்கவும் செய்கிறார். தீங்கையும் அழிவையும் பாவம் வருவிக்கின்ற காரணத்தினால், அதனை அன்பினால் பொறுத்துக்கொள்ள இயலாது. மேலும், தான் அன்புகூருகிறவரை தீங்கினின்றும், அழிவினின்றும் அது காக்கவிரும்புகிறது.

தம்முடைய ஒரேபேறான குமாரனைக் கல்வாரிக் குன்றில், சிலுவைமரத்தில் மரணமடைய ஒப்புக்கொடுத்த அன்பே, அன்பின் வெளிப்பாடுகளில் மிகவும் சிறந்தது. “பிதாவே உமது உள்ளத்திற்கு இனிமையானவர், அன்பின் குமாரன், அவரே உம் செல்வம், அவரையே நொறுக்கத்தந்தருளினீர்”, எம்மீது காட்டிய உமதன்பு பெரியது.

களைய வேண்டிய கவலை

ஜனவரி 24

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம் (பிலி.4:6)

பற்பல காரணங்களால் மனிதன் கவலைப்படுகிறான். புற்றுநோய், இருதயக்கோளாறு மற்றும் பல நோய்கள் தங்களைத் தாக்குமோ என்ற எண்ணம். உணவினால் ஏற்படும் உடல்நலக்குறைவு. விபத்தினால் உண்டாகும் மரணம், கம்ய+னிஸ்ட் உலகில் பிள்ளைகளின் வளர்ச்சி இவை யாவும் கவலைதரும் எண்ணங்களாகும். இவ்வாறான எண்ணிலடங்கா கவலைகள் மனிதனைப் பற்றிக்கொள்கின்றன.

இருந்தபோதிலும், தேவனுடைய திருமொழி எதுவாயிருந்தாலும், நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படவேண்டாம் என்று உரைக்கிறது. கவலையற்ற வாழ்வினை நாம் வாழவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இதற்குப் பல நற்காரணங்கள் உள்ளன.

கவலை தேவையற்றது. கர்த்தர் நம்மீது கண்ணோக்கமாயிருக்கிறார். அவர் நம்மைத் தமதுள்ளங்கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார். அவர் அனுமதிக்கும் சித்தத்தினாலொழிய வேறெதுவும் நம் வாழ்வில் நடைபெறுவது இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கோ, விபத்துகளுக்கோ, விதிக்கோ நாம் பலியாகிப்போவதில்லை. நமது வாழ்க்கை தேவனால் திட்டமிடப்பட்டு, கட்டளையிடப்பட்டு, வழிநடத்தப்படுகிறது. கவலை வீணானது. ஒரு பிரச்சனையைத் தீர்க்கவோ, அல்லது தவிர்க்கவோ அதனால் கூடாது. கவலை நாளையதினத்தின் வருத்தத்தை நீக்குவதில்லை. இன்றைய தினத்தின் பலத்தையே அது அழித்துப்போடுகிறது என்று ஒருவர் அழகுறக் கூறியுள்ளார்.

கவலை திங்கு விளைவிக்கக் கூடியது. மனிதர்களுடைய நோய்க்கு பெரும்பாலான காரணம் அவர்களது கவலை, மனத்தாக்கம், உள்ளத்தளர்ச்சி ஆகியவையே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கவலைகொள்வதால் வயிற்றுப்புண் போன்ற பிணிகள் பெருகுகின்றன. கவலை என்பது பாவம். தேவனுடைய ஞானத்தின்மீது கவலை ஐயம் கொள்ளச்செய்கிறது. தேவன் செய்கிறதை, அறியாது செய்கிறார் என்ற எண்ணத்தை அது உண்டாக்குகிறது. அது தேவனுடைய அன்பில் சந்தேகத்தை எழுப்புகிறது. நம்மீது அவர் அக்கறை கொள்கிறதில்லை என்று சொல்கிறது. அது தேவனுடைய வல்லமையில் ஐயம் எழச்செய்கிறது. எனக்கும் கவலையைத் தரும் சூழ்நிலைகளை அவரால் மாற்றமுடியவில்லை என்று கூறுகிறது.

பெரும்பாலான நேரங்களில் நமது கவலையைக் குறித்து பெருமைப்படுகிறோம். ஒருவர் தனது மனைவி இடைவிடாமல் கவலைப்படுவதைக் குறித்துக் கடிந்துகொண்டபோது, நான் கவலைப்படாதிருந்தால் இங்கு ஏதாவது நல்லது நடந்திருக்குமா? என்று அவள் வினாவினாள். கவலையைப் பாவம் என்று அறிக்கையிட்டு, அதனைவிட்டொழிக்கவில்லையெனில் அதனின்றும் நாம் மீளமாட்டோம். அவ்வாறு விட்டொழிப்போமாயின் நாம் நம்பிக்கையுடன் இவ்வாறு கூறமுடியும். நாளைய தினத்தைக்குறித்து கவலைகொள்ளேன், எனது இரட்சகர் என்னைக் கவனித்துக்கொள்வார். ஒருவேளை அதிலும் துன்பமும் வேதனையும் இருக்குமாயின், அதைத்தாங்க தேவையான பலத்தையும் அவர் தந்தருளுவார். நாளைய தினத்தைக் குறித்த கவலை கிருபையையும், பலத்தையும் எனக்குத் தரப்போவதில்லை. அவ்வாறாயின் அக்கவலையை நான் ஏன் இன்று கொண்டிருக்கவேண்டும்?

அறியப்படாத கிறிஸ்தவன்

ஜனவரி 23

நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே (எரேமி.45:5)

கனம் பொருந்திய மனிதன் என்று பெயர்பெற வேண்டும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலம் தமது பெயர் காணப்படவேண்டும் என்ற தந்திரமான சோதனைகள் கிறிஸ்தவ ஊழியத்திலும் ஏற்படும். ஆனால் இதனை நாம் வளரவிடுவோமெனில் பின்னர் இது மிகப்பெரிய கண்ணியாகிவிடும். கிறிஸ்துவின் மகிமையை இது கொள்ளையிடுகிறது. நம்முடைய சமாதானத்தையும், மனமகிழ்ச்சியையும் இது கொள்ளையிடுகிறது. பிசாசு சுடும் குண்டுகளுக்கு நாம் இலக்காகிவிடுகிறோம்.

கிறிஸ்துவின் மகிமையை இது கொள்ளையிடுகிறது. ஊ.ர். மெக்கின்டேஷ் என்பார், ஒருவரோ அல்லது அவரது ஊழியமோ சிறப்புவாய்ந்ததாக ஆகும்போது, அங்கே பெரிய ஆபத்து காத்திருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவேயன்றி வேறொருவர்மீது கவனம் செலுத்தப்படுகிறது என்றால், பிசாசு தனது நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய நேரத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அவர் அறியவேண்டும். ஒரு ஊழியம் ஆனது முடிந்தமட்டும் மிக எளிமையாகத் தொடங்கப்பட்டிருக்கலாம். என்றாலும் பரிசுத்த கவனக்குறைவினாலே, ஊழியரின் ஆவிக்குரிய குறைவினாலோ, அவரோ அல்லது அவருடைய ஊழியமோ அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாகக் காணப்படும். அப்பொழுது அவர் பிசாசின் வலைக்குள் வீழ்ந்துவிடுகிறார். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை கனவீனப்படுத்துவதே சாத்தானின், இடைவிடாத பெரிய நோக்கமாக இருக்கிறது. கிறிஸ்தவ ஊழியமாகக் காணப்படுகிறவற்றில் இத்தகைய செயலைச் பிசாசினால் செய்யமுடியுமாயின், இன்னும் பெரிதான வெற்றிகளை அவனால் அடையமுடியுமென்று கூறியுள்ளார்.

திருவாளர் டென்னி அவர்களும் ஒரே நேரத்தில் தன்னைப் பெரியவன் என்றும் கிறிஸ்து அற்புதமானவர் என்றும், ஒரு மனிதனால் நிரூபிக்கமுடியாது எனக் கூறியுள்ளார்.

நம்மையே நாமும் இச்செயலில் கொள்ளையிடுகிறவர்களாக இருக்கிறோம். நான் பெரியவனாக ஆகவேண்டும் என்ற முயச்சியை கைவிடும்வரை உண்மையான சமாதானத்தையும், மன மகிழ்ச்சியையும் நான் அறிந்தேன் இல்லையென்று ஒருவர் கூறியுள்ளார்.

புகழ்பெறவேண்டும் என்னும் விருப்பம், சாத்தானின் தாக்குதலுக்கு ஆளாகும், அமர்ந்திருக்கும் வாத்தினைப்போல நம்மையாக்கும். எல்லோராலும் அறியப்பட்ட ஒருவருடைய வீழ்ச்சி, கிறிஸ்துவிற்கு அதிக நிந்தையைக் கொண்டுவரும்.

மேன்மைபாராட்டலை யோவான்ஸ்நானகன் விடாமுயற்சியுடன் துறந்தார். அவருடைய இலக்கு, அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதேயாகும்.

நம்மை மேலே வரும்படிக்கு கர்த்தர் அழைக்கும்வரை நாம் தாழ்மையான இடத்தில் தங்கியிருப்போம். கிறிஸ்து ஒருவராலே மட்டும் அன்புகூரப்படவும், பாராட்டப்படவும், மற்றவர்களால் அறியப்படாத சிறியவனாக இருக்கவும் என்னைக் காத்துக்கொள்ளும் என்பதே நமது ஜெபமாக இருக்கட்டும்.

நாசரேத் ஓர் சிற்றூர், கலிலேயாவும் எளிமையானதே.

தேவனுடைய பதிவேடு

ஜனவரி 22

அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை. (எண்.23:21)

எல்லாவற்றையும் காண்கிற தேவன் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலிலே அக்கிரமத்தைக் காண்கிறதில்லை என்று, கூலிக்கு முன்னுரைப்போன் பாலாம் உரைத்தபோது, ஒரு குறிப்பிடத்தக்க உண்மையை விளம்பினான். அந்நாளில் இஸ்ரவேலுக்கு எது பொருத்தமுடையதாக இருந்ததோ, இந்நாளில் அது விசுவாசிகளுக்கு வியத்தகுவகையில் பொருத்தமுடையதாய் இருக்கிறது. நித்திய மரணமாகிய ஆக்கினையைச் செலுத்தத்தக்கதாக, ஏதொரு பாவத்தையும் ஒரு விசுவாசியினிடத்தில் தேவன் காண்கிறதில்லை. விசுவாசி கிறிஸ்துவுக்குள் இருக்கிறான். கிறிஸ்துவின் நிறைவோடும், தகுதியோடும் அவன் தேவனுக்கு முன்னர் நிற்கிறான் என்பதே இதன் பொருளாகும். தமக்குச் சொந்தமான இனிய குமாரனை ஏற்றுக்கொள்கிறபடியே, விசுவாசியையும் அவர் எற்றுக்கொள்கிறார். இது அவர் தம் விருப்பத்தினால் அருளிய பதவியாகும். இந்நிலையை இன்னும் மேலானதாக நம்மால் ஆக்கமுடியாது. இந்நிலைக்கு முடிவில்லை. எவ்வளவுதான் தேடிப்பார்த்தாலும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் மனிதனுக்கு எதிராக ஏதொரு குற்றத்தையும் தேவனால் சுமத்தமுடியாது.

இதனை ஒரு நிகழ்சியின் வாயிலாக விளக்கிக் கூறலாம். ரோல்ஸ் ராய்ஸ் என்னும் புகழ்பெற்ற வாகனத்தில் ஒரு ஆங்கிலேயன், பிரஞ்சு நாட்டிற்கு தன் விடுமுறையைக் கழிக்கச் சென்றான். அவனுடைய பயணத்தின்போது அந்த வண்டியின்பின் அச்சு முறிந்து போயிற்று. அங்கிருந்த நிறுவனத்தினால் அதனைப் பழுது பார்க்க இயலாது போயிற்று. இங்கிலாந்திற்குத் தொலைபேசியில் செய்தி அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தார் உடனடியாகப் புதிய அச்சையும் இரண்டு வல்லுனர்களையும் அனுப்பினர். வாகனம் சீராக்கப்பட்டது. ஆங்கிலேயன் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு பின்பு தாய்நாடு திரும்பினான். சில மாதங்கள் கழித்தும் வாகனம் பழுதுபார்க்கப்பட்டதற்கான பணச்செலவு கேட்கப்படாததால், அவன் நிறுவனத்திற்கு அந் நிகழ்ச்சியைக் குறித்து எழுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக வேண்டினான். சிறிது நாட்களுக்குள்ளாக நிறுவனத்திலிருந்து பதில் வந்தது. எங்களுடைய பதிவேடுகள் அனைத்தையும் தேடிப் பார்த்தோம், வாகனத்தின் அச்சு அடைந்ததாக எந்தக் குறிப்பும் பதிவாகவில்லை.

தமது பதிவேட்டில் கவனத்தோடு தேடிப் பார்த்தாலும், விசுவாசியை நரகத்திற்கு அனுப்பக்கூடிய தீர்ப்பை வழங்கத்தக்க எந்தவொரு பாவத்தையும் தேவனால் காணமுடியாது. தமக்குப் பிரியமானவருக்குள்ளாக விசுவாசி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறான். தேவனுடைய நீதியால் உடுத்திவிக்கப்பட்டுள்ளான். தேவனுக்கு முன்னர் முற்றிலும் நிறைவான ஸ்தானத்தை அவன் பெற்றுள்ளான். முதலில் என் இரட்சகரின்பால் சென்று, தேவனுடைய கணக்கின்படி அவரை ஆராய்ந்து பாருங்கள். அவரிடம் ஏதேனும் குற்றம் இருக்கிறதென்று மெய்ப்பியுங்கள். நான் தூய்மையற்றவன் என்று பின்னர் கூறுங்கள், என்று நம்பிக்கையுடன் வெற்றி முழக்கமிடுவோம்.

தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்

ஜனவரி 21

கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.  (1.சாமு.16:14)

பொல்லாங்கான செயல்களைத் தேவன் செய்கிறதுபோலத் தோன்றும் வசனங்களை நாம் திருமறையில் காணலாம். எடுத்துக்காட்டாக “அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார் (நியா.9.23) என்று கூறப்பட்ட நிகழ்ச்சி அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்த காலத்தில் நடந்தது. ஆகாப்பின் காலத்தில், மிகாயா அந்தப் பொல்லாத மன்னனிடத்தில், கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார் என்று கூறினான் (1.இராஜா.22:23). யோபு தன்னுடைய இழப்பிற்க கர்த்தரே காரணர் என்றுரைத்ததாகக் காண்கிறோம், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையைப் பெறவேண்டாமோ (யோபு 2:10). ஏசாயா 45:7ம் வசனத்தில் கர்த்தர் தாமே உரைக்கிறார், “சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்கினவர் நானே”. என்றாலும், தேவன் தூயராக இருக்கிற காரணத்தினால், பொல்லாங்கை அவரால் தொடங்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது. நோயும், பாவமும், பாடுகளும், மரணமும் கர்த்தரிடத்தில் இருந்து வருவதில்லை. அவர் ஒளியாய் இருக்கிறார். அவரிடத்தில் இருளானது இல்லவே இல்லை (யோ.1:5).

நோய்க்கும், பாடுகளுக்கும், சோகத்திற்கும், அழிவிற்கும் சாத்தானே தொடக்கமாக இருக்கிறான் என்பதைத் திருமறைப் பகுதிகள் பல தெளிவாக விளக்குகின்றன. பிசாசே, யோபுவின் இழப்பிற்கும், தாங்கவொண்ணா வேதனைக்கும் காரணமாய் இருந்தான். நிமிரக்கூடாத கூனியாக ஒரு பெண்மணி 18 ஆண்டுகள் சாத்தானால் கட்டிவைக்கப்பட்டிருந்தாள் என்று இயேசு கிறிஸ்து கூறினார் (லூக்.13:16). தன் சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளைப்பற்றி, என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது என்று பவுல் கூறினார் (2.கொரி.12:7). மனுக்குலத்திற்கு ஏற்படும் அனைத்துத் தொல்லைகளுக்கும் சாத்தானே காரணன். அவ்வாறாயின், பொல்லாங்கைத் தேவன் தோற்றுவிக்கிறார் என்று தோன்றும் வசனங்களை எங்கனம் விளக்குவது? தேவன் சிலவற்றை அனுமதிக்கிறார். அவற்றைத் தேவனே செய்கிறார் என்று தெரிவிக்கும் வசனங்களைத் திருமறையில் காணலாம் என்பதே அதன் பொருளாகும். அவருடைய ஆணையிடும் சித்தம் என்றும், அவருடைய அனுமதிக்கும் சித்தம் என்றும் இதனைப் பகுத்துக் காணவேண்டும். தம்முடைய பிள்ளைகளுக்கென்று முதலவதாகத் தெரிந்துகொள்ளாத அனுபவங்களில் ஊடாக அவர்கள் செல்லும்படி அவர் அனுமதிக்கிறார். வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் அலைந்து திரியும்படியாக அனுமதித்தார். ஆனால் அவருடைய கட்டளையாகிய சித்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் நேரான வழியில் அவர்களை வாக்குறுதி அளிக்கப்பட்ட நாட்டிற்குக் கொண்டுவந்திருப்பார்.

பொல்லாங்கான ஆவிகளையும் மனிதர்களையும் அவர் அனுமதித்தாலும், கடைசி வார்த்தை அல்லது தீர்ப்பு எப்பொழுதும் தேவனுடையதே. அவருடைய மகிமைக்காக அதனைத் தமது மேலான அதிகாரத்தினால் மாற்றுகிறார். அதன் நிமித்தமாகத் தங்களைச் சீர்படுத்திக் கொண்டிருக்கும் நற்பேற்றை நல்குகிறார்.

மன்னித்து மறக்கிற தேவன்

ஜனவரி 20

அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17)

கிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு உடையவராக தேவன் இருக்கிறார் என்னும் உண்மை, நமது ஆத்துமாவிற்கு மனநிறைவு அளிக்கக்கூடியதாகும். வேதத்தில் சொல்லப்பட்ட மிகச்சிறந்த உண்மைகளில் இதுவும் ஒன்றாகும்.

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் என்று நாம் படிக்கும்போது அது நமக்கு எத்தனை வியப்பளிக்கிறது (சங்.103:13). என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர் என்று எசேக்கியாவோடு சேர்ந்து நாம் கூறுவோமாயின் அது எத்தனை இன்பமாயிருக்கும் (ஏசா.38:17). உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன் என்னும் கர்த்தருடைய வாக்கு நம்முடைய உள்ளங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கச்செய்கிறது (ஏசா.44:22). நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன் என்பதை நாம் வாசிக்கும்போது, அது நமக்கு இன்னும் மிகுதியான வியப்பைத் தருகிறது (எரேமி.31:34).

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கைசெய்யும்போது, அவர் மன்னிப்பதோடு அதனை உடனடியாக மறக்கவும் செய்கிறார். அவருடைய மறதி என்னும் பெருங்கடலுக்குள், நமது பாவங்களை அறிக்கை செய்த உடனேயே மூழ்கடித்துவிடுகிறார் என்னும் உண்மை நம்முடைய கற்பனை வளத்தினால் உண்டாக்கப்பட்டதன்று. இதனை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சியால் விளக்கலாம். அவருடைய வாழ்க்கையில் அலைபாயும் பாவம் அவருக்குப் பெருந்தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தது. உடனே கர்த்தருக்கு முன்பாக ஓடிச்சென்று, கர்த்தாவே, அதனை நான் மீண்டும் செய்துவிட்டேன் என்று எதையும் சிந்திக்காமல் கூறுவார். எதனை நீ மீண்டும் செய்தாய்? என்று கர்த்தர் அவரிடம் கேட்பதாக எண்ணுவார். இங்கு சொல்லப்படுகிற உண்மை யாதெனில், பாவத்தை அறிக்கை செய்த அரைநொடியில், தேவன் அப்பாவத்தை மறந்துவிடுகிறார் என்பதேயாகும்.

சர்வ ஞானியான தேவன் மறக்கக்கூடியவர் என்பது முரண்பாடாகத் தோன்றுகிறது, எனினும் அது நமக்கு உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். விண்மீன்களை எண்ணி ஒவ்வொன்றையும் பெயர்சூட்டி அழைக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அலைக்கழிப்பையும், கண்ணீரையும் எண்ணி வைத்திருக்கிறார். சிட்டுக்குருவி மாய்ந்து வீழ்வதையம் அறிந்திருக்கிறார். நம் தலையில் எத்தனை முடிகள் உண்டு என்பதை அவர் அறிவார். என்றாலும் அறிக்கைசெய்து விட்டுவிட்ட பாவத்தை அவர் மறந்துவிடுகிறார். சர்வஞானி எவ்வாறு மறக்கமுடியும் என்பதை நான் அறியமாட்டேன். ஆனால் அவர் மறக்கிறார் என்று டேவிட் சீமன்ட்ஸ் என்பார் கூறியுள்ளார்.

கடைசியாக, தேவன் மன்னித்து மறந்துவிடுகிறபோது அங்கே, “தோண்டிப்பார்க்காதே” என்னும் அறிவிப்புப் பலகையை வைத்துவிடுகிறார். தேவன் மறந்துவிட்ட நம்முடைய முந்தின பாவங்களையும், பிறருடைய பாவங்களையும் நாம் தோண்டியெடுத்து அலசிப்பார்க்கக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருக்கிறோம். இதில் நாம் கொஞ்சமாக நினைவுகூர்தலும், மிகுதியான மறதியும் உடையவர்களாயிருக்கவேண்டும்.

பாவத்தை அறிக்கையிடுதல்

ஜனவரி 19

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1.யோ.1.9)

இவ்வசனத்தைப் பற்றிக்கொள்ளாமல், கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். கிருபையைப் பெற்றிருக்கும் நாம், முழுவதும் பாவமாயிருக்கிறோம் என்னும் உண்மையை மிகவும் கவனத்தோடு எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்கவேண்டும். அவ்வப்போது நம்முடைய பாவங்கள் உடனுக்குடன் கழுவப்படுதலுக்கு ஏதோ ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும். இல்லையெனில் அதினிமித்தம் தொடர்ந்து நம்மைப் பற்றும் குற்றஉணர்வினாலும், தோல்வியினாலும் நாம் அழிந்தேபோவோம். விசுவாசிகளுடைய பாவம் கழுவுவதற்கான ஏற்பாடு பாவ அறிக்கை செய்வதால் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று யோவான் இங்கே எடுத்துக் கூறுகிறார். அவிசுவாசிகள் தங்களுடைய பாவங்களுக்கான ஆக்கினையிலிருந்து, நீதிமன்றம் வழங்குவதற்கொப்பாகப் பாவமன்னிப்பை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பெறுகிறார்கள். மாறாக விசுவாசிகளோ, தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதால், பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பெறுவது போன்று மன்னிப்பைப் பெறுகின்றனர்.

தேவனுடைய பிள்ளையானவன் தனது பாவத்தினால் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியத்தை இழந்து போகிறான். அந்தப் பாவம் அறிக்கை செய்யப்பட்டு விட்டுவிடப்படுகிறவரை, அந்த ஐக்கியம் முறிந்தே காணப்படும். நாம் அறிக்கை செய்கிறபோது, நம்மை மன்னிப்பதாக தேவன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உண்மையுள்ளவராக இருக்கிறார். கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய செயலின் அடிப்படையில் உண்டான நீதியால் அவர் நம்மை மன்னிக்கிறார்.

நாம் நம்முடைய பாவத்தை அறிக்கை செய்வதால், குற்றங்கள் நீங்கி, முற்றிலும்மாகக் கழுவப்பட்டு மகிழ்ச்சியுடைய முன்னிருந்த குடும்ப ஐக்கியத்தின் நிலைமைக்குக் கொண்டுவரப்படுகிறோம் என்றே இவ்வசனம் கூறுகிறது. ஆகவே, நமது மனச்சாட்சி நமது வாழ்க்கையில் பாவம் உண்டு என்று எடுத்துரைக்கும்போது, தேவனுடைய முன்னிலையில் சென்று, பாவத்தை அதனுடைய பெயர் சொல்லி அழைத்து, அறிக்கையிட்டு அதனைக் களைந்து, அது நம்மைவிட்டு அகற்றப்பட்டுவிட்டது என்பதை அறியவேண்டும்.

இதனை எவ்வாறு உறுதியாக அறிய முடியும்? மன்னிக்கப்பட்டாயிற்று என்று உணர்வதாலோ? அல்ல, இது உணர்ச்சியோடு சம்பந்தம் உடையது அன்று. தேவன் தம்முடைய திருமொழியில் அங்கனம் கூறியிருப்பதால், இதனை நாம் அறிகிறோம். உணர்ச்சிகளைச் சார்ந்திருப்பது சிக்கல் உடையது. தேவனுடைய திருமொழியோ உறுதிபடைத்தது.

தேவன் என்னை மன்னித்துவிட்டார் என்று நான் அறிவேன். ஆனால் என்னை நான் மன்னிக்கமுடியாது என்று ஒருவர் கூறலாம். இவ்வாறு கூறுவது பக்தி வேடம் அணிந்த ஒன்றாக இருப்பினும், தேவனைக் கனவீனப்படுத்துவதாகவே அமையும். தேவன் என்னை மன்னித்திருப்பதன் காரணம் யாதெனில், விசுவாசத்தினாலே அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதும், அதில் களிகூரவேண்டுமென்பதும், கழுவப்பட்ட பாத்திரமாக வெளியில் சென்று அவருக்குப் பணியாற்றவேண்டுமென்பதுமேயாகும். இதனை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

பயனற்ற அரசியல்

ஜனவரி 18

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோ.18:36)

கிறிஸ்துவுpன் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்னும் உண்மை, இவ்வுலக அரசியலிலிருந்து என்னை விலக்கி வைத்துக்கொள்ளப் போதுமானதாகும். இவ்வுலக அரசியலில் நான் பங்கு வகிக்கிறவானாக இருப்பேனாயின், உலகப் பிரச்சனைகளுக்கும்  அரசியல் தீர்வுகாணும் என்ற நன்பிக்பைப்பு வாக்களிப்பவனாக இருப்பேன். அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஏனெனில், உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று அறிந்திருக்கிறேன். (1.யோ.5:19).

சமுதாயத்தின் பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வுகள், அழுகிய புண்களுக்கு எண்ணெயைத் தொட்டுவைப்பது போலிருக்கும். நோயின் காரணத்திற்கு அந்த மருந்து தீர்வாகாது. நோயுற்ற சமுதாயத்திற்குக் காரணம் பாவமே என்பதை நாம் அறிவோம். பாவத்திற்கு விடைகாணாமல், வேறொரு முறையில் அந்நோயை அகற்ற முடியாது. ஒரு விசுவாசி அரசியலில் ஈடுபடும்போது எவ்வெவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கிறார். அரசியலுக்கா, நற்செய்திப்பணிக்கா எதற்கு அதிக நேரத்தைக் கொடுப்பது என்று எண்ணுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இதற்குப் பதிலுரைக்கிறார். மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி (லூக்.9:60). இந்த உலகத்தின் பிரச்சனைகளுக்கு கிறிஸ்துவே விடையாக இருக்கிற காரணத்தினால், எல்லாவற்றிற்கும் மேலான முதலிடத்தை நற்செய்திப் பணிக்கே அளிக்க வேண்டும்.

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (2.கொரி.10:4). இதனை அறிந்தவர்களன நாம், தேசங்கள் மற்றும் உலகளாவிய வரலாற்றை நம்முடைய வாக்குச் சீட்டிற்கும் மேலாக, நமது ஜெபங்கள், உபவாசம், தேவனுடைய திருமறை ஆகியவற்றின் மூலமாகச் சீராக்க முடியும் என்பதை உணரக்கடவோம்.

இயற்கையாகவே அரசியல் ஊழல் மிகுந்தது என்று ஒரு அரசியல்வாதி கூறியுள்ளார். நடக்க வேண்டிய முறையை மறந்துவிட்டு கிறிஸ்தவ சபை மனிதர்களுடைய விவகாரத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் வேளையில் கிறிஸ்த சபை உலகத்தோடு போட்டியிடுவதற்குத் தகுதியற்றது என்பது வெளிப்படும். மேலும் தனது நோக்கத்தையும் தூய்மையையும் இழந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல நாடுகளினின்றும் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயருக்காக மக்களைப் பிரித்தெடுக்க வேண்டுமென்பதே அவரது நோக்கமாகும். (அப்.15:14).  ஊழல் மிகுந்த உலகில் மக்களை இன்புற்றுக் குடியிருக்கச்செய்பது அவரது நோக்கமன்று. இதனின்று மக்களை இரட்சிக்கவே அவர் நோக்கங்கொண்டிருக்கிறார். இந்த மகிமைநிறை மீட்புப் பணிக்காக, தேவனுடன் இணைந்து உழைக்க நம்மை ஒப்புவிப்போம்.

வேவனுக்கென்ற செய்கைகளை நடப்பிக்க என்ன செய்யவேண்டும் என்று மக்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்டபோது, அவர் அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை என்றார் (யோ.6:28-29). ஆகவே,  தேவனை விசுவாசிக்கும்படி மனிதர்களை வழிநடத்துவதே நம் பணியாகும். வாக்குச் சாவடிக்கு வழிநடத்துவது நம் பணியன்று.

எளிமையில் மேன்மை

ஜனவரி 17

மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8)

அடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள் என்று தங்களைக் குறித்து அறிக்கை செய்கின்ற யாவருக்கும் பொருத்தமுடையவை என்னும் பொருளை ஏந்தி வருகின்றன (எபேசி.6:5-8).

எந்தக் கனமான ஊழியத்தையும், அது எவ்வளவு சாதாரணமாக இருக்கலாம். தேவனுடைய மகிமைக்கு என்று செயல்ப்படுத்த முடியும் என்பதை அந்த அறிவுரைகள் நமக்கு முதலாவதாகத் தெரிவிக்கின்றன. அந்த அடிமைகள் தரையைச் சுத்தம்செய்வார்கள், உணவு ஆயத்தம் செய்வார்கள். பாத்திரங்களைக் கழுவுவார்கள். கால்நடைகளைப் பராமரிப்பார்கள் அல்லது பயிரை விளையச் செய்வார்கள். இவை யாவற்றையும் அவர்கள் நாள்தோறும் செய்தாலும், எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கென்று செய்யவேண்டுமென்று அப்போஸ்தலன் கூறியிருக்கிறான் (வச 6). அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்யும் வேளையில் கிறிஸ்துவுக்கு அடிமைகளாக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யவேண்டும். கர்த்தருக்கென்றே ஊழியம் செய்யவேண்டும் (வச 8). நன்மை செய்து கர்த்தரிடத்தில் அதற்குரிய பலனை அடைவார்கள் (வச 7).

நாம் செய்கின்ற வேலைகளை உலகசார்ந்தது என்றும், புனிதமானது என்றும் பாகுபடுத்திச் சிந்திக்கிறோம். வார நாட்களில் நாம் செய்கின்ற அலுவல்கள் யாவும் உலகு சார்ந்தது என்றும், நாம் செய்யும் பிரசங்கங்கள், சாட்சி கூறுதல், திருமறை நூலைக் கற்பித்தல் போன்றவை யாவும் புனிதமானது என்றும் கருதுகிறோம். ஆயின், கிறிஸ்தவன் அங்ஙனம் பாகுபடுத்திப் பார்க்கவேண்டியதில்லை என்று இப்பகுதி நமக்குக் கற்பிக்கிறது. புகழ்பெற்ற இறைப்பணியாளரின் மனைவி, இதனை நன்கு உணர்ந்தவராக தனது சமையல் அறையில், இறை ஊழியம் நாள் ஒன்றுக்கு மும்முறை இங்கு செய்யப்படுகிறது என்று எழுதி வைத்திருந்தார்.

மற்றுமொரு அருமையான பாடத்தையும் இங்கு நாம் கற்றிடலாம். சமுதாயத்தில் எவ்வளவுதான் தாழ்வான நிலையில் ஒருவர் இருந்தாலும் கிறிஸ்தவத்தின் மிகச்சிறந்த நற்பேறுகளும், பலங்களுக்கும் அவரை விலக்கிவைக்கமுடியாது. ஒருவருடைய வேலையில் அவர் அணியவேண்டிய ஆடை உயர்தர ஆடையாக இருக்காது. ஆயினும் அவருடைய வேலை கண்ணியமானதாக இருக்குமென்றால் அது கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டுவரும். அவர் மேலான பலன்களை நிறைவாய்ப் பெறுவார். அடிமையானவனானாலும் சுயாதீனமுள்ளவனானாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவான் (வச 7).

இவ்வுண்மையை விசுவாசித்து, எல்லாவற்றிலும் உண்மைப் பார்க்கவும், எதைச்செய்தாலும், அதை உமக்கென்;று செய்யவும் என் தேவனே கற்றுத் தாருமென்று ஜார்ச் கெர்பட்டைப்போல ஜெபம் செய்வோம்.

தோல்விக்குப் பின் வெற்றி

ஜனவரி 16

இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
(யோனா 3:1)

நம்பிக்கையையும், வாக்குறுதியையும் ஏந்தியவாறு, ஒளிவீசும் நற்செய்தியைக் காண்கிறோம். ஒரு மனிதனுடைய வீழ்ச்சியின் காரணமாக அவனை தேவன் அறைக்குள் வைத்துப் பு+ட்டிவிடுவதில்லை.

வன்மையான உண்மையோடு தாவீதின் குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை நாம் படிக்குங்கால், அவனோடு புழுதியில் அமர்ந்து, வெட்கத்தில் மூழ்கிப்போகிறோம். ஆனால், மனம் உடைந்த தாவீது மனந்திரும்பவேண்மென்ற வேட்கையோடு கர்த்தரின் பாதத்தில் வீழ்ந்தான். தேவன் அவனை மன்னித்து, கனிதரும் வாழ்வினைத் திரும்பக்கொடுத்தார்.

தேவனுடைய ஊழிய அழைப்பிற்கு இணங்காமல், மீனின் பெருவயிற்றினுள் சென்றடைந்தான் யோனா. உயிருள்ள நீர்மூழ்கிக் கப்பலாகிய அவ்விடத்தில் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டான். இரண்டாம் முறை தேவனுடைய அழைப்பினைப் பெற்ற யோனா, நினிவே பட்டணம் சென்று, சடுதியாய் வரவிருக்கும் ஆக்கினையை மொழிந்து, மக்கள் பெருங்கூட்டம் மனம் தாழ்த்தி துக்கத்தில் ஆழ்ந்ததைக் கண்டான்.

பவுலோடும், பர்னபாவோடும் பளிச்சிடும் வண்ணம் பணியினைத் தொடங்கிய மாற்கு, தொடர்ந்து செல்ல வகையறியாது வீடு திரும்பினார். எனினும், தேவன் அவரைக் கைவிடவில்லை. மீண்டும் போர்பொரு உறுதிப+ண்ட மாற்கு, நற்செய்திப் பணிவீரர் பவுலின் நம்பிக்கையைப் பெற்று, குறைவில்லாத ஊழியரின் நற்செய்தியை எழுதும் பேறுபெற்றார்.

சாகாத பற்றுடன் பதறிப்பேசிய பேதுரு, கர்த்தரை மும்முறை மறுத்துரைத்தார். சிறகொடிந்த பறவை மீண்டும் சீருடன் பறக்காது என்றே எண்ணுவர் மானிடர். பயனற்றவர் என்று பேதுரு கைவிடப்படவில்லை. எட்டாத உயரத்துக்கு தேவன் அவரைப் பறக்கச் செய்தார். பெந்தெகொஸ்தே பெருநாளில் 3000 பேருக்குப் பரலோகின் கதவைத் திறந்தார். அயராது, உழைத்து, பகைஞரின் சீற்றத்துக்கு ஆளாகிப் பாடுகளை அனுபவித்தார். இரண்டு மடல்கள் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கின்றன. மகிமைநிறை ஊழியத்தில் பேதுரு தன்னுயிரை மாய்க்கக் கொடுத்து, மன்னருக்கு முடிசூட்டினார்.

ஆகவே, பணியினைப் பொருத்தமட்டில், இறைவன் இரண்டாம் முறையும் இடமளிக்கிறார். ஒருமுறை தோல்வியுற்ற ஒருவன் ஒதுக்கித் தள்ளப்படுவதில்லை. நொறுங்குண்ட ஆவியும், நருங்குண்ட உள்ளமும் உடைய தோல்வியடைந்த வீரனின் தொங்கிய சிரசினை, கர்த்தர் தாமே இறங்கிவந்து தாங்கியே, உயர்த்திடுவார்.

பாவத்தையும், தோல்வியையும் பொறுத்துக் கொள்வதற்காக இச்செய்தி கொடுக்கப்படவில்லை. ஒருவருடைய தோல்வியினால் ஏற்படும் உள்ளம் கசப்பும், ஆழ்ந்த வருத்தமும் தொடர்ந்து அவர் தவறிழைக்காதபடி தடுத்து நிறுத்தும்.

மனந்திரும்பாத பாவி இப்புவி வாழ்விற்கு பிறகு இரண்டாவது சந்தர்ப்பத்தைத் தேவனிடத்திலிருந்து பெற்றிடுவான் என்பது இதன் பொருளன்று. அவன் பயங்கரமான மரணத்தை அடைவான் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. பாவத்தோடு மரணம் எய்துகிறவன், “மரம் விழுந்த இடத்திலேயே கிடக்கும்” என்னும் ஆக்கினையைப் பெறுவான் (பிர.11:3).

விசுவாசியின் விடுதலை

ஜனவரி 15

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13).

தேவனுடைய பிள்ளை என்னும் சுயாதினம் விலைமதிக்க இயலா நற்பேறாகும். குமாரனின் மூலமாக ஒருவன் விடுதலை அடைந்தவனாயின், அவன் உண்மையிலேயே விடுதலை பெற்றவனாவான். ஆயின், அவன் பொறுப்புமிக்க விடுதலையைப் பெற்றிருக்கிறானேயொழிய, எல்லாவற்றையும் செய்ய உரிமை பெற்றவனல்லன்.

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13).

வீட்டிலுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபெற, பிள்ளைகள் விரும்புகின்றனர். பாடத்திட்டத்தின் ஒழுங்கினின்று விடுதலைபெற இளைஞர் விரும்புகின்றனர். வேலை செய்யும் இடங்களில் இருக்கும் கட்டுப்பாட்டிற்கு எதிராகச் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் இப்படிப்பட்ட விடுதலைக்கென்று அழைக்கப்படவில்லை.

விண்மீன்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாதையிலிருந்தோ, தொடர்வண்டி தண்டவாளத்திலிருந்தோ, விமானம் அதற்கென்று கொடுக்கப்பட்ட வழியிலிருந்தோ மாறிச்செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் விபரீதமே.

ஜோவெட் என்பார், சட்டம் இல்லாதவர்களாகக் கட்டுப்பாடின்றி செயல்புரிய அனுமதிக்கப்பட்ட ஒரு ஆட்சியை நாம் எங்கும் காணமுடியாது. விடுதலை அடைந்துவிட்டோம் என்று சொல்லி எவ்வழியில் சென்றாலும் நாம் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். இசையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பாடுகிறவன் இன்னிசையை வெளிப்படுத்துகிறான். புவி ஈர்ப்பு விதிகளுக்குக் கட்டுப்பட்டு கட்டுகிறவன் அழகிய வீட்டை எழும்புகிறான். உடல் நலத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகளை அவ்வப்போது மீறுகிறவன் எத்தகைய விடுதலையை உடையவனாயிருக்கிறான் ? இக்கட்டுப்பாட்டை மீறுகிறவன் உடல் பாதிப்பையே அடைகிறான் எனத் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரமாணத்தினின்றும் விசுவாசி விடுதலை பெற்றுள்ளான் என்பது உண்மையே (ரோ.7:3). அவன் எவ்விதக் கட்டுப்பாடுமற்றவன் என்பது அதன் பொருளன்று. இப்பொழுது அவன் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறான். அன்பினாலே கட்டப்பட்டிருக்கிறான். புதிய ஏற்பாட்டில் காணும் பற்பல கட்டளைகளுக்குக் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருக்கிறான்.

விசுவாசி பாவத்தை எஜமானாகக் கொண்டிருப்பதில்லை. (ரோ.6:7, 18,22). தேவனுக்கு அடிமையாகவும், நீதிக்கு ஊழியம் செய்யவுமே அவ்விடுதலையை அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களிலிருந்தும் விசுவாசி விடுதலைபெற்றுள்ளான் (1.கொரி.9:19). எல்லாருக்கும் அடிமையாகி, அநேகரைக் கிறிஸ்துவுக்காக வெற்றிகொள்ள அவ்விடுதலையைப் பெற்றுள்ளான். துர்க்குணத்திற்குக் காரணமாகவே (1.பேது.2:16), மாம்சத்திற்கு ஏதுவாகச் செயலாற்றவோ (கலா.5:13), எவருக்கும் தடையாக விளங்கவோ (1.கொரி.8:9), கர்த்தருடைய திருப்பெயருக்குக் களங்கத்தை விளைவிக்கவோ (ரோ.2:23-24), உலகத்தில் அன்புகூரவோ (1.யோ.2:15-17), தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தவோ விசுவாசிக்கு விடுதலையில்லை.

நிறைவேற்றிவிட்டேன் என்ற எண்ணத்தையும், இளைப்பாறுதலையும் தன்னுடைய சொந்த செயலைச் செய்வதினாலே ஒரு மனிதன் பெறுவதில்லை. கிறிஸ்துவின் நுகத்தை எடுத்துக்கொண்டவனாக, அவரிடத்தில் கற்றுக்கொள்பவனே அதனைக் கண்டடைகிறான். “அவருக்குப் பணிசெய்தலே நிறைவான விடுதலை”.

நம்முடையவைகள்

ஜனவரி 14

எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23)

பரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில் தேவையற்ற முறையில் தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டனர். சிலருக்கு பவுல் நிறைவான தலைவராகத் தெரிந்தார். சிலரோ அப்பொல்லோவை விரும்பினர். இன்னும் சிலருக்கு பேதுருவே சிறந்ததொரு தலைவராகத் தெரிந்தார். இவர்கள் யாவரும் கொரிந்து பட்டணத்து விசுவாசிகள் அனைவருக்கும் உரியவர்களாயிருக்க, அவர்களில் ஒருவரை மட்டும் தெரிந்தெடுப்பது பொருத்தமற்றது என்று பவுல் கூறுகிறார். பவுல் என்னுடையவர் „ பேதுரு“ என்னுடையவர் „அப்பொல்லோ“ என்னுடையவர் என்று கூறுவதற்கு மாறாக „பவுலும், அப்பொல்லோவும், கேபாவும் என்னுடையவர்கள்“ என்றே அவர்கள் கூறியிருக்கவேண்டும்.

எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23)

இன்றைய நாட்களில் இது நமக்களிக்கப்பட்ட வார்த்தையாக இருக்கிறது. லூத்தர், வெஸ்லி, பூத், டார்பி அல்லது சபைக்குச் சிறந்த ஈவாகக் கொடுக்கப்பட்ட பலரில் ஒருவரையே நான் பின்பற்றுவேன் என்று தவறிழைக்கிறவர்களாக இருக்கிறோம். இவர்கள் யாவரும் நம்முடையவர்கள். இவர்கள் நமக்குத்தந்த வெளிச்சத்திற்காக நாம் களிகூரலாம். ஒரு மனிதனைப் பின்பற்றுகிறவர்களாக நாம் இருக்கக்கூடாது.

கர்த்தருடைய ஊழியர்கள் மட்டுமே நம்முடையவர்கள் அல்ல. இந்த உலகே நம்முடையதுதான். நாம் தேவனுடைய சுதந்திரர்களாகவும், கிறிஸ்துவின் உடன் சுதந்திரர்களாகவும் இருக்கிறோம். ஒருநாளில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு திரும்பி வந்து, இவ்வுலகை ஆளுகை செய்வோம். அதுவரை மனந்திரும்பாத மனிதர்கள் இவ்வுலகம் அவர்களுடையதே என்று கூறி, இங்கே அரசாளுவர். உண்மை அதுவன்று. அவர்கள் இவ்வுலகத்தைக் கவனித்துக் கொள்ளுகிறவர்களாகவே இருக்கின்றனர். நாம் திரும்பிவந்து ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்வரை இவ்வுலகை நடத்துகிறவர்களாக இருப்பர்.

வாழ்வு நம்முடையதாக இருக்கிறது. நாம் உயிரை உடையவர்களாயிருக்கிறோம் என்பது இதன் பொருளன்று. எல்லா மனிதர்களும் உயிர் உடையவர்களாயிருக்கின்றனர். நாம் அளவிடக்கூடா நீடுவாழ்வை உடையவர்களாயிருக்றோம் என்பதே இதன் பொருளாகும், அது நிலைபேறான வாழ்வாகும். கிறிஸ்துவின் வாழ்வையே நாம் பெற்றிருக்கிறோம். நமது வாழ்வு மாயையோ அல்லது மனம் கலங்கி கவலைகொள்கிற ஆவியோ அன்று. அது அர்த்தமுள்ளது, நோக்கமுடையது, பலன் உள்ளதாகும்.

மரணம் நம்முடையது. மரண பயம் கொண்டவர்களாக, இனிமேல் நாம் அடிமைத்தனத்திற்கு உட்பட்டவர்களல்லர். இப்பொழுதோ, நம்முடைய ஆத்துமாவைப் பரலோகத்திற்கு எடுத்துச்செல்லும் தூதனாகவே மரணம் விளங்குகிறது. ஆகவே மரணம் நமக்கு ஆதாயமாக விளங்குகிறது.

இவை யாவற்றிற்கும் மேலாக நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள், கிறிஸ்து தேவனுக்கு உரியவர். இதனைக் குறித்துச் சிந்திக்கும்போது, கை கிங் என்பார் நகைச்சுவையாய்க் கூறிய கூற்றினை நினைவுகூர்கிறேன். என்ன நற்பேறுபெற்ற பிச்சைக்காரர்கள் நாம்.

தேவதிட்டத்தில் முன்னேறுதல்

ஜனவரி 13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13)

இத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது இயற்கையே. இதனைப் படித்தவுடன், நாம் செய்ய முடியாத நூற்றுக்கணக்கான செயல்களைப்பற்றி எண்ணுகிறோம். நம்முடைய அளவிற்கு அப்பாற்பட்ட சாதனைகளை எண்ணிப்பார்க்கிறோம். இதன் காரணமாக, இவ்வசனம் நமக்கு ஆறுதலை அளிப்பதற்கு மாறாக இடர்ப்பாட்டினையே அளிக்கிறது.

நாம் என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறாரோ, அதனைச் செய்து முடிக்கும் திறனை அவர் தந்தருளுகிறார் என்பதே இவ்வசனத்தின் உண்மையான பொருளாகும். அவருடைய சித்தம் என்னும் வட்டத்திற்குள், முடியாதது என்று ஒன்றுமேயில்லை.

இந்த இரகசியத்தை பேதுரு அறிந்திருந்தார். அவர் தனது சொந்த பலத்தினால், நீரின் மேலே நடக்க இயலாது என்பதை அறிந்திருந்தார். மேலும் அவர் அதனைச் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கூறினால், தன்னால் அதைச் செய்ய முடியும் என்று அறிந்திருந்தார். “வா” என்று இயேசு கிறிஸ்து கூறிய உடனே, படகிலிருந்து இறங்கி நீரின் மேலே கர்த்தரை நோக்கிப் பேதுரு நடந்தார்.

என்னுடைய கட்டளையின்படி, பொதுவாக ஒரு மலையானது பெயர்ந்து கடலுக்குள் மூழ்கிவிடாது. கர்த்தருடைய சித்தம் நிறைவேறுவதற்கும் எனக்கும் இடையில் அந்த மலையானது நிற்குமென்றால், அப்பொழுது அம்மலையை நோக்கி, “பெயர்ந்து போ” என்று நான் கூறும் வேளையில், அது அங்கிருந்து பெயர்ந்து போகும்.

சுருங்கக் கூறின், அவருடைய கட்டளைகள், அவரால் செயலாற்றக் கூடியவையே. ஆகவே, எல்லாவிதச் சோதனையையும் தாங்க அவர் பெலன் தருவார். ஓவ்வொரு, சோதனையை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு பழக்கத்தை வெற்றிகொள்ளவும் எனக்குத் தேவையான வலிமையைத் தருகிறார். தூய சிந்தனையோடு கூடிய வாழ்க்கையைக் கொண்டிருக்கவும், தூய்மையான நோக்கங்களை உடையவனாயிருக்கவும், அவருடைய உள்ளத்திற்குப் பிரியமானதைச் செய்யவும் அவர் எனக்கு வலிமையைத் தருகிறார்.

ஏதோ ஒன்றைச் செய்து முடிக்கத் திறன் அற்றுப்போவேனேன்றால், அதாவது சரீரத்திலும், மனதிலும், உணர்ச்சியிலும் செயலற்றுப்போவேனென்றால், அவருடைய சித்தத்தைத் தவறவிட்டு, என்னுடைய சுயவிருப்பத்தை நாடுகிறவனாகச் செயல்புரிகிறேனோ என்று என்னையே நோக்கிக் கேள்விகேட்கவேண்டும். தேவனுக்கென்று பணிபுரிகிறவனாகத் தோன்றினாலும் உண்மையில் தேவனுடைய பணியைச் செய்யாதவனாக நான் இருப்பேன். அவர் வாக்களித்த வல்லமையை அத்தகைய செய்கையில் காண இயலாது.

ஆகவே, அவருடைய திட்டங்களின் நீரோட்டத்தில் நாம் முன்னேறிச் செல்கிறவராக இருக்கிறோம் என்ற அறிவு நம்மைத் திடங்கொள்ளச்செய்து, பெருமகிழ்ச்சியின் நம்பிக்கையை நமக்களிக்கும்.

பெற்றுக்கொண்ட கிறிஸ்தவன்

ஜனவரி 12
உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? (1.கொரி.4:7)

நம்மைச் சரியான அளவு அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்லதொரு கேள்வியாக இது இருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளாமல் எதையும் கொண்டிருப்பதில்லை. நம்முடைய சரீரத்திற்கும், மனதிற்கும் தேவையானவற்றைப் பிறப்பின் மூலமாகப் பெற்றிருக்கிறோம். நாம் எவ்வாறு காணப்படுகிறோம், நாம் எவ்வளவு அறிவோடு சிந்திக்கிறோம் என்பவை, நாம் பெருமைப்படக்கூடாதபடி, நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. நமது பிறப்பில் அவற்றைப் பெற்றுள்ளோம்.

நாம் அறிந்திருக்கிறவை யாவும் நமது கல்வியினால் பெற்றவையாகும். அநேக செய்திகளை நம்முடைய மனதிற்குள்ளாகப் பலர் ஊற்றியிருக்கிறார்கள். புதியதாக ஒரு சிந்தனையைப் பெற்றிருக்கிறோம் என்று எண்ணும்போதெல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஒரு நூலில் அது இருப்பதைக் காணுவோம். எமர்ஸன் என்பார், என்னுடைய மிகச் சிறந்த சிந்தனைகள் யாவும், பழங்காலத்திலிருந்து திருடப்பட்டவையே என்று கூறியுள்ளார்.

நாம் நம்முடைய திறமைகளை எவ்வாறு பெற்றிருக்கிறோம்? சில திறமைகள் நமது குடும்பத்தைச் சார்ந்தவை. அவற்றைப் பயிற்சியினாலும் நடைமுறையினாலும் வளர்த்துக்கொள்கிறோம். உண்மை யாதெனில், நம் மூலமாக ஒன்றும் தொடங்கவில்லை. அவை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

தனக்கிருக்கும் அதிகாரத்தைக் குறித்து, பிலாத்து பெருமை பாராட்டினான். ஆயின், அவனிடத்தில் கர்த்தர், „பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால் என் மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது“ என்று நினைவுபடுத்தினார் (யோ.19:11). சுருங்கக் கூறின், மனிதனுடைய ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய கிருபையாக இருக்கிறது. ஆகவேதான பவுல், எல்லாவற்றையும் நீ பெற்றுக்கொண்டவனாயிருந்தும், சிலவற்றை நீயே சாதித்ததாகப் பெருமை பாராட்டுவதேன்? என்று கேட்கிறார் (1.கொரி.4:7).

இதன் காரணமாகவே, ஹரியட் பீச்சர் ஸ்டோவ் என்பார் தன்னுடைய நூலின் மூலமாக வந்த பெருமையைத் தனக்குரியதாக ஏற்றுக்கொள்ளவில்லை, “Uncle Tom´s Cabin” என்ற நூலை நானா இயற்றினேன்? இல்லவே இல்லை. அந்தக் கதையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கர்த்தர் தாமே அதை இயற்றினார். நான் அவருடைய கரத்திலிருந்த ஒரு எளிமையான கருவியே. ஓன்றன்பின் ஒன்றாக அக்கதையின் காட்சிகளை தரிசனத்தில் கண்டேன். அதனைச் சொற்களில் வடித்தேன். அவருக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக என்றே கூறினார்.

பெற்றுக்கொள்ளாமல் எதையும் நாம் உடையவராயிருப்பதில்லை என்று தொடர்ந்து நினiவுகூர்வோமெனில், அவ்வெண்ணம் தற்புகழ்ச்சியிருந்தும், பெருமை பாராட்டுவதிலிருந்தும் நம்மைக் காக்கும். நாம் ஆற்றிய நன்மைகட்கு தேவனே காரணர் என்று அவருக்கு மகிமையைக் கொடுக்க வழிவகுக்கும். ஆகவே, ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். பராக்கிரமன் தன் பாராக்கிமத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம். மேன்மைபாராட்டுகிறவன் ப+மியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையைம் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று ஒவ்வொருவரும் கூறக்கடவோம் (எரேமி.9:23-24).